SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களுக்கான அரசு

2022-06-02@ 00:01:27

கடந்த அதிமுக ஆட்சியில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அரசு ஊழியர்களின் ஓய்வு  வயதானது 58ல் இருந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் 60 ஆக உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு, அரசு வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. பலர் அதிமுக அரசின் அன்றைய முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஓய்வு வயது அதிகரிப்பு எதிரொலியாக, 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 2020, மே 31ம் தேதியுடன் ஓய்வு பெற வேண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டின் இறுதிக்குள் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வளர்ச்சித்திட்டங்கள் பற்றி யோசிக்காமல், தங்களின் ‘‘வளர்ச்சித்திட்டங்கள்’’ பற்றியே யோசித்ததன் விளைவால், தமிழகத்தின் கடன் சுமை கடுமையாக அதிகரித்தது. இந்த சூழலில் தற்போது ஓய்வில் செல்பவர்களுக்கான பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பணப்பலன்களை, தமிழக அரசு வழங்க வேண்டும். இது தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை தரும். அதிமுக அரசின் குழப்பமான ஆட்சி முறையும், அறிவிப்புகளுமே இந்த நெருக்கடிக்கு முக்கியக்காரணம்.

தமிழக நிதிச்சுமையை குறைக்க முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். பல்வேறு நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதோடு, லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறவும் வழிவகை செய்து வருகிறார். அதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தி வருகிறார். முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமே, பொருளாதார சரிவை மீட்டெடுக்க முடியுமென உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். ஒரு அரசானது மக்கள் நலனில் எவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறது என்பதற்கு உதாரணம்தான் ஓய்வூதியர்களின் வாழ்நாள் சான்றிதழை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசு - இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே  கையெழுத்தாகியுள்ளது.

கடந்த காலங்களில் ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை - செப்டம்பர் மாதங்களில், தங்களது வாழ்நாள் சான்றிதழை நேரடியாக சென்று சமர்ப்பிக்க வேண்டும். இதனால் மிக வயதான, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமடைந்து வந்தனர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. சிலர் உரிய தகவல் தெரியாமல், நேரில் சென்று சான்றிதழ் சமர்ப்பிக்காமல் இருந்து வந்தனர். இதனால் அவர்களுக்கு ஓய்வூதியம் தடைபட்டது. தற்போது சுமார் 7.15 லட்சத்துக்கும் அதிக மானோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

கொரோனா காலங்களில் பலரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டே தமிழக அரசு நேரடியாகவே அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று, வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. வரும் ஜூலை - செப்டம்பர் மாதங்களிலேயே இந்த முறையானது அமலாகிறது. ஏற்கனவே, கொரோனாவால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் பல லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தற்போது மக்களின் சிரமங்களை போக்கும் வகையில் அடுத்தடுத்து திட்டங்களை செயலாற்றி, மக்களின் நன்மதிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறார்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்