SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் ஜோ பைடனுடன் மோடி பேச்சுவார்த்தை: சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க இந்தோ-பசிபிக் கடலில் கூட்டு ரோந்து செல்ல முடிவு

2022-05-25@ 00:02:36

டோக்கியோ: ஜப்பானில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இம்மாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் கடல் பகுதிகளில் குவாட் உறுப்பு நாடுகள் கூட்டு ரோந்து மேற்கொள்வதை அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளை மிரட்டும் சீனாவின் அதிகாரப் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.சீனாவின் பொருளாதாரம் மற்றும் ராணுவ பலத்திற்கு பதிலளிக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கின. இதன் 2வது உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. 2 நாள் நடந்த இம்மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, நேற்று முன்தினம் அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து,  குவாட் உச்சி மாநாடு நேற்று நடந்தது.

இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிடோ, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனிஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர், மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை குவாட் பின்பற்றுகிறது. நன்மைகளுக்கான சக்தி என்ற குவாட் அமைப்பின் பிம்பம் மேலும் வலுப்பெற்று வருகிறது. மிக குறுகிய காலத்தில் குவாட், உலக அரங்கில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குவாட் அமைப்பு மூலம் எங்களின் பரஸ்பர நம்பிக்கை சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அனைவைரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துகிறது. இது நமதுஅனைவரின் பொதுவான நோக்கமாகும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, மாநாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகம், ரஷ்யா-உக்ரைன் போரால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் தாக்கங்கள், காலநிலை மாற்றம், தொழில்நுட்பம், தீவிரவாதம், உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து 4 நாடுகளின் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர், அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:குவாட்டின் சமீபத்திய நடவடிக்கைகள், இந்த அமைப்பு நன்மைக்கான சக்தி என்பதை நிரூபிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. கொரோனா உள்ளிட்ட தீவிரமான உலகளாவிய சவால்களின் போது, பிராந்தியத்திற்கு உறுதியான நன்மைகளை கொண்டு வரும் அர்ப்பணிப்புடன் குவாட் அமைப்பு செயல்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நிலையை மாற்ற முயலும் எந்தவொரு ஆத்திரமூட்டும் மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மேலும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் ராணுவத்தை குவித்தல், கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களின் அபாயகரமான பயன்பாடு, பிற நாடுகளின் கடல் வளத்தை சுரண்டி அவர்களை சீண்டும் நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. (இவை அனைத்தும் சீனா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளாகும்).

கடல்சார் கண்காணிப்பை வலுப்படுத்த, இந்தோ-பசிபிக் கடல்வழி கள விழிப்புணர்வு (ஐபிஎம்டிஏ) திட்டத்தை அமல்படுத்துகிறோம். இதன் மூலம், இந்தோ-பசிபிக் பிராந்திய கடல் பகுதிகளில் குவாட் உறுப்பு நாடுகள் முழு ரோந்து பணியில் இணைந்து செயல்பட அனுமதி வழங்கப்படும். மேலும், மனிதாபிமான மற்றும் இயற்கை பேரழிவுகளில் பரஸ்பர உதவிகள் புரியவும், சட்ட விரோதத்தை எதிர்த்து போராடவும் பிராந்திய கூட்டு நாடுகளுடன் இணைந்து செயல்பட வழிவகுக்கப்படும். கடல்சார் கண்காணிப்புக்கு தேவையான தொழில்நுட்பங்களும் பகிர்ந்து கொள்ளப்படும். இது, பிராந்தியத்தின் வளர்ச்சியையும், அமைதியையும் உறுதிப்படுத்தும்.குவாட் நாடுகள் இடையே பொது மற்றும் தனியார் முதலீட்டு இடைவெளிகளைக் குறைக்க நெருக்கமாக பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதை அடைய, குவாட் அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய-பசிபிக் பகுதியில் ரூ.3.75 லட்சம் கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்பு உதவி மற்றும் முதலீட்டை செய்ய உறுதி எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தின் பல தீவு நாடுகளும் கடன் பிரச்னையை சந்திக்கின்றன. அதை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், கடன் பிரச்னையை சமாளிக்க தேவையான நாடுகளின் திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கண்டிக்கிறோம். எந்த அடிப்படையிலும் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். பயங்கரவாததத்தை ஆதரிப்பவர்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். 26/11 மும்பை மற்றும் பதான்கோட் உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு மரியாதை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, குவாட் உச்சி மாநாடு முடிந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்றிரவு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

சீனா, ரஷ்யாவுக்கு பாடம் கற்பித்த மோடி...- பைடன் புகழாரம்
குவாட் மாநாட்டிற்கு முன்னதாக, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பாதுகாப்பு துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பொருளாதார ஈடுபாட்டை ஊக்குவிப்பது, உலகளாவிய சுகாதாரம், தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கும் இரு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு உண்மையிலேயே நம்பிக்கை அடிப்படையிலான நட்புறவாகும். உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ‘நன்மைக்கான சக்தி’யாக இந்த நட்பு தொடரும். இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தாகி உள்ள முதலீட்டு ஊக்கத்தொகை ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகள் மேலும் வலுவடைவதை நாம் காண முடியும்.

இந்தியா, அமெரிக்கா இடையேயான கொரோனா தடுப்பூசி ஒத்துழைப்பு வரும் 2027ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் இந்தியாவில் முதலீடுகளை செய்ய அமெரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,’’ என்றார்.கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஜனநாயக முறையில் இந்தியா வெற்றிகரமாக கையாண்டு உள்ளதாகவும், இதற்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.  இந்த விஷயத்தில் அடக்குமுறையை கையாளும் சீனா தோல்வி அடைந்ததாகவும், இதன் மூலம் ஜனநாயக முறை மூலம் எதையும் வழங்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ள பிரதமர் மோடி, சீனா மற்றும் ரஷ்யா போன்ற எதேச்சதிகார சக்திகளால் மட்டுமே உலகை சிறப்பாக கையாள முடியும் என்ற கட்டுக்கதையை முறியடித்துள்ளார் என்றும் பைடன் கூறினார்.

மேலும், பஹ்ரைன் ஒருங்கிணைந்த ராணுவ படைகள் குழுவில் இணை உறுப்பினராக இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. 34 நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பு கடல் வழியாக சட்டவிரோத ஏற்றுமதிகளை தடுக்கவும், போதை பொருள் கடத்தலை தடுக்கவும், சந்தேகத்திற்கு இடமான கப்பல்களை நிறுத்தவும், இடைமறிக்கவும், ஆய்வு செய்யும் கூட்டு நடவடிக்கை எடுக்கும்.

ஜப்பான் வானில் அத்துமீறிய சீன, ரஷ்ய போர் விமானங்கள்
குவாட் மாநாடு நடைபெற்ற சமயத்தில், ஜப்பான் கடல் பகுதிக்கு மேல் சீன, ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக அதிர்ச்சிகரமான தகவலை ஜப்பான் பிரதமர் கிஷிடோ வெளியிட்டார். சீனா, ரஷ்யாவுக்கு எதிராக குவாட் மாநாட்டில் கடும் கண்டனங்கள் விடுக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு போர் விமானங்கள் அத்துமீறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை சீனா, ரஷ்யா இரு நாடுகளும் மறுத்தன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சீனாவின் எச்-6கே போர் விமானமும், ரஷ்ய டியு-95எம்எஸ் போர் விமானமும் ஜப்பான் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் மேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் ரோந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இது சர்வதேச விதிகளுக்கு உட்பட்டது. நாங்கள் வேறு எந்த நாட்டின் வான்வெளியிலும் அத்துமீறவில்லை’ என கூறி உள்ளது.

* மிக குறுகிய காலத்தில் குவாட், உலக அரங்கில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
* பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கண்டிக்கிறோம்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்