SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

2022-05-20@ 01:32:57

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:
சிதம்பரம் நடராஜர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். இக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சணம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடரும் நிலையில், இக்கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை நடத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து நடராஜர் கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

காலஅவகாசம் கிடையாது: உடனடியாக அமல்
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி பக்தர்கள் வழிபடலாம் என தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அவசர ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், கோட்டாட்சியர் ரவி, கடலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பங்கேற்றனர். அரசாணையை உடனே அமல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என தீட்சிதர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், கால அவகாசம் எதுவும் கொடுக்க முடியாது எனக்கூறி விட்டனர்.

தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில், மற்ற தீட்சிதர்களிடம் ஆலோசித்து,  சட்ட ஆலோசனையை பெற்று கருத்து தெரிவிக்கப்படும் என்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், கனகசபையில் ஏறி பக்தர்கள் வழிபடலாம் என அரசாணை பிறப்பித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்றார். சிதம்பரம் கீழ சன்னதி அருகில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஏற்கனவே கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களோடு நேற்று மாலை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்பி சக்தி கணேசன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • boat_medit

  மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

 • nasa-project-artemis

  ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

 • sea-18

  கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்