SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பு குழுவை அறிவித்த ஓரிரு நாளிலேயே கோதுமை ஏற்றுமதிக்கு தடை ஏன்?..விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையா?

2022-05-21@ 00:13:45

சென்னை:  ‘இந்தியாவில்  உள்ள 140 கோடி பேருக்கு  வழங்கும் அளவுக்கு உணவு தானியம் உள்ளது. எனவே, உலக வர்த்தக அமைப்பு இன்று அனுமதி அளித்தால், இந்தியா நாளை முதலே உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யத் துவங்கும்’ - கடந்த ஏப்ரல் 11ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோபைனிடம் பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் திருத்தமாக கூறிய வார்த்தைகள்தான் இவை. இவ்வளவு ஏன்?... கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மொராக்கோ, துனிசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

ஆனால், இந்த குழுவை அனுப்புவதாக தெரிவித்த ஓரிரு நாட்களிலேயே வெளியான ஒன்றிய அரசின் அறிவிப்பு, விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டுள்ளது.  வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் கடந்த வாரம் வெளியிட்ட கோதுமை ஏற்றுமதிக்கான தடைதான் அந்த  அறிவிப்பு. அதில், நாட்டின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை நிர்வகிக்கவும், உள்நாட்டு சந்தையில் கோதுமை விலையை கட்டுக்குள் வைப்பதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகும் முன் ஏற்றுமதிக்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் தேவைக்கேற்ப கோதுமை ஏற்றுமதி மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. பின்னர் சில தளர்வுகளையும் அறிவித்தது.

கடந்த மார்ச் மாதம் அபெடா ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். அதில், கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுப்பதாக, ரயில்வே, மற்றும் துறைமுக அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். தடையற்ற கோதுமை ஏற்றுமதிக்கு உதவும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரையும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா) கேட்டுக் கொண்டது.

சமீபத்திய புள்ளி விவரத்தின்படி, கடந்த 2021-22 ஏப்ரல் முதல் ஜனவரி வரை 1,742 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த 2020-21ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட 387 சதவீதம் அதிகம். கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா 2,352.22 மில்லியன் டாலர் அளவுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது.

எகிப்துக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தையும், துருக்கி, சீனா, போஸ்னியா, சூடான், நைஜீரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதியை தொடங்குவதற்கான ஆலோசனையும் நடத்தப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் தடை உத்தரவு, மேற்கண்ட முயற்சிகளுக்கு எல்லாம் முட்டுக்கட்டை போடுவது போன்ற ஒரு நடவடிக்கையாக அமைத்து விட்டது.  பண வீக்கத்தை அதாவது, விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் அரசின் தடையும், பின்னர் அறிவித்த பகுதியளவு தளர்வுகளும் விவசாயிகளுக்கு பலன் தராது. வியாபாரிகளுக்குதான் லாபம் என விவசாயிகள் தரப்பில் கூறுகின்றனர்.

 இந்தியா தற்போது அண்டை நாடுகளுக்கு கோதுமையை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. ஏற்றுமதியில் சுமார் 54 சதவீதத்துக்கும் அதிகமாக வங்கதேசத்துக்கு செல்கிறது. ஏமன், ஆப்கானிஸ்தான், கத்தார் மற்றும் இந்தோனேஷியாவின் கோதுமை சந்தையிலும் இந்தியா தற்போது நுழைந்துள்ளது. மேலும், விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்து ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவு, நுகர்வோருக்கு சாதகமானதாக கருதப்படும் அதே நேரத்தில், விவசாயிகளுக்கு எதிரானதாகி விட்டது என்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், உக்ரைன் போரை தொடர்ந்து, இந்திய கோதுமைக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் முதல் முறையாக, அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதலாக கிடைக்க இது வழி வகுத்துள்ளது. உதாரணமாக, விதர்பாவில் ஒரு குவிண்டால் கொள்முதல் விலை ரூ.2,500ஐ எட்டியது. தடைக்கு பின்னர் சில தளர்வுகளை அரசு அறிவித்தது, ஏற்றுமதியாளர்களுக்குதான் சாதகமாக முடியும். அதாவது, ஏற்கனவே விவசாயிகளிடம் வாங்கி இருப்பு வைத்த கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு இது வழி வகுத்துள்ளது, என்றார்.

புதிய வேளாண் சட்டம் எப்படி விவசாயிகளுக்கு எதிராக அமைந்ததோ, அதே போன்று  இந்த தடையும் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாடுதான் என எதிர்க்கட்சிகளும்  கொந்தளித்துள்ளன. விவசாயிகளும், தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தும்  வாய்ப்பை ஒன்றிய அரசு தடுத்திருப்பதாக கூறுகின்றனர். நாட்டின் கோதுமை உற்பத்தி 111.32 மில்லியன் டன்களாக இருக்கும் என கணித்திருந்த அரசு, தற்போது அதனை 106 மில்லியன் டன்களாக குறைத்துள்ளது. இதுபோல், தானியங்களுக்கான ஒட்டு மொத்த பண வீக்கம் 5.96 சதவீதமாக உள்ள நிலையில், கோதுமைக்கான பண வீக்கம் 9.59 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியை தடை செய்யும் அளவுக்கு இதனை ஒரு பாதிப்பாக கருத முடியாது என்பது சந்தை நிபுணர்களின் வாதமாக உள்ளது.

ஒன்றிய அரசின்  சொல்லும் செயலும் வெவ்வேறாக இருப்பதை இதுபோன்ற செயல்பாடுகள் காட்டுவதாக  அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய்  கிடைக்கச் செய்வதாக உறுதி அளித்துள்ள ஒன்றிய பாஜ அரசு, தனது வாக்குறுதியை  நிறைவேற்றும் வகையில், விவசாய நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, பல உலக நாடுகள் தங்கள் உணவுத்தேவைக்காக இந்தியாவின் கோதுமை ஏற்றுமதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், ஒன்றிய அரசு வெளியிட்ட இந்த தடை அறிவிப்பு, விவசாயிகளுக்கு மட்டுமின்றி அந்த நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயுமாறு, கடந்த மாதம்தான் மாநிலங்களுக்கு இந்திய உணவு கழக தலைவர் ஆதிஷ் சந்திரா  வேண்டுகோள் விடுத்திருந்தார். உலக அளவில் கோதுமை உற்பத்தியில் சீனாவுக்கு (134 மில்லியன் டன்) அடுத்து 2வது இடத்தில் இந்தியா (107 மில்லியன் டன்) உள்ளது. தடைக்கு ஐநா கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளபோதிலும் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதியும்...  ஒப்பீடும்....
கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளில், கடந்த 2021-22 ஆண்டு மதிப்பீடு (ஜூலை - ஜூன்) மற்றும் 2022-23 ஆண்டுக்கான அமெரிக்க வேளாண் துறை, பொருளாதார ஆய்வு, வெளிநாடுகளின் வேளாண் பொருள் ஏற்றுமதி புள்ளி விவரங்களின்படி ஒரு ஒப்பீடு. (மில்லியன் டன்களில்)

நாடு            2021-22    2022-23
உலக அளவில் மொத்தம்    201.6    205.6
ரஷ்யா            33    39
ஐரோப்பிய யூனியன்    31    36
ஆஸ்திரேலியா        27    25
கனடா            15.5    24
அமெரிக்கா        21.8    21
அர்ஜென்டினா        16    14
உக்ரைன்            19    10
கஜகஸ்தான்        7    8
இந்தியா            10    8
துருக்கி            6.5    6.8


இந்திய கோதுமை எந்த நாடுகளுக்கு செல்கிறது?
இந்தியாவில் இருந்து அதிகமாக கோதுமை இறக்குமதி செய்யும் நாடு வங்கதேசம்தான். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த பிப்ரவரி வரையிலான புள்ளி விவரங்களின்படி,  இந்தியாவின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் 55.9 சதவீதம் வங்கதேசத்துக்குதான் செல்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளன. இந்திய கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகள். நாடு வாரியாக சதவீதத்தில்:

வங்கதேசம்  55.9%
இலங்கை 7.9%
யுஏஇ 6.9%
இந்தோனேஷியா 5.9%
ஏமன் 5.3%
பிலிப்பைன்ஸ் 5.1%
நேபாளம் 3.8%
கொரியா 2.4%
கத்தார் 1.7%
பிற நாடுகள் 5.1%

இந்தியாவின் பங்களிப்பு
உலக அளவிலான கோதுமை ஏற்றுமதியில் இந்தியாவின்  பங்களிப்பு ஒரு சதவீதத்துக்கும் கீழ்தான். ஆனால், உலக நாடுகளின் தேவை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இது அதிகரித்து வந்துள்ளது. கோதுமை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 2016ல் 0.14 சதவீதம்தான். இது 2020ல் 0.54 சதவீதமாக ஆனது. கோதுமை உற்பத்தியில் கடந்த 2020ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலக உற்பத்தியில் 14.14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. தடைக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் ரூ.1,363 கோடி, ஏப்ரலில் ரூ.3,642 கோடி மதிப்பிலான கோதுமை ஏற்றுமதியாகியுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

பலன் தரும் நேரத்தில் பறிக்கப்பட்ட வாய்ப்பு
ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆராய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக இருந்த, சேத்காரி சங்கட்னா தலைவர் அனில் கன்வட் கூறுகையில், ‘‘உக்ரைன் போரால் கோதுமை கொள்முதல் விலையாக குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.2,600 வரை கிடைத்தது. தரமான கோதுமைக்கு அகமத் நகரிலேயே குவிண்டாலுக்கு ரூ.3,000 தரப்பட்டது. கடந்த வாரம் இதற்கு கிடைத்த கொள்முதல் விலை ரூ.1,700தான்’’ என்றார். தற்போது விவசாயிகளுக்கு சர்வதேச சூழலால் நல்ல பலன் கிடைக்கும் சமயத்தில் அதனை கெடுப்பது போல அரசின் தடை அமைந்து விட்டது என்பது, கோதுமை விவசாயிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

அரசே ஏன் அதிகம்  வழங்கக்கூடாது
இந்தியாவில் விளைவித்த கோதுமைக்கு வெளிநாடுகளில் தேவை அதிகம் இருப்பதால்தான், சிறிதாவது அதிக விலை கிடைக்கிறதே என விவசாயிகள் ஏற்றுமதியாளர்களிடம் விற்கின்றனர். அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டாலுக்கு ரூ.2,015 தான் நிர்ணயித்துள்ளது. அரசே தற்போதுள்ள ஆதரவு விலையை விட கூடுதலாக ரூ.200 முதல் ரூ.250 நிர்ணயிக்கலாம். அதை விடுத்து, பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் ஏற்றுமதிக்கான வழியையும் அடைத்து விட்டால் என்ன நியாயம்?. கட்டுப்பாடு என்ற பெயரில், விவசாயிகளுக்கு கிடைக்கும் பலனை அரசே பறிக்கலாமா?. விவசாயிகள் பலன் பெறுவதற்கு மாற்று வழியை ஏற்படுத்த வேண்டாமா  என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். இது விவசாயிகளை ஊக்குவித்து, அடுத்த ஆண்டில் அதிக பரப்பளவில் கோதுமை சாகுபடி செய்ய வழிவகுக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிக்கு கிடைப்பது எவ்வளவு
கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு விதித்த தடையை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் வியாபாரிகள் 2 நாட்கள் சந்தையை மூடி போராட்டம் நடத்தினர். கோதுமை கொள்முதல் குறித்து ராஜஸ்தான், டெல்லி, குஜராத் மாநிலங்களில் உள்ள ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘‘விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த அளவு கோதுமையைத்தான் கொள்முதல் செய்கிறோம். அரசு கருதுவது போல், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு அனைத்தையும் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்வதில்லை. சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு குவிண்டால் கோதுமை  ரூ.2,100 என விவசாயிகளிடம் இருந்து  கொள்முதல் செய்யப்படுகிறது.

இது அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலையான குவிண்டாலுக்கு ரூ.2,015ஐ விட சற்றுதான் அதிகம்’’ என்றனர். அரசின் முடிவால் இந்த வார துவக்கத்தில் ராஜஸ்தான், குஜராத், டெல்லி மண்டிகளில் ஒரு குவிண்டால் விலை ரூ.2,325ல் இருந்து ரூ.2,150 ஆக குறைந்து விட்டது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபோல் இந்தியாவிலேயே அதிகமாக கோதுமை கொள்முதல் செய்யும் உத்தரபிரதேசத்தில் உள்ள சித்தாபூர் மண்டியில் ஒரு குவிண்டால் நேற்று முன்தினம் ரூ.2,020க்குதான் கொள்முதல் செய்யப்பட்டது. பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் கோதுமை கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி விட்டதால், சந்தைக்கு கோதுமை வரத்தும் குறைவாக இருக்கிறது என, மத்திய பிரதேசம் சிகோர் மண்டியில் உள்ள ஒரு வியாபாரி தெரிவித்தார்.

இறக்குமதி செய்யும் நாடுகள்
கடந்த 3 ஆண்டுகளில் கோதுமை அறுவடை சீசனில் உள்ள புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில், எகிப்து தான் அதிக கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக இந்தோனேஷியா, சீனா, துருக்கி, அல்ஜீரியா ஆகியவை உள்ளன. இதுபோல் வங்கதேசம், மொராக்கோ, நைஜீரியா, பிரேசில் நாடுகளும் கோதுமையை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன.

சீனா ஆதரவு
இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை அறிவிப்புக்கு சீன பத்திரிகை ஒன்று வரவேற்பு தெரிவித்துள்ளது.  அதில், ஜி7 நாடுகள் தங்களிடம் உள்ள கோதுமையை ஏன் ஏற்றுமதி செய்யக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

சர்வதேச சந்தையில் நம்பகத்தன்மை பறிபோகும் அபாயம்
சர்வதேச நாடுகளின் முக்கியச் சந்தையாக இந்தியா உள்ளது. அதேநேரத்தில், உணவு தானிய ஏற்றுமதியில் இந்தியாவுக்கும் சிறப்பான இடம் உள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகளின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. இந்த தருணத்தில், ஏற்றுமதி அதிகரிப்பதற்கான முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் நடத்திய இந்தியா, ஒரு சில மாதங்களிலேயே இதற்கு எதிரான நிலைப்பாடாக தடையை அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி கொள்கையின் நம்பகத்தன்மையை போக்கிவிடும் அபாயம் உள்ளது என, பொருளாதார நிபுணர்களும், சந்தை நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இதனை உணர்ந்து, திடீர் முடிவுகளை எடுக்காமல் துறை நிபுணர்களுடனும், வேளாண் வல்லுநர்கள், விவசாயிகளுடன் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். சர்வதேச நாடுகளின் தேவையை உணர்ந்தும் இந்தியா தற்போது கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இதன்பிறகுதான் ‘தடை நிரந்தரமானது அல்ல’ என அறிவிப்பு வெளியானது.

2006ல் இருந்து கற்க வேண்டிய பாடம்
கடந்த 2006-07ல் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்திய உணவு கழக கொள்முதல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகளிடம் இருந்து தனியார் வர்த்தகர்கள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 2006-07 (ஏப்ரல்- மார்ச்)-ல் 9.23 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமை, அதாவது தேவையை விட மிககுறைவாக இந்திய உணவு கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அரசிடம் இருப்பு 2 மில்லியன் மெட்ரிக் டன் குறைந்தது. மேலும், இதற்கு முன்பு மிக அதிக இருப்பு வைத்திருந்ததால் ஏற்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து, இவற்றில் ஒரு பகுதியை இந்திய உணவு கழகம் ஏற்றுமதி செய்ய வேண்டி வந்தது.

இதன்படி 2000-01ல் 0.8, 2001-02ல் 2.65, 2002-03ல் 3.67, 2003-04ல் 4.09, 2004-05ல் 2 மில்லியன் மெட்ரிக் டன்னும், 2005-06ல் 4.06, 2006-07ல் 2, 2007-08ல் 4.7 மில்லியன் மெட்ரிக் டன்னும் இந்திய உணவு கழக இருப்பில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.  2006 போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க, தேவைக்கு அதிக இருப்பு வைப்பதையும், இருப்பு குறைவதை தடுக்கவும், பருவநிலை, பூச்சித்தாக்குதல், பயிரிடப்படும் பரப்பளவு, தரம் ஆகியவற்றுக்கு ஏற்ப உணவு தானிய இருப்பு மற்றும் விலையை நிர்ணயம் செய்து முன்கூட்டியே அரசு திட்டமிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பற்றாக்குறைக்கு யார் காரணம்?
சர்வதேச நாடுகளில் கோதுமை பற்றாக்குறைக்கு இந்தியாவை மட்டுமே காரணமாக கூற முடியாது. உலகின் கோதுமை ஏற்றுமதியில் உக்ரைன் - ரஷ்யா போர்தான் முக்கிய காரணம். ஏனெனில் கோதுமை ஏற்றுமதியில் இந்த 2 நாடுகளும் சேர்ந்து 29 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன.  போருக்கு 3 மாதம் முன்பு இந்த 2 நாடுகளும் 55 சதவீத சூரியகாந்தி எண்ணெய், 15 சதவீத பார்லி, சோளம் ஏற்றுமதி செய்தன. கோதுமை ஏற்றுமதி நாடுகளில் முதலிடத்தில் ரஷ்யா (43,965,626 டன்), அடுத்த இடங்களில் கனடா (22,874,184 டன்), அமெரிக்கா (22,499,006 டன்), பிரான்ஸ் (18,940,343 டன்), உக்ரைன் (16,373,389 டன்) உள்ளன. ஆனால், இன்று உலகின் தானிய தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

தடை அறிவித்த பிற நாடுகள்
உக்ரைன் போர் காரணமாக பல நாடுகள் தங்கள் நாட்டின் தேவைக்கு தானிய இருப்பை சேமிக்க தடை விதித்துள்ளன. இதன்படி, அர்ஜென்டினா (சோயாபீன்), அல்ஜீரியா (பாஸ்டா, கோதுமை, சமையல் எண்ணெய், சர்க்கரை, எகிப்து, சமையல் எண்ணெய், சோளம்), கோதுமை மாவு, இந்தோனேஷியா (பாமாயில்), ஈரான் (உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்), கஜகஸ்தான் (கோதுமை, கோதுமை மாவு), கொசோவோ (கோதுமை, சோளம், உப்பு, சர்க்கரை), துருக்கி (மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, வெண்ணெய், சமையல் எண்ணெய்), செர்பியா (கோதுமை, மெஸ்லின் , பார்லி) செர்பியா (கோதுமை, சோளம், எண்ணெய்) துனிசியா (பழங்கள், காய்கறிகள்), குவைத் (கோழியிறைச்சி, தானியங்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை தடை செய்துள்ளன. அதிகபட்சமாக இந்த ஆண்டு ஜூன் 30 முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை மேற்கண்ட ஏற்றுமதி தடை நீடிக்கிறது. ரஷ்யாவில் இருந்து சர்க்கரை, சூரியகாந்தி வித்துக்கள் வரும் ஆகஸ்ட் 31 வரையிலும், உக்ரைனில் இருந்து கோதுமை, ஓட்ஸ், சர்க்கரை வரும் டிசம்பர் 31 வரையிலும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் உச்சம் தொட்ட விலை
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமை விலை உயர்ந்து விட்டது. இந்த வார துவக்கத்தில் கோதுமை ஒரு டன்னுக்கு 453 டாலர்களாக (சுமார் ரூ.34,881) இருந்தது. இந்தியாவின் ஏற்றுமதி தடையால் குறைந்த வருவாய் உள்ள வளரும் நாடுகளான, குறிப்பாக ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அதிக பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கவலை என்ன
உலகின் 2வது பெரிய கோதுமை உற்பத்தி நாடாக இருந்தாலும், உக்ரைன் போர் காரணமாக கோதுமை விலை சர்வதேச சந்தையில் உயர்ந்ததால், விவசாயிகள் பலர் அரசுக்கு பதிலாக ஏற்றுமதியாளர்களுக்கு விற்க தொடங்கி விட்டனர். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இலவச உணவு தானியம் விநியோகம் செய்த நிலையில், புதிய கொள்முதல் குறைந்ததால் அரசிடம்  சுமார் 20 மில்லியன் டன் கோதுமைதான் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொது விநியோக திட்டத்தில் இவற்றை தொடர்ந்து வழங்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில், நாட்டின் சில்லறை விலை பண வீக்கம் 9 ஆண்டில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரலில் 7.79 சதவீதமாக உயர்ந்தது. அதோடு சமீப காலமாக உள்நாட்டு சந்தையில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை 20 முதல் 40 சதவீதம் அதிகரித்து விட்டது. இதுமட்டுமின்றி, கடந்த மார்ச் மாதத்தில் பருவநிலை மாற்றத்தால் வெயில் 113 டிகிரிக்கு உச்சம் தொட்டதால், வடமாநிலங்களில் கோதுமை விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஒன்றிய அரசு கோதுமைக்கு தடை விதித்துள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

 • cong-protest-5

  விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

 • school-girls-isro-5

  இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 • america_nancy

  சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

 • icelanddd111

  ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்