மம்தா பானர்ஜி பேரவை தேர்தலில் தோற்ற போது தார்மீக உரிமை கேட்ட பாஜகவுக்கு இப்போது மூக்குடைந்தது!: வேறுவழியின்றி உத்தரகாண்ட் முதல்வர் தேர்வு
2022-03-22@ 17:47:04

டேராடூன்: மம்தா பானர்ஜி பேரவை தேர்தலில் தோற்ற போது, அவர் மீண்டும் முதல்வராக தார்மீக உரிமை இல்லை என்று கூறிய பாஜகவுக்கு இப்போது மூக்குடைந்துள்ளது. காரணம், உத்தரகாண்ட் முதல்வர் தேர்வில் தோற்ற வேட்பாளரையே வேறு வழியின்றி மீண்டும் தேர்வு செய்துள்ளது. கடந்தாண்டு நடந்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பாஜகவின் சுபேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை தோற்கடித்தார். இருந்தாலும் மம்தா பானர்ஜி சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவியேற்றார்.
அடுத்த சில மாதங்களில் பவானிபூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அப்போது தேர்தலில் தோல்வியடைந்த எந்த வேட்பாளருக்கும், முதல்வராகும் தார்மீக உரிமை இல்லை என்று பாஜக மூத்த தலைவர்கள், மம்தா பானர்ஜியை விமர்சித்தனர். குறிப்பாக பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா, மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் பிரதாப் பானர்ஜி ஆகியோர் கடுமையாக பேசினர்.
தோல்வியடைந்த வேட்பாளர் தன்னை முதல்வராக ஆக்கியது இதுவரை நாட்டில் நடந்ததில்லை என்றும், மக்களால் தோற்கடிக்கப்பட்ட எந்த வேட்பாளரும் முதல்வராக பதவியேற்பதற்கு தார்மீக உரிமையில்லை என்றும் கூறினர். ஆனால், இன்று உத்தரகாண்டில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, மம்தா மாடல்தான் கைக் கொடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகாண்ட் பேரவை தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிப் பெற்றது. ஆனால், கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும், முதல்வராகவும் இருந்த புஷ்கர் சிங் தாமி, காதிமா தொகுதியில் தோல்வியடைந்தார். இவரை காங்கிரஸின் புவன் சந்த் கப்ரி தோற்கடித்தார். இருந்த போதிலும், பாஜக சட்டமன்ற கட்சி கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால், அவரே மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்பார் என்பது தெளிவாகி உள்ளது.
புஷ்கர் சிங் தாமிக்கு மாநில பாஜகவில் அதிருப்தி நிலவிய நிலையில், தேசிய தலைமையிடம் செல்வாக்கு அதிகமாக உள்ளது. அதனால், அவரே மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில், ‘மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்ததோ, அதேதான் உத்தரகாண்டிலும் நடக்கப் போகிறது. முன்பு மம்தா பானர்ஜி செய்தார், தற்போது புஷ்கர் சிங் தாமி செய்வார். மம்தா மாடலை விமர்சித்த பாஜக, தற்போது மூக்குடைக்கப்பட்ட நிலையில் அதே மாடலை பின்பற்றி மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் முதல்வராக்குகிறது’ என்றனர்.
மேலும் செய்திகள்
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு
ஆந்திராவில் உள்ள 10 தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஏலம்
இலவசம்னு சொல்றதை நிறுத்துங்கள்: கெஜ்ரிவால் ஆவேசம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!