SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் தன்னுடைய ஒப்புதலை விரைவில் அளிக்க வேண்டும் :அமைச்சர் தங்கம் தென்னரசு

2022-01-27@ 13:32:40

சென்னை : நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் தன்னுடைய ஒப்புதலை விரைவில் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கை

'தமிழ் நாட்டில் மும்மொழிக்கொள்கையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும்  வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும் எனவும் பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல எனவும் தனது குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து அது ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்திருக்கின்றது. தமிழ் நாட்டின் மொழிப்போராட்ட வரலாறை அறிந்தோருக்குப் பிற இந்திய மொழிகள் என்பது இந்தியை முன்னிலைப் படுத்தும் சொற்பிரயோகம் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

தமிழ் நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான  மொழிப்போராட்டம்  என்பது நெடிய வரலாற்றை உள்ளடக்கியது. தந்தைப் பெரியாரும் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் தமிழறிஞர்கள் பலரும் முன்னெடுத்த மொழிப் போராட்டம் தொடங்கிப் பல்வேறு கால கட்டங்களில் நடந்த போராட்டங்களில் தங்களது இன்னுயிரை ஈந்த மொழிப்போராட்டத் தியாகிகளை ஈன்று புறந்தந்தது தமிழ் நாட்டு மண்.
தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான் அன்றைய தலைமை அமைச்சர் பண்டித நேரு பெருமானார் அவர்கள் இந்தி பேசாத மா நிலங்கள் விரும்பாத வரை கட்டாயமாக இந்தியைத் திணிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தார்கள்.

அதன் பின்னர் தமிழ் நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1967ஆம் ஆண்டு அமையப் பெற்றபோது தமிழ் நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெறும் இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என அறிவித்து அன்று முதல் இன்று வரை இரு மொழிக் கொள்கையே தமிழ் நாட்டு அரசின் மொழிக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதை நான் மாண்புமிகு ஆளுநர் அவர்களது மேலான கவனத்திற்குச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

இரு மொழிக் கொள்கையால் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வித் தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் அவர்களில் இடம் பெறும் வகையில் பெறும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை என்பதையும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நன்கறிவார்கள் என நான் நம்புகின்றேன்.

அதே போல, நீட் தேர்வின் காரணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் தகுதிப் பட்டியலில் முதல் 1000 இடங்களில் சிபிஎஸ்சி மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்ட வாரியத்தில் பயின்ற 394 பேர் மற்றும் ஐசிஎஸ்சி போன்ற பிற பாடத்திட்டங்களில் படித்த 27 பேர் இடம் பெற்று உள்ளனர்.

இந்தப் பாகுபாட்டினைக் களையும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும். எனினும் அது ஒரு தற்காலிகத் தீர்வு தான் என்பதனையும் மாநிலப் பாடத்திட்ட வாரியம் மூலம் பயிலும் மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளியில் பயின்று தனியார் பயிற்சிப் பள்ளிகளில் ஏராளமான கட்டணம் செலுத்திப் படிக்க இயலாத மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சமூக நீதியின் அடிப்படிடையில் தங்களுக்கான இடங்களைப் பன்னிரெண்டாம் வகுப்புபொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெற வேண்டும் எனில் நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுவதே நிரந்தமான தீர்வாக அமையும் என்பதனையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடந்து வலியுறுத்தி வருகின்றார்.

அதனடிப்படையில், தமிழ் நாடு சட்ட மன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப் பட்டு அது மாண்புமிகு ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றது.  
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அந்த சட்ட முன் வடிவிற்குத் தன்னுடைய இசைவினையும் விரைவில் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவப் படிப்பு கனவுகளை நிறைவேற்றத் தமிழ் நாடு முதலமைச்சரின் முன்னெடுப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் துணை நிற்பார் எனவும் நான் நம்புகின்றேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்