SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.249 கோடி செலவில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

2022-01-20@ 14:23:08

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழக அரசின் சார்பில் நடைபெறக்கூடிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கக்கூடிய நிகழ்வு, பல்வேறு அடிக்கல் நாட்டு விழாக்களையும் நடத்தக்கூடிய நிகழ்ச்சி, இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியில் - கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் வாழ்ந்த தருமபுரியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும், காணொலி விழாவில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நான் தருமபுரிக்கு நேரடியாக வந்து எனது கரங்களால் உங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்போடு நீங்கள் எப்படி காத்திருந்தீர்களோ நானும் அப்படித்தான் காத்திருந்தேன். ஆனால் கொரோனா காலக் கட்டுப்பாடுகள் அதைக் கொஞ்சம் தடுத்திருக்கிறது. தருமபுரி மாவட்டத்துக்கு என்று அரசுத் துறைகளை கவனிப்பதற்காக, அதை முறைப்படுத்துவதற்காக, தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய சகோதரர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை நான் அரசின் சார்பில் நியமித்திருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். எங்களால் வேங்கையின் மைந்தன் என்று அழைக்கப்படுபவர். ஆள் பார்க்க அமைதியாகத் தெரிவார். ஆனால் காரியத்தைக் கொடுத்துவிட்டால் வேங்கையைப் போல விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படக் கூடியவர் தான் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இந்த விழாவை அவர் எப்படி எல்லாம் நடத்த திட்டமிட்டார் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அதனை அரசு விழாவாக மட்டுமில்லாமல் - பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய கிராமத் திருவிழாவாக நடத்த வேண்டும் என்று அவர் பல மாதங்களாக முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால், கொரோனாவால் அதனை நாம் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதனால் சில கட்டுப்பாடுகளை அரசின் சார்பாக விதித்திருப்பதன் காரணத்தால், அந்த நிகழ்ச்சியை நம்மால் நடத்த முடியாமல் போய்விட்டது. ஆனாலும் இன்னும் சில வாரங்களில் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். அப்போது நிச்சயமாக தருமபுரிக்கு வருவேன் என்ற உறுதியை முதலில் நான் உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தருமபுரி மாவட்டம் என்றாலே இரண்டு விஷயங்களை நாம் மறக்க முடியாது. ஒன்று தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தருமபுரியில்தான் முதல் முதலாக தொடங்கப்பட்டது. இன்னொன்று என்னவென்றால், என்னுடைய மேற்பார்வையில் நடந்த ஒக்னேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். சமூகத்தின் சரிபாதியான மகளிர் இனம், தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் - பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக மகளிர் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் தலைவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழுக்களை தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் தொடக்கவிழா நடந்தது முதன்முதலில் தருமபுரியில் தான். இங்கு நடந்த விழாவிற்கு கலைஞர் அவர்களே நேரடியாக வந்து மகளிருக்கு கடன் வழங்கும் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

உள்ளாட்சித் துறையின் அமைச்சராக இருந்த நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அரசு விழாக்கள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அன்றைக்கு நாம் வார்த்தெடுத்தோம். இன்றைய தினம் எந்த ஊருக்குச் சென்றாலும், நாங்கள் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், உங்களால் கடன் பெற்று இன்று தலைநிமிர்ந்து வாழ்கிறோம் என்று மகளிர் பலர் பேசும் போது, என்னையும் அறியாமல் மனம் மகிழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு என்னுடைய உணர்வு வந்துவிடுகிறது. அதனால், என்னால் தருமபுரி மாவட்டத்தை ஒருக்காலும் மறக்க முடியாது.

அதேபோல், என்னுடைய வாழ்க்கையில் நீ எதையாவது சாதித்திருக்கிறாயா என்று கேட்டால், பட்டியல் போடும் போது நிச்சயம் இடம் பெறும் மகத்தான திட்டம் தான் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். தருமபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. அவர்களுக்கு கிடைக்கக்கூடிய குடிதண்ணீரில் ப்ளோரைடு அதிகமாக கலந்து இருந்தது. குறிப்பாக பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும் பற்களில் காரை படிவதும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதில் இருந்து இந்த இரண்டு மாவட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் உதித்த திட்டம் அந்தத் திட்டம். அன்றைக்கு நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து அந்தத் திட்டத்தை செயல்படுத்த நான் எந்த அளவிற்கு முனைப்பாக இருந்தேன் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு என்னை ஜப்பான் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இதற்கான திட்டமிடுதல்கள், நிதி வசதிகள் ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை முடுக்கி விடச் சொன்னார்கள். நான் ஜப்பான் சென்று இதற்கான பணிகளைச் செய்தேன். அப்படி உருவாக்கப்பட்டது தான் இந்த ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். அந்த சீரிய திட்டத்தை கடந்த 2008ஆம் ஆண்டு தருமபுரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே நேரடியாக வந்து துவக்கி வைத்தார்.

பலமுறை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு நான் நேரடியாக ஆய்வு செய்து அந்தப் பணிகளை முடுக்கி விட்டேன். சுமார் 80 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த ஆட்சி, அந்தத் திட்டத்தை முடக்கி வைத்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நானே தருமபுரி மாவட்டத்திற்குச் சென்று அங்கிருக்கக்கூடிய மக்களையெல்லாம் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினேன். அதன்பிறகு தான் வேறு வழியில்லாமல் அந்த திட்டத்தை கடந்த கால அரசு நிறைவேற்றியது.

எனவே தான் தருமபுரியை நினைத்தால் என்னுடைய நினைவிற்கு வருவது ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், அதை மறக்கவே முடியாது. இப்போது இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை மேலும் உயர்த்தும் வகையில், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாக உங்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, இன்னும் சில அறிவிப்புகளை நான் இங்கு கூற இருக்கிறேன்.

* சேலம் - தருமபுரி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேலும் எளிதாக்கக் கூடிய வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூருக்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனூருக்கும் இடையே புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும்.
* அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தருமபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
* புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக தருமபுரியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
* தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் அலுவலகக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படும். - ஆகிய அறிவிப்புகளை இந்நிகழ்ச்சியின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம்

* 56.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 46 அரசுக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
* 591 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 35.42 கோடி ரூபாய் ஆகும்.

இந்தக் கட்டடங்கள் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, அரூர், கடத்தூர், பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிபட்டி, எரியூர், காரிமங்கலம் ஆகிய பல்வேறு இடங்களில் அமைய இருக்கிறது. இவை விரைந்து கட்டப்படும். விரைவில் திறப்பு விழாவும் நடைபெறும்.

இன்றைய தினம் 13 ஆயிரத்து 587 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட இருக்கின்றன.

* வீட்டுமனைப்பட்டா
* முதியோர் உதவித்தொகை
* மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள்
* கைம்பெண் உதவித்தொகை
* முதிர்கன்னி உதவித் தொகை
* திருமண உதவித் தொகை
* கல்வி உதவித்தொகை
* உழவர் அட்டைகள்
* பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம்
* கருணை அடிப்படையிலான பணிகள்
* இருளர் மக்களுக்கு வீடுகள்
* இலவச சலவைப் பெட்டி
* உலாமாக்களுக்கு உதவி
* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு
* புதிய விவசாய மின் இணைப்புகள்
* சூரிய மின் சக்தி
* நுண்ணுயிர் பாசனத் திட்டம்
* நகரும் காய்கறி வண்டி
- என்று பல்வேறு வகையில் இந்த நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நான் சிலவற்றைத் தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் பல்வேறு உதவிகள் வழங்கப்படவிருக்கிறது.

13 ஆயிரத்து 587 பேருக்கு சுமார் 157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், இன்றைய தினம் மட்டும் 249 கோடியே 5 லட்சத்து, 11 ஆயிரத்து, 552 ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்டங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் நான் செய்து வழங்கியுள்ளேன் என்று சொல்வதை விட, உங்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு, உங்களுக்கு வழங்கியிருக்கிறது என்று சொன்னால் தான் அது சரியாக இருக்கும், பொருத்தமாக இருக்கும். எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் ஆட்சியை வழங்கினீர்கள். உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் காப்பாற்றி வருகிறோம் என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இது போன்ற விழாக்கள் இனிமேல் அடிக்கடி நடக்கும். இங்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும். கழக அரசு என்பது எப்போதும் இதே சுறுசுறுப்புடன் தான் செயல்படும்.

சில நாட்களுக்கு முன்னால் பிசினஸ் லைன் என்கிற ஆங்கில நாளேடு வெளியிட்ட சிறப்புக் கட்டுரையில், 'தொழில் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான்' என்று எழுதி இருக்கிறது. மே மாதம் இந்த அரசு பொறுப்பேற்றது. இந்த ஆறு மாத காலத்தில் 304 திட்டங்களுக்காக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து, 902 கோடி ரூபாய் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்று சொன்னால், அதுதான் தமிழ்நாட்டில் நடப்பது நல்லாட்சி என்பதற்கான உதாரணம்.

ஒரு மாநிலத்தில் ஏராளமான முதலீடுகள் பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகிறது என்றால் அந்த மாநிலத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று பொருள். அந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறது என்று பொருள். அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று பொருள். அந்த மாநிலம் வளர்ச்சிக்குரிய மாநிலமாக இருக்கிறது என்று பொருள். அந்த மாநிலத்தில் புதிய நிறுவனத்தை தொடங்கினால் அந்த நிறுவனம் வளரும் என்று பொருள். அத்தகைய மரியாதையை, பெருமையை இன்றைய அரசு பெற்றிருக்கக்கூடிய காரணத்தால் தான், இத்தனை நிறுவனங்கள், இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளார்கள்.

முதலீடு என்பது வெறும் தொழில் சார்ந்தது மட்டுமல்ல, அது வளர்ச்சியை சார்ந்தது. அது நல்லாட்சியின் அடையாளம் ஆகும். அத்தகைய பெயரை ஆட்சிக்கு வந்த ஆறுமாத காலத்தில் பெற்றிருக்கிறோம், அதுதான் முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் கழித்தோ, நான்கு ஆண்டுகள் கழித்தோ பெயர் வாங்குவதை விட ஆறுமாத காலத்தில் பெயர் வாங்குவது தான் மிகமிக முக்கியமானது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை பிறக்கிறது. நமது தாய்த்தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக நிச்சயமாக நாம் ஆக்குவோம் - ஆக்க முடியும், அதுவும் விரைவில் ஆக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு பிறக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்