SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அடுத்த வாரம் விவாதம் அதிபர் கோத்தபயவை நீக்குவது சுலபம் அல்ல; தானே ராஜினாமா செய்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு: பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு

2022-05-05@ 09:11:07

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, அந்நிய செலவாணி கையிருப்பு பெருமளவில் சரிவு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால், பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு அளித்த ஆதரவை பல கட்சிகள் வாபஸ் பெற்றதால், 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 109 உறுப்பினர்கள் ஆதரவை (பெரும்பான்மைக்கு தேவை 113) மட்டுமே பெற்று ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. இருப்பினும், தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாகக் கூறி பதவியை ராஜினாமா செய்யாமல் மகிந்த ராஜபக்சே ஆட்சியை நடத்தி வருகிறார். இதனால், ஏப்.30ம் தேதிக்குள் அவரும், அதிபர் கோத்தபயவும் பதவி விலகவில்லை என்றால்,  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எதிர்க்கட்சிகள்  தெரிவித்தன.    

இதற்கிடையே, அனைத்துக் கட்சிகள் கொண்ட இடைக்கால அரசை அமைக்க மகிந்த ராஜபக்சே அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் யாரும் அதிகாரத்தில் அமரக் கூடாது என்பது உட்பட 11 நிபந்தனைகளை எதிர்க்கட்சிகள் விதித்தன. இதை ஏற்க மறுத்த மகிந்த ராஜபக்சே, இடைக்கால அரசாக இருந்தாலும், புதிய அரசாக இருந்தாலும் என் தலைமையில்தான் அமைய வேண்டும் என்று தெரிவித்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் போர்க்கொடி மற்றும் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக மகிந்தாவுக்கு பதில் புதிய பிரதமரை நியமிக்கவும், புதிய அமைச்சரவையை தேர்ந்தெடுக்கவும் தேசிய தேர்வு குழுவை அமைக்க அதிபர் கோத்தபய ஒப்புக்கொண்டார்.

நாளுக்கு நாள் நாட்டின் நிலை மோசமடைந்து வருவதால், பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவிகயா, 2  நம்பிக்கையில்லா தீர்மானங்களை நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா  அபயவர்த்தனாவை அவரது வீட்டில் சந்தித்து வழங்கியது. ஒரு மசோதா அதிபர் கோத்தபய  ராஜபக்சேவுக்கு எதிராகவும், மற்றொன்று மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிரானதாகும். அதேபோல், முக்கிய தமிழர் கட்சியான டிஎன்ஏ,வும். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் (யுஎன்பி) அதிபர் கோத்தபயவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற கூட்டம் நேற்று காலை கூடியது. 8 அமர்வுகளாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் தொடங்கியதும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தால், அதன் மீதான் விவாதம் நடத்த குறைந்தபட்சம் ஏழு நாட்களாகும். இது தொடர்பாக அனைத்துக்கட்சிகள் கூடி தீர்மானத்தை எப்போது கொண்டு வருவது என்று ஆலோசிக்கப்படும். அதில் எடுக்கும் முடிவின்படியே, அதன் மீதான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த முடியும். அதன்படி, இந்த தீர்மானம் அடுத்த வாரம் தான் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.      

சமகி ஜன பலவிகயா கட்சி கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், வெற்றி பெற்றால் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அவருடைய அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். ஆனால், இந்த தீர்மானத்தின் வெற்றி மூலம், அதிபர் கோத்தபயவின் பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. அதேபோல், டிஎன்ஏ கட்சியும், யுஎன்பி கட்சியும் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், கோத்தபயவை பதவியை விட்டு விலகும்படி கட்டாயப்படுத்த முடியாது. இலங்கை அரசியலமைப்பு பிரிவு 38ன் படி, அந்நாட்டின் அதிபர் சுய விருப்பத்தின் பெயரில் தானே ராஜினாமா செய்தால் மட்டுமே பதவியில் இருந்து விலக முடியும் அல்லது அவருக்கு எதிராக தொடர் கண்டன தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றுவதின் மூலமாக மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும்.

இதனால், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மகிந்த ராஜபக்சே அரசு தோல்வி அடைந்தாலும், அதிபர் கோத்தபய தலைமையில் இடைக்கால அரசு அமைவதற்கே அதிக சாத்தியம் உள்ளது. அதே நேரத்தில், ராஜபக்சே அரசுக்கு எதிராக பெரும்பான்மையை நிரூபித்து, அனைத்துகட்சிகள் அடங்கிய அரசை அமைக்க எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதேபோல், அதிருப்தி எம்பிக்கள் மற்றும் விலகிய கட்சிகளுடன் அதிபர் கோத்தபயவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணை சபாநாயகர் ராஜினாமா: மகிந்த ராஜபக்சே அரசுக்கு ஆதரவு தெரிவித்த இலங்கை தொழிலாளர் கட்சி தங்களின் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கோத்தபய அந்த ராஜினாமாவை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை, ராஜினாமாவை அவர் ஏற்று கொண்டால், துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.  

அன்னிய செலாவணி இருப்பு வரலாறு காணாத சரிவு: இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘2020ம் ஆண்டு ஜனவரியில் வரிகளை குறைத்தது மிகப்பெரிய தவறு. வெளிநாட்டு அன்னிய செலாவணி கையிருப்பு தற்போது வரலாறு காணாத வகையில் மிகவும் குறைவாகவே கையிருப்பு உள்ளது. வரி வருவாய் தற்போது 24 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக குறைந்துள்ளது. உலக வங்கியின் ரூ.3040 கோடி உதவியை, ரூ.5320 கோடியாக உயர்த்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு உதவிய இந்தியாவை பாராட்டுகிறோம். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் இந்தியா ஆகியவை அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கு மேலும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

* இலங்கை அரசு திவாலாகும் நிலைக்கு சென்றதால், வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை நிறுத்தி விட்டது. 2026ம் ஆண்டில் செலுத்த  திட்டமிடப்பட்டுள்ள ரூ.1.9 லட்சம் கோடி வெளிநாட்டு கடன்களில் ரூ.53,200 கோடி இந்த ஆண்டு அது திருப்பிச் செலுத்த வேண்டி உள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • boat_medit

  மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

 • nasa-project-artemis

  ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

 • sea-18

  கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்