SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டம் பயன் தருமா?

2022-06-03@ 00:01:18

புதிய கல்விக்கொள்கையின்படி இந்திய மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்க வசதியாக 48 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான நடவடிக்கையை பல்கலைக்கழக மானிய குழு மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பன்முகத்திறன் பெறும் வகையில் ஒரே சமயத்தில் இரண்டு முழு நேர பட்டப்படிப்புகள் மேற்கொள்ள முடியும். அதன்படி ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது இருவேறு பல்கலைக்கழகத்திலோ படிப்பை மேற்கொள்ளலாம். இரண்டு இளநிலைப்பட்டப்படிப்பு, அல்லது இரண்டு முதுநிலை பட்டப்படிப்பு அல்லது இரண்டு பட்டயப்படிப்பு என்ற வகையில் ஒரே சமயத்தில் மேற்கொள்ள முடியும். மாணவர்கள் இரண்டு பட்டப்படிப்புகளை நேரடியாக கல்லூரிக்கு சென்று மேற்கொள்ளலாம். ஆனால் வகுப்பு நேரம் மாறுபட்டு இருக்க வேண்டும். ஒன்றை ஆன்லைனிலும், மற்றொன்றை நேரடியாகவும் மேற்கொள்ளலாம் அல்லது தொலைதூர வழியிலும் மேற்கொள்ளலாம்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த புதிய நடைமுறையை ஏற்பதும் நிராகரிப்பதும் அந்தந்த பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட விருப்பம். இந்த நடைமுறையை பல்கலைக்கழகங்கள் ஏற்க விரும்பினால் இரட்டை பட்டப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம். வகுப்பு நேரம், தேர்வுகள் இரு பட்டப்படிப்புகளுக்கும் ஒரே நேரத்தில் குறுக்கிடாமல் உரிய நடைமுறைகளை பல்லைக்கழகங்களே வகுத்துக்கொள்ள வேண்டும். இந்திய  உயர்கல்வியை சர்வதேசமயமாக்குவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் 48 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இரட்டை பட்டப்படிப்புகள் தொடர்பான யுஜிசி புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன.  இத்திட்டம் அமலுக்கு வந்தால் இந்திய மாணவர்கள் இங்கிருந்து கொண்டே வெளிநாட்டு பல்கலையில் பட்டப்படிப்பையும் படிக்க முடியும் என்பது வரவேற்கத்தக்கது. இதனால்  செலவு மிச்சமாகும் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும் இரட்டை பட்டப்படிப்பு அந்த மாணவனின் வளர்ச்சிக்கு எந்த வகையில் பயன் அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தியாவில் கோடிக்கணக்கில் பட்டதாரிகள் தங்கள் படிப்புக்கேற்ற வேலையின்றி திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இரட்டை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்து முடித்த இரண்டு பட்டப்படிப்பில் எதற்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறதோ அதில் சேர்ந்து தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்று கல்வியாளர்கள் கூறினாலும், இதனால் வேலையில்லா திண்டாட்டம் குறையாது என்று மற்றொருபுறம் கருத்து நிலவுகிறது. கல்வியின் தரம் மற்றும் சான்றிதழக்கான மதிப்பும் வேலைவாய்ப்பை பொறுத்துதான் உயர்கிறது. எனவே மாணவர்கள் இரட்டை பட்டப்படிப்பை தேர்வு செய்யும் போது வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறைகளுக்கு தேவையான பட்டப்படிப்பையோ, பட்டயப்படிப்பையோ படிக்க வேண்டும்.

அப்போது தான் அவர்களின் முயற்சி அர்த்தமுள்ளதாக அமையும். புத்தக படிப்பு என்பது வேறு, அனுபவம் என்பது வேறு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு துறை குறித்து படிக்கும் போது அவர்களது ஆர்வத்தை வளர்க்கும் தூண்டுகோலாகவே படிப்பு துணை புரியும். அதே நேரம் படிப்பை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ் பெற்று அந்த துறையில் பணிபுரிய இளைஞர்கள் கால்பதிக்கும் போது அனுபவரீதியாக முழுமை அடைகின்றனர். எனவே இதை புரிந்து கொண்டு மாணவர்கள் இரட்டை பட்டப்படிப்பு முறையை தேர்வு செய்ய வேண்டும் என்பது கல்வியாளர்களின் ஆலோசனை.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்