SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகமதாபாத்தில் நாளை முதல் ஒன்டே; வெற்றியுடன் தொடங்குவாரா புது கேப்டன் ரோகித்சர்மா?.. சவாலுக்கு காத்திருக்கும் வெஸ்ட்இண்டீஸ்

2022-02-05@ 16:23:22

அகமதாபாத்: பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் ஒரு நாள் போட்டி முறையே நாளை, 9, 11ம் தேதிகளில் அகமதாபாத்தில் நடக்கிறது. புதிய கேப்டன் ரோகித்சர்மா தலைமையில் இந்தியா களம் இறங்குகிறது. ரோகித் தலைமையில் இதற்கு முன் 10 போட்டியில் ஆடி 8ல் வெற்றி, 2ல் தோல்வி கண்டுள்ளது. தற்போது முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டு முதல் போட்டியில் நாளை தான் அவர் களம் இறங்குகிறார். தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அகர்வால் அல்லது இஷான்கிஷனுக்கு வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் விராட் கோஹ்லி, சூர்யகுமார், ரிஷப் பன்ட் ஆகியோருடன் ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா, ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கிடைக்கும். பந்துவீச்சில் முகமது சிராஜ், தீபக் சாஹர், சுழலில் சாஹல், குல்தீப் யாதவ் களம் இறங்கலாம். மறுபுறம் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ஹோல்டர், பிராண்டன் கிங், டேரன் பிராவோ போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் கேமர் ரோச், அல்சரி ஜோசப், ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியை தொடங்கினர். வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் 3 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்து இன்று பயிற்சியை தொடங்கினர். இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்பில உள்ளன. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1000வது போட்டி...
இந்திய அணி நாளை களம் இறங்குவது 1000வது ஒருநாள் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் அணி என்ற சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன் ஆடி உள்ள 999 போட்டிகளில் 518ல் வெற்றி பெற்றுள்ளது. 431ல் தோல்வி கண்டுள்ளது. 9 போட்டி டையில் முடிந்துள்ளது. 41 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 958 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளது. இதில் 581ல் வெற்றி பெற்றுள்ளது. 334ல் தோல்வி கண்டுள்ளது.

சச்சின் வாழ்த்து
1000வது ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இது நம் அனைவருக்கும் ஒரு சாதனை என்று நான் கூற விரும்புகிறேன். ஒட்டுமொத்த தேசமும் இதைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். மேலும் இந்திய கிரிக்கெட் தொடர்ந்து வலிமையிலிருந்து பலமாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன். வரவிருக்கும் தொடருக்கும் குறிப்பாக ஆயிரமாவது போட்டிக்கும் நல்வாழ்த்துக்கள், என தெரிவித்துள்ளார்.

இதுவரை நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை 133 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 64ல்இந்தியாவும், 63ல் வெஸ்ட் இண்டீஸ்அணியும் வென்றுள்ளன. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 4 ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் 4ல் இந்தியாவே வென்றுள்ளது.

ரன் மிஷன் கோஹ்லி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக விராட்கோஹ்லியின் ரன் சராசரி 72.09 ஆக உள்ளது. இவர் 39 போட்டியில் 9 சதம், 11 அரை சதம் உள்பட 2235 ரன் எடுத்துள்ளார். சச்சின் 39 போட்டியில் 1573 ரன்னுடன் அடுத்த இடத்தில் உள்ளார். ரோசித்சர்மா 33 போட்டியில் 1523 ரன்னுடன் 3வது இடத்தில் உள்ளார். கோஹ்லி நாளை 6 ரன் அடித்தால் ஒருநாள் போட்டியில் இந்திய மண்ணில் 5 ஆயிரம் ரன் எடுத்த 2வது வீரர் என்ற சிறப்பை பெறுவார். இதற்கு முன் டெண்டுல்கர் இந்த பட்டியலில் உள்ளார்.

2006க்கு பின் தோற்றதில்லை
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2006ம் ஆண்டுக்கு பின் இந்தியா இழந்தது கிடையாது. கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் தொடரையும் இந்தியாவே கைப்பற்றி உள்ளது. ஒட்டுமொத்தமாக 1983ம் ஆண்டு முதல் இரு அணிகளும் 21 ஒரு நாள் தொடரில் மோதி உள்ளன. இதில் 13-8 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்