தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகளை ஒப்படைக்கோரி வழக்கு மைனர் பெண் குழந்தைகளின் தேவை தாய்க்குத்தான் தெரியும்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
2022-05-28@ 00:44:27

சென்னை: மைனர் பெண் குழந்தைகளின் தேவை என்ன என்பது தாய்க்குத்தான் தெரியும் என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், தந்தையிடம் வளரும் மைனர் பெண் குழந்தைகளை நீதிமன்றத்திலிருந்தே தாய் அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டது. காவல்துறையில் தலைமை காவலராக சென்னையில் பணியாற்றி வரும் சுதாவுக்கும், மின்வாரியத்தில் பணியாற்றி வரும் கண்ணனுக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) கடந்த 2002ல் திருமணமணமானது. இவர்களுக்கு 16 மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் மனமுவந்து கடந்த 2007ல் விவாகரத்து பெற்றனர். காவல்துறையில் பணியாற்றுவதால் சுதாவால் மகள்களை சரியாக கவனிக்க முடியவில்லை. குழந்தைகளை அவரது தாய் கவனித்து வந்தார். இருப்பினும், இரண்டு மகள்களையும் கண்ணன் கட்டாயமாக தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது சகோதரியின் அரவணைப்பில் குழந்தைகள் படித்து வந்தனர்.
இந்நிலையில், தனது குழந்தைகளை பார்க்க அனுமதிக்க கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் சுதா மனு தாக்கல் செய்தார். வார இறுதியில் குழந்தைகளை பார்க்க முதலில் அனுமதி அளித்த நீதிமன்றம் இறுதி உத்தரவில் உரிய காரணங்கள் இல்லை என்று கூறி சுதாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தனது குழந்ைதகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சுதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தனது குழந்தைகளை அவரது தந்தை சரியாக கவனிக்கவில்லை. பெண் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு உள்ள சிரமங்களை கவனிக்க தாயால் மட்டுமே முடியும். எனவே, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள், யாருடன் போக விருப்பப்படுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த குழந்ைதகள் தாயிடம் போக விரும்புவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மைனர் பெண் குழந்தைகளின் தேவைகளை ஒரு தாயால் மட்டுமே நிறைவேற்ற முடியும். இதை குடும்பநல நீதிமன்றம் கவனிக்க தவறியதால் கடந்த 6 ஆண்டுகளாக அந்த பெண் குழந்தைகள் மிகுந்த மன உளைச்சலுக்கும் தொந்தரவுக்கும் ஆளாகியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணைகூட உயர் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் இருந்துள்ளது. விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு தொடர்ந்து தொந்தரவு ஏற்படும். எனவே, இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.
பெற்றோரின் சரியான வழிகாட்டுதல் மற்றும் நடத்தைகளால்தான் குழந்தைகள் சரியான முறையில் வளர முடியும். இந்த வழக்கை பொறுத்தவரை குழந்தைகள் இருவரும் தங்களது தாயுடன்தான் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, குழந்தைகள் இருவரையும் இந்த நீதிமன்றத்திலிருந்து அவரது தாய் அழைத்து செல்லலாம். அந்த குழந்தைகளின் தந்தை அவர்களின் கல்வி சான்றிதழ்கள், ஆவணங்கள், உடமைகளை உடனடியாக தாயிடம் வழங்க வேண்டும். தந்தையால் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை மனுதாரரான தாய் அணுகலாம் என்று உத்தரவிட்டனர்.
Tags:
தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகளை ஒப்படைக்கோரி வழக்கு மைனர் பெண் குழந்தை உயர் நீதிமன்றம் பரபரப்புமேலும் செய்திகள்
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நெல்லை கண்ணன் மறைவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல்..!
ஆவடி தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை
மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...