SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் இரு பிரிவினர் பிரச்னை; வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி.! சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

2022-05-18@ 00:01:43

சென்னை:  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு அறநிலையத்துறை உதவி ஆணையர் மே 14ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், கோயில் வேதபாராயணம் 30 பேரும், திவ்யபிரபந்த கோஷ்டியில் உரிமை பெற்றவர்கள் 10 பேரும், சாதாரண வழிபாட்டாளர்கள் 10 பேரும் கலந்துகொள்ள வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வடகலை பிரிவினர் திவ்யபிரபந்த கோஷ்டிகளில் முதல் 2 வரிசைகளில் வரக்கூடாது. தேசிக பிரபந்தம் பாடக்கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தடைவிதிக்கக்கோரியும் நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தார்.   இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, கோயில் பூஜை விஷயங்களில் அரசு தலையிட முடியாது. பிரச்னைகள் வநதால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். தென்கலை பிரிவினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, இந்த பிரச்னை தொடர்பாக சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தென்கலை பிரிவினருக்கு சாதகமாக கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்புக்கு உட்பட்டே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழர்கள் மட்டுமே உரிமை கோர முடியாது. அது திராவிட திவ்ய பிரபந்தம். திராவிட பகுதிகள் அனைத்திற்கும் பொதுவானது என்றார். அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, பூஜை மற்றும் சடங்குகளில் அரசு எப்போதும் தலையிடாது. துணை ஆணையரின் உத்தரவிலும் அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறேன். விழாவை அமைதியாக நடத்துங்கள் அதன்பிறகு ஒரு வாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

இடைக்கால உத்தரவு வருமாறு: வடகலை பிரிவினரின் உரிமைகள் மீது எப்போதும் தலையிடுவது இல்லை தென்கலை பிரிவினர் தரப்பில் வாதிடப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை போல இந்த ஆண்டும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால் அறநிலையத்துறையின்  இணை ஆணையரிடம் முறையிடலாம். வடகலை பிரிவினருடன் பேசிய பிறகு தான் உதவி ஆணையர் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார் என்று வாதிடப்பட்டது. நாலாயிர திவ்யபிரபந்தம் தமிழில் தான் உள்ளது. இருந்த போதும் தமிழர்கள் மட்டுமல்லாது கன்னடர்களும், தெலுங்கர்களும் இதை பாடுவதால் நாலாயிர திவ்ய பிரபந்தம் திராவிட பிரபந்தம், திராவிட வேதமாகும். நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் உள்ள போது இது போன்ற பிரச்சனைகளை சுமூகமாக பேசி முடிவெடுக்க முடியும். வரதராஜ பெருமாளுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக கூறினால் அனைவரும் ஓடிவிடுவார்கள்.

வரதராஜ பெருமாள் கோயில் விழாவின் போது முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்கு பின்னால் வடகலை பிரிவினரும், அதன் பின்னர் சாதாரண பக்தர்கள் அமர அனுமதிக்க  வேண்டும். தென்கலை பிரிவினர் முதலில் அவர்களின் தயாபத்ரம் வாசிக்கவும், அதன்பின்னர் வடகலை பிரிவினர் அவர்களின் தயாபத்ரம் வாசிக்கவும், அதன் பின்னர் தென்கலை, வடகலை, பிறபக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும்.  அதன்பின்னர் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள், வாழிதிருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகம் வாழி திருநாமம் பாட அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான விரிவான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மேற்கொண்டு அவற்றை வீடியோ படம் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மே 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்