மார்ச் 31க்குள் சொத்து வரியை ஏற்றவில்லை என்றால் ₹15 ஆயிரம் கோடி நிதி வராது என கட்டளையிட்டது ஒன்றிய அரசு: சொத்துவரி உயர்வுக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
2022-04-03@ 00:12:01

புதுடெல்லி: தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மார்ச் 31ம் தேதிக்குள் சொத்து வரியை ஏற்றவில்லை என்று சொன்னால், இந்த ஆண்டிற்கு ₹15 ஆயிரம் கோடி நிதி வராது என்று ஒன்றிய அரசு கூறியதால் ஏற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நியமித்த 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை உயர்த்த வேண்டும் எனவும், அதன் பெயரிலேயே ஒன்றிய அரசின் மானியங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சென்னை மாநகரத்தை பொறுத்தளவில், 24 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சொத்து வரி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. .
இந்தியாவை பொறுத்தளவில், அதிகமான நகர்ப்புற பகுதி இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். எனவே நகர்ப்புறத்தில் பெருகிவரும் மக்கள்தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தங்களுடைய வருவாயை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்து வரி உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில், மிகவும் கவனமாக முதல்வர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி 3,240 ரூபாய். சீராய்வுக்கு பிறகு இது 4,860 ரூபாயாக உயரும். ஆனால் இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு பெங்களூருவில் 8,660 ரூபாயும், கொல்கத்தாவில் 15,984 ரூபாயும், புனேவில் 17,112 ரூபாயும், மும்பையில் 84,583 ரூபாய் என்றும் மாநகராட்சியை பொறுத்தளவு உயர்ந்து இருக்கிறது. ஆனால், மகாராஷ்டிராவில் 84,000ம், நமக்கு 5,000 என்ற அளவிலேதான் இன்றைக்கு முதல்வர் உயர்த்த உத்தரவு தந்திருக்கிறார். இந்த உயர்வு நகராட்சி துறையின் சார்பாக செய்யப்பட்டிருக்கிறது. பெருநகரங்களில் தவிர்த்து, மற்ற நகரங்களில் உயர்வை எடுத்துக்கொண்டால், உதாரணத்திற்கு 600 சதுரடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி 204 ரூபாய் ஆகும். சீராய்வுக்கு பிறகு இது 255 ரூபாயாக உயரும். ஆனால் இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு லக்னோவில் 648 ரூபாய், இந்தூரில் 1324 ரூபாய், ஆமதாபாத்தில் 2103 ரூபாய் என்ற அளவிலே உயர்ந்திருக்கிறது. கோயம்புத்தூரில் 600 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி 972 ரூபாய் ஆகும். சீராய்வுக்கு பிறகு இது 1,215 ரூபாயாக உயரும். ஆனால் இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்துக்கு லக்னோவில் 2,160 ரூபாய். ஆகவே, மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை விட 50%, 100%க்கும் மேலாக வரி இருக்கிறது.
முதல்வர் இதில் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவிற்கு இந்த வரி உயர்வை ஏற்படுத்தி கொடுத்தார். அதுவும் இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற நகராட்சியில் வந்திருக்கிற தலைவர்கள் தன்னுடைய நகராட்சி பணத்திலேயே, நகரத்தை முன்னேற்றுவதற்காக வழிவகை செய்வதற்காக இந்த பணி செய்யப்பட்டு இருக்கிறது. இதை மற்றவர்கள் அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள். அதுவும் எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார், ”இது அவர்களுக்கு ஓட்டு போட்டதற்கு உங்களுக்கு பரிசு” என்று சொல்கிறார். இந்த வரி உயர்வை 2018ம் ஆண்டு அவர்கள் இரண்டு மடங்காக உயர்த்தியிருந்தார். தேர்தல் வருகின்ற காரணத்தால், முழுமையாக அதை நிறுத்தி வைத்துவிட்டு, தேர்தலுக்கு பிறகு அதை உயர்த்துவதாக அன்றைக்கு நிறுத்தியவர்கள்தான் அவர்கள். ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், ஏழை, பணக்காரர் என்று இல்லாமல், ஒரே வகையில் எல்லாருக்கும் ஒரே முறையில் வரி உயர்வு தரப்பட்டது. நம்முடைய முதல்வர் ஏழைகளுக்கு குறைவாகவும் கொஞ்சம் வசதி படைத்தோர் - 1800 சதுர அடிக்கு மேல் இருக்கக்கூடிய கட்டிடங்களுக்கு வரியை கூடுதலாக உயர்த்தியிருக்கிறார். இதுதான் உண்மை நிலை. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவாக தமிழ்நாட்டில் இருக்கிறது.
சொத்து வரி உயர்வை ஏற்றுவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை. 15வது நிதி ஆணையம் இதை ஏற்றினால்தான் உங்களுக்கு பணம் விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு கொடுத்த ஒரு கட்டளையால்தான் இது ஏற்றப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டே ₹7000 கோடிக்கு மேலாக வருவாயை தேர்தல் முடிந்த பிறகு தருகிறோம் என்று சொன்னார். இப்போது இந்த 15வது நிதி குழுவிலே இந்த உயர்வை நீங்கள் சீர்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலங்களிலும் இந்த உயர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் மற்றவர்களை காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாக ஏற்றப்பட்டிருக்கிறது. மார்ச் 31ம் தேதிக்குள் இதை ஏற்றவில்லை என்று சொன்னால், இந்த ஆண்டிற்கு வருகிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதி உங்களுக்கு வராது என்று ஒன்றிய அரசு கூறியதால் ஏற்றப்பட்டுள்ளது.
15வது நிதி ஆணையத்தின்படி நீங்கள் ஏற்றினால்தான் பணமே தருவார்கள் என்று, இல்லையென்றால் 15,000 கோடி ரூபாய் வராது. ஆதலால், எல்லா வளர்ச்சி பணிகளும் தடைபடும் என்கிற காரணத்தினால் இது செய்யப்படுகிறது.தமிழ்நாட்டை பொறுத்தளவு நகர பகுதியில் மக்கள் தினந்தோறும் குடியேறுகிற பகுதி என்பது கிட்டதட்ட 58% பேர் இன்றைக்கு நகர பகுதியில் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பணிகளை செய்ய வேண்டும். அதற்காகத்தான் இது செய்யப்பட்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்
ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு
ஸ்டீல், ஜவுளி அதிபர் வீடுகளில் சோதனை ரூ.56 கோடி, 32 கிலோ தங்கம் ரூ.390 கோடி சொத்து பறிமுதல்: 13 மணி நேரம் பணத்தை எண்ணிய அதிகாரிகள்
இயல்பு வாழ்க்கை பாதிப்பு இமாச்சலில் மேகவெடிப்பு நிலச்சரிவில் 2 பெண் பலி
விமானத்தில் சிகரெட் பிடித்த பாடி பில்டர்: விசாரணைக்கு உத்தரவு
தண்ணீர் போன்ற குழம்பு வெந்தும் வேகாத ரொட்டி: உபி போலீஸ்காரர் கதறல்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!