விழிப்புணர்வு அவசியம்
2022-05-29@ 00:59:02

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், படிப்படியாக இந்தியா உட்பட மற்ற நாடுகளிலும் வேகமாக பரவத் தொடங்கியது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்திருக்கின்றனர். அவ்வளவுதான். மற்றபடி கொரோனா இன்னும் இந்தியாவை விட்டு விலகவில்லை. அந்த வரிசையில் தற்போது உலக நாடுகளை குரங்கு அம்மை அச்சுறுத்தி வருகிறது.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின் உட்பட 20 நாடுகளில் 200க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. குழந்தைகளை அதிகம் தாக்குகிறது; ஓரின சேர்க்கையாளர்களையே அதிகம் பாதிக்கிறது என்றெல்லாம் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு இரட்டை இழை டிஎன்ஏ வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இந்த வைரஸ் 2 பிரிவுகளாக மத்திய ஆப்ரிக்க நாடுகளிலும், மற்றொரு பிரிவு மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு சில நாடுகளில் இரண்டு பிரிவுகளுமே காணப்படுகின்றன.
கொரோனா போல அச்சுறுத்தும் நோயல்ல என்றாலும், சமூக பரவலாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, குரங்கு அம்மை காய்ச்சலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முனைப்பு காட்ட வேண்டும். எதிர்க்கட்சிகள் எச்சரித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு காட்டிய அலட்சியத்தாலேயே இந்தியாவில் பரவல் அதிகரித்தது.
தற்போதைய சூழலில் இந்தியாவில் குரங்கு அம்மை காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், பெரியம்மைக்கான தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். எளிதில் பரவும் வாய்ப்புள்ளதால், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். இதுவரை இந்நோயால் பெரிய அளவில் யாரும் பலியாகவில்லை. உயிரிழக்கும் வாய்ப்பும் குறைவுதான் என்றாலும், தரமற்ற சிகிச்சையை பெறும் 10 பேரில் ஒருவர் இறக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் தற்போது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கு அம்மை சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டங்களில் திமுக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கையின் மூலமாகவே, தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா குறைந்தது. எனவே, ஒன்றிய அரசு விழிப்புணர்வு பிரசாரங்கள், தடுப்பூசி தேவைகள் போன்றவற்றை உணர்ந்து, குரங்கு அம்மையை இந்தியாவில் பரவாமல் தடுக்கும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ஆரோக்கியமான சமுதாயம்
தமிழகம் ஒளிர்கிறது
தமிழர் பெருமை
வழக்காடு மொழி தமிழ்
கடன் என்னாகும்...?
ரஷ்ய ஆயுதம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!