SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதுகாப்பு முக்கியம்

2022-05-31@ 00:09:02

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கல்வி, மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு புதிய கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக இருந்து வருகிறது. கடந்த வாரம் டெல்லியில் டிரோன் திருவிழா நடந்தது. இதில் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள டிரோன்கள் இடம் பெற்றன. டிரோன் தொழில்நுட்ப வசதியில் நாடு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது வரவேற்க வேண்டியது. 2030ம் ஆண்டுக்குள் இந்தியா டிரோன்களின் மையமாக திகழ வாய்ப்புள்ளது. முக்கியமாக, நாட்டின் எல்லை கண்காணிப்பு பணியில் டிரோன் மிக பயனுள்ளதாக இருக்கிறது. எல்லையில் வெளியாட்கள் நடமாட்டம் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலை டிரோன் மூலம் எளிதாக கண்காணிக்க முடியும். மேலும் நவீன டிரோன் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தவும் முடியும்.

நாடு கடந்து எதிரியின் கண்ணுக்கு தென்படாமல், எதிரியை சுட்டு வீழ்த்தும் வகையில் அதிநவீன டிரோன்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த வகையான டிரோன்களை அதிகளவில் இந்தியாவில் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக, போர் நேரங்களில் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தலாம். எதிரியின் இருப்பிடத்தை கண்டறிந்து தாக்குதல் நடத்தவும் டிரோன் பயன்படும். அதிநவீன தொழில்நுட்பத்தில் உள்ள டிரோன்கள் பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய பங்காற்றும். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களை டிரோன் மூலம் கண்காணித்து குற்றச்செயல்களை தடுக்க பயனுள்ளதாக இருக்கிறது.

திருவிழா காலங்களில் பாதுகாப்பு பணியில் டிரோன் முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது. இதனால் காவல் துறையினருக்கு டிரோன் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. பாதுகாப்பு பணி மட்டுமல்லாமல், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகுந்த நகரங்களில் மருத்துவ உபகரணம் உள்ளிட்ட பொருட்களை மற்ற இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுகிறது. இதனால் விரைவாக மருந்து பொருட்கள் கிடைக்கிறது.

வேளாண் துறையில் டிரோன் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நிலங்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் டிரோனின் செயல்பாடுகள் வரவேற்க வேண்டியதாகும். ஆனால், டிரோன் விஷயத்தில் கடிவாளம் போட வேண்டியது மிக அவசியம். பலரிடமும் அதிநவீன டிரோன் கிடைத்து விட்டால், அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடும். ஆன்-லைனில் விற்கப்படும் டிரோன்களை வாங்கும் நபர்கள் குறித்த முழு விவரங்களை தெரிந்த பிறகே விற்பனை செய்ய வேண்டும்.

டிரோன் வாங்குவதில் சில நிபந்தனைகள் இருக்க வேண்டியது கட்டாயம். என்ன பயன்பாட்டிற்காக டிரோன் வாங்கப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் எளிதாக டிரோன் பறந்து செல்லக் கூடாது. இது பாதுகாப்பு விஷயத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். முக்கியமாக, டிரோன் தடுப்பு சாதனங்கள் அதிகளவு உருவாக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அதிநவீன புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டிரோன்கள் கண்டிப்பாக தேவை. ஆனால், அனைத்து தரப்பினருக்கும் எளிதாக கிடைத்து விட்டால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகை செய்து விடும். டிரோன்கள் வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும் விதிமுறை வகுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்