SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 1052 வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

2022-01-28@ 15:13:11

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 1052 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சென்னை ஈஞ்சம்பாக்கம்  பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி ஐ.ஹெச்.சேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரிகள் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், காணொளி காட்சி மூலமாக ஆஜராகியிருந்தனர். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சம்பந்தமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவை எந்த நிலையிலும் அரசு அமல்படுத்தும் என்றார்.
அப்போது நீதிபதிகள், கடந்த 2015ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் உள்ள எந்த பகுதியிலும் மேய்க்கால் புறம்போக்கு, நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட கூடாது என்று பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.  எந்த மேய்க்கால் பகுதியையும் வகை மாற்றம் செய்ய கூடாது. எனவே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தரப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி அது தொடர்பான அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இதுவரை அந்த பகுதியில் உள்ள 1052 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 1007 வணிக நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 65 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போதுள்ள கொரோனா பரவல் சூழல் மற்றும் பெத்தேல் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வை எதிர்பார்த்து இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

அதற்குள் ஒவ்வொரு மாதமும் அரசு எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். இந்த வழக்கை நிலுவையில் வைக்கிருக்க வேண்டும் என்றார். அப்போது, பெத்தேல் நகரை சேர்ந்த சிலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து வாதிட அனுமதி கோரினர். இதையடுத்து, வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்