தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை: விலை உயர்வை தடுக்க நடவடிக்கை
2022-05-15@ 00:16:39

புதுடெல்லி: உள்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு திடீர் தடை விதித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.உலகில் அதிகளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனாவும், 3வது இடத்தில் ரஷ்யாவும், 8வது இடத்தில் உக்ரைனும் உள்ளன. கடந்த 2 மாதமாக ரஷ்யா - உக்ரைன் போர் நடப்பதால், அந்நாடுகளில் இருந்து கோதுமை உற்பத்தி முற்றிலும் முடங்கி, உலகளாவிய கோதுமை விநியோகத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலகளவில் தேவை அதிகரித்ததால், இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி பெருமளவு அதிகரித்தது.
கடந்த 2021-22ம் நிதியாண்டில் இந்தியா ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள 70 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்தது. நடப்பாண்டில் தற்போது வரை 9.63 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 1.3 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதனால், நடப்பாண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி ஒரு கோடி டன்னாக இருக்கும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்தது. கோதுமை ஏற்றுமதியை ஊக்குவிக்க, மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா மற்றும் லெபனான் நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருப்பதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், திடீர் நடவடிக்கையாக கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை தடுக்கவும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மே 13ம் தேதிக்கு முன்பாக கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அவற்றின்படி ஏற்றுமதிகள் செய்ய அனுமதிக்கப்படும். அரசின் அனுமதியுடன் தேவைக்கு ஏற்ப ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இந்தியாவில் கோதுமை விலை உயர்வால் உள்நாட்டில் மட்டுமின்றி, இந்திய கோதுமையை நம்பி உள்ள அண்டை நாடுகள் மற்றும் சில பின்தங்கிய நாடுகளும் பெரும் பாதிப்பு உள்ளாகும். அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை’ என கூறப்பட்டுள்ளது.
அதோடு, 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரலில் பணவீக்கம் 7.79 சதவீதமாக உயர்ந்து, சில்லறை உணவு பணவீக்கம் 8.38 சதவீதமாக உயர்ந்ததை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோதுமைக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பஞ்சாப், அரியானாவில் உள்ள தனியார் வர்த்தகர்கள் அதிக விலை கிடைப்பதால் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு ரபி பருவத்தில் 2.8 கோடி டன் கோதுமையை ஒன்றிய அரசு கொள்முதல் செய்த நிலையில், மே 1 நிலவரப்படி இது 44 சதவீதம் சரிந்து 1.62 கோடி டன்னாக குறைந்தது. வரத்து குறைவால், கடந்த சில நாட்களாக கோதுமையின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும், ஏற்றுமதிக்கு நல்ல விலை கிடைப்பதால் தனியார் வர்த்தகர்கள் கோதுமையை பதுக்கும் நிலையும் உருவாகி உள்ளது,’’ என்றனர்.
இதைத் தடுக்கவும், விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், கோதுமை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலைக்கு கோதுமையை வாங்கி குவித்துள்ளன. எனவே, இனி விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குள் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கோதுமையை விற்க ஒன்றிய அரசு நிர்பந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கண்டனம்
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறுகையில், ‘போதிய கோதுமையை ஒன்றிய அரசு கொள்முதல் செய்யத் தவறியதே இதற்குக் காரணம். கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. எப்படியிருந்தாலும் இது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை தான். அதிக ஏற்றுமதி விலையின் பலனை விவசாயிகளுக்கு கிடைக்காமல் ஒன்றிய அரசு பறித்து விட்டது. விவசாயிகளுக்கு விரோதமான இந்த அரசிடமிருந்து இதுபோன்ற நடவடிக்கை வந்திருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை,’ என்றார்.
மேலும் செய்திகள்
கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் அறிவிப்பு
ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த கடை ஊழியருக்கு அடிஉதை...மூன்று இளைஞர்களை தேடிவருகிறது காவல்துறை
ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்!!
30 ஆண்டுகால சட்டப்போராட்டம் வெற்றி... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,829 ஆக அதிகரிப்பு.. 33 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!