SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த ஏற்பாடு

2022-01-22@ 11:13:20

சென்னை: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் தனித்துவம் மிக்கவரும், ‘வங்கத்துச் சிங்கம்‘ என்றும், ‘இந்தியாவின் இரும்பு மனிதர்‘ என்றும் நம் மக்களால் இன்றும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு நாளை (23.01.2022) காலை 9.30 மணியளவில், கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23ஆம் நாள் ஜானகிதாஸ் போஸ் - பிரபாவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். தந்தையார் புகழ்பெற்ற வழக்கறிஞர். பள்ளி, கல்லூரிக் காலங்களில் படிப்பில் படுசுட்டியாக இருந்தபோதிலும், ஆன்மீகத்திலும், தேசபக்தியிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். 1915ஆம் ஆண்டு “கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் படிக்கின்ற நாட்களில், இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த ‘சி.எப். ஓட்டன்’ என்கிற ஆங்கிலேய ஆசிரியரை எதிர்த்து வெளியேறினார். பின்னர் தந்தையின் விருப்பத்திற்கேற்ப, 1919ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் ஜ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவராகத் தேர்ச்சி பெற்றாலும், தாய்நாட்டில் ஆங்கிலேயருக்கு அடிபணிந்து பணியாற்றிட விருப்பமின்றி அப்பதவியைத் துறந்தார்.

நம் தாய்நாடானது விடுதலை பெற்றிட வேண்டும் என்கிற தணியாத தாகம், தணலாக அவரின் நெஞ்சிலே நிலைத்திருந்தாலும், 1919ஆம் ஆண்டு நடந்த ”ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம்” அகிம்சை வழி தவிர்த்து, ஆயுதவழிப் போரே இறுதித் தீர்வு என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தார். 1921ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பியவர் வங்கத்தின் ‘தேசபந்து‘ சித்தரஞ்சன் தாஸ் அவர்களைத் தனது அரிசியல் குருவாக ஏற்று, அவர் காட்டிய வழியில் பயணித்தார். அண்ணல் காந்தியடிகளுடன் இணைந்து அகிம்சை வழியில் அறப்போராட்டங்களில் ஈடுபட்டு, கொடுஞ்சிறைத் தண்டனைகளோடு, கடல் கடந்த சிறைவாசம், கடுமையான நோய்களுக்கு ஆட்பட்ட நேரத்தில், அறவழிப் போரில் இனி அர்த்தமில்லை என்பதைத் தீர்க்கமாக உணர்ந்து கொண்டார். இந்த நிலையிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அண்ணல் காந்தியடிகளுக்கும், நேதாஜி அவர்களுக்கும் இடையே தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, தனது அரசியல் ஆசான் சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் வழியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, 1939ஆம் ஆண்டு ‘அகில இந்திய பார்வார்டு பிளாக்‘ என்கிற புதிய கட்சியினைத் தொடங்கி, அதன் தலைவராகத் தானும், தமிழ்நாட்டுத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களையும் நியமித்தார்.

அன்னிய நாட்டினரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் இந்திய தேசத்தினை அகிம்சை வழி தவிர்த்து, ஆயுத வழியில்தான் மீட்டெடுப்பேன் என்று சூளுரைத்ததோடு, தன் வாழ்வின் இறுதி வரையில் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டிருந்தவர். தன்னலந்துறந்தவர்; தன் நாட்டு மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்; ஆங்கிலேயர்களின் அடக்குமுறையினை, அடிமைத் தனத்தினை உலகறியச் செய்து அவர்களின் ஆதரவினையும் பெற்றவர்; “கெஞ்சியும் கேட்டும் பெறும் யாசகப் பொருளல்ல விடுதலை! ரத்தம் சிந்தி போராடிப் பெறவேண்டிய உரிமையே விடுதலை“ என போர் முழக்கமிட்டவர். தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக முதன்முறையாக இந்திய தேசிய இராணுவப் படையினை உருவாக்கி, ஆங்கிலேயரை விழிபிதுங்கிட வைத்தவர். இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையினை உலகறியச் செய்தவர். பார்வைக் குறைபாடு காரணத்தால் ராணுவத்தில் இணைந்து பணியாற்றிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பின்னாளில், தானே ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தியதும், தான் கொண்டிருந்த தளராத முயற்சிகள் திருவினையாக்கும் என்பது இன்றைய இளைஞர்களுக்கெல்லாம் உற்சாகமும் ஊக்கமும் தரும் அனுபவப் பாடமாகும்.

சுவாமி விவேகானந்தர், ரவிந்திரநாத் தாகூர், அரவிந்தர் ஆகியோர் வரிசையில் மாவீரன் நேதாஜியும் தமிழக மக்களின் மனம் கவர்ந்த வங்க ஆளுமை என்றால் அது மிகையில்லை. தான் தொடங்கிய பார்வர்டு பிளாக் கட்சிக்காக சென்னையிலும், மதுரையிலும் மாவீரன் நேதாஜி ஆற்றிய எழுச்சியுரையின் போது அலைகடலெனத் திரண்ட மக்கள் வெள்ளம், அவரின் ராணுவத்துக்காகத் தமிழ்ப் பெண்கள் தங்களின் நகைகளைக் தானமாகக் கொடுத்தது, அந்த ராணுவத்தில் ‘ஜான்சி ராணி பெண்கள் படைப்‘ பிரிவுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த லெட்சுமி அம்மையார் தலைமையேற்றது இவை யாவும் தமிழ் மக்கள் கொண்டு இருந்த வற்றாத அன்புக்கு வரலாற்றுச் சாட்சியாகும்.

நம் தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை வழியாம் அறவழியில் பயணித்த அருபெருந் தலைவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார். அன்னாரின் அருமை பெருமைகளைப் போற்றிடும் வகையில், அவரின் நூற்றாண்டின் நினைவாக, முத்தமிழறிஞர் கலைஞர் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அன்னாரின் திருவுருவச் சிலையினை 1991ஆம் ஆண்டு திறந்து வைத்தார். மேலும் அன்னாரின் பிறந்த நாளானது (23.01.2022) தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்