அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 4 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு; சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்குவோம்; ஜப்பானில் பிரதமர் மோடி வலியுறுத்தல்; சீனா மீது குற்றச்சாட்டு
2022-05-23@ 19:36:06

டோக்கியோ: அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 4 நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜப்பான் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று இந்தோ - பசிபிக் கூட்டமும், நாளை ‘குவாட்’ உச்சி மாநாடும் நடக்கிறது.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கிற ‘குவாட்’ அமைப்பின் 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்திய விஷயங்கள், பரஸ்பர ஆர்வம் உள்ள உலகளாவிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் ஆகியோர் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளனர். இதற்காக பிரதமர் மோடி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவர் இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். அவருக்கு தூதரக அதிகாரிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி, டோக்கியோவில் உள்ள நியூ ஓட்டானி ஓட்டலுக்கு சென்றார். அவரை வரவேற்க இன்று காலை ஓட்டலுக்கு வெளியே வௌிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகள், ஜப்பானியர் உள்ளிட்டோர் திரண்டிருந்தனர். அவர்கள், ஹர் ஹர் மோடி, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அவர்களுடன் சிறிது நேரம் பேசினார். தொடர்ந்து இந்திய - பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் நிகழ்வில் (ஐபிஇஎப்) இன்று கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, ஜப்பானின் உயர்மட்ட வணிகத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இன்று மாலை அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்திக்கிறார். அப்போது இருதரப்பு உறவு, இந்திய - பசிபிக் பொருளாதார கட்டமைப்பில் இந்தியா இணைதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதுகுறித்து ஜப்பானுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறுகையில், ‘இந்தோ - பசிபிக் பகுதியின் வளர்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பலப்படுத்துதல் குறித்து பேசப்படும். நாளை நடைபெறும் குவாட் சந்திப்பில் இந்தியாவும் பங்கேற்கிறது. அப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்து மீண்டும் ஆலோசிக்கப்படும். குவாட் அமைப்பை சீனா தனது எதிர் சக்தியாக பார்க்கிறது. ஆனால், குவாட் அமைப்பு எந்த நாட்டிற்கும் எதிராக செயல்படாது. நேர்மறையான, ஆக்கபூர்வமான அமைப்பாக செயல்படும்’ என்றார்.
முன்னதாக ஜப்பான் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இணைந்து செயல்படுகிறது. பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதிக்கு இரண்டு ஜனநாயக நாடுகளும் முக்கிய தூண்களாக இருக்கும். இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீனா, பல நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உரிமை கோரினாலும், சீன அரசு சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் முழுவதையும் உரிமை கொண்டாடுகிறது. தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளையும், ராணுவ தளங்களையும் சீனா கட்டியுள்ளது. கிழக்கு சீனக் கடல் பகுதி தொடர்பாக ஜப்பானுடன் சீனா மோதலில் ஈடுபட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவன்: பிரதமர் மோடியை ஓட்டலில் வரவேற்றவர்களில், ரித்சுகி கோபயாஷி என்ற ஜப்பான் சிறுவனும் இருந்தான். அந்த சிறுவன், இந்தி மொழியில் பிரதமரிடம் பேசினான். மோடியிடம் ஆட்டோகிராப் வாங்க வந்ததாக கூறினான். பின்னர் அந்த சிறுவன் இந்தியில் தங்கு தடையின்றி பேசியதை பார்த்து ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி, ‘இவ்வளவு நன்றாக இந்தி பேச எங்கே கற்று கொண்டாய்? உனக்கு இந்தி நன்றாக தெரியுமா?’ என கேட்டார். இதன்பின்னர் சிறுவன் வைத்திருந்த அட்டையை வாங்கிய மோடி, அதில் தனது கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு சென்றார். பிரதமர் மோடியிடம் பேசிய ஜப்பான் சிறுவன் ரித்சுகி, ‘எனக்கு இந்தி அதிகம் பேசத் தெரியாது; ஆனால் மற்றவர்கள் பேசுவது புரியும். நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் (மோடி) நான் காகிதத்தில் எழுதியிருந்த செய்தியை வாசித்து பார்த்தார். அவரிடம் இருந்து கையெழுத்தும் வாங்கி கொண்டேன்’ என கூறினான்.
மேலும் செய்திகள்
மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அமெரிக்க நடிகை மரணம்
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.46 கோடியை தாண்டியது.! 64.53 லட்சம் பேர் உயிரிழப்பு
20 நொடிகளில் 15 முறை குத்திக்குத்து சல்மான் ருஷ்டிக்கு செயற்கை சுவாசம்: கண்பார்வை, பேச்சு பறிபோகும் அபாயம்
டிரம்ப் பங்களாவில் 11 ரகசிய ஆவணம்: எப்பிஐ சோதனையில் சிக்கின
முதல் முறையாக இந்தியாவில் பயிற்சிக்கு பாக். ராணுவம் வருகை
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி: தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!