SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை வெயிலால் ஓய்வெடுக்க இடமின்றி மக்கள் தவிப்பதால் பூங்காக்களை பகல் நேரங்களில் மூடி வைப்பது சரியானது அல்ல: மாநில தகவல் ஆணையம் சொல்கிறது

2022-04-17@ 00:04:21

சென்னை:  கோடை வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுக்க இடம் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்ற நிலையில், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை பகல் நேரங்களில் மூடி வைப்பது சரியானது அல்ல என  மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.மணலி புதுநகரை சேர்ந்த வினோத்குமார் என்பவர், சென்னை மாநகராட்சி 2வது மண்டலத்தில் உள்ள பூங்கா தொடர்பான முழு விவரங்களையும், அங்கு பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை, ஊதியம் தொடர்பான தகவல்களை கேட்டு சென்னை மாநகராட்சி 2வது மண்டல செயற்பொறியாளரிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார். இதற்கு தகவல் அலுவலர் முறையான பதில் அளிக்காத காரணத்தால், மாநில தகவல் ஆணையத்தில் வினோத்குமார் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தகவல் ஆணையர் முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தகவல் அலுவலர், அனைத்து தகவல்களையும் வழங்க தயார் என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட ஆணையர், மனுதாரர் கோரியுள்ள தகவல்களை வழங்க உத்தரவிட்டார். மேலும் இந்த விசாரணையின் போது பூங்காக்கள் பகல் நேரத்தில் மூடி உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த தகவல் ஆணையர், பகல் நேரத்தில் பூங்காக்களை மூடி வைப்பது சரியானது இல்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து,  அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 535 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பூங்காக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பூட்டி இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்டு இருக்கலாம். தமிழ்நாடு அரசு கொரோனா விதிமுறைகளில் தளர்வு அளித்த பிறகு இது தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற முடிவுகளை பூங்காவில் பணியாற்றும் பணியாளர்கள் எடுக்க முடியாது. மன்றத்தின் அனுமதியோடு அதிகாரிகளின் உத்தரவின்படிதான் எடுக்க முடியும். மக்கள் பணி நிமித்தமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும்போது கோடை வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுத்துக்கொள்ள இடம் இல்லாமல் சிரமப்படுகின்ற நிலையில், பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பூங்காக்கள் மூடி இருப்பது சரியானது அல்ல. எனவே பூங்காக்கள் எப்போது திறக்கப்பட வேண்டும், எப்போது மூட வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக பூங்கா துறை கண்காணிப்பு பொறியாளர் அனுப்பிவைக்க வேண்டும். இதன் நகலை ஆணையத்திற்கும், மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

 • cong-protest-5

  விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

 • school-girls-isro-5

  இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 • america_nancy

  சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

 • icelanddd111

  ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்