மக்கள் செலுத்திய வரியை கோயில்களுக்கு வழங்கிய பாண்டிய மன்னன்
2022-01-19@ 12:47:10

சாயல்குடி : சாயல்குடி பகுதி மக்கள் அரசுக்கு செலுத்திய வரியை சிவன் கோயில்களுக்கு பாண்டிய மன்னன் தானமாக வழங்கிய தகவல் தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் அருகே பால்கரையைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி, எம்.ஏ. தமிழ் படித்து வருகிறார். தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுருவின் வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.
இவர் சாயல்குடி அருகிலுள்ள மேலச்செல்வனூரில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் கோகிலா, மனோஜ், டோனிகா, பிரவினா ஆகியோருடன் கள ஆய்வு செய்தார். அப்போது, சங்க கால, இடைக்கால மக்கள் குடியிருப்புகள், சோழர் கால சிவன் கோயில், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம், கூத்தன்கால் என பல வரலாற்றுச் சிறப்புகள் இவ்வூருக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி மாணவி சிவரஞ்சனி கூறியதாவது, மேலச்செல்வனூரில் கடற்கரை பாறைகளால் சோழர் காலத்தில் கி.பி.12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைய சிவன் கோயில் இருந்துள்ளது. அது சேதமடைந்து மண் மூடியதால் அதை அகற்றி விட்டு புதிதாகக் கட்டியுள்ளனர். நந்தி மட்டுமே பழையது. பழைய கோயிலில் இருந்த 4 கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1928ல் பதிவு செய்துள்ளது.
பாண்டிய மன்னரின் 6ம் ஆட்சியாண்டு கல்வெட்டு, ஏழூர் செம்பிநாட்டு ஆப்பனூர் (கடலாடி அருகிலுள்ளது) ஊர் மக்கள் அரசுக்குச் செலுத்திய வரியை, இக்கோயிலுக்கும் மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வர முடையார் கோயிலுக்கும் மன்னர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறது. இது கோனேரின்மை கொண்டான் எனும் அரசாணைக் கல்வெட்டு என்பதால் இதில் மன்னர் பெயர் இல்லை. கோயில்களை பாதுகாக்கவும், தொடர்ந்து வழிபாடுகள் நடைபெறவும் பாண்டிய மன்னர்கள் கொண்ட அக்கறையை இது காட்டுவதாக உள்ளது.
மேலும் திருவாப்பனூரைச் சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு 40 ஆலசெம்பாடி அச்சுக்கு (காசு) நிலம் விற்றதையும், சிலையன் என்பவரும், மேலக்கிடாரத்தைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலில் விளக்கெரிக்க பணமும், கொடையும் வழங்கியுள்ளதையும், கோயில் சிவபிராமணர்க்கும் தேவகன்மிக்கும் தானம் வழங்கியதையும் இங்குள்ள பிற கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. கோயிலின் வடக்கிலும், கண்மாய் கரையிலும், உள்ளேயும் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. அதுபோல் நத்தமேடு பகுதியில் இடைக்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், வட்டச்சில்லு, உடைந்த மான் கொம்புகள் உள்ளன. இதன் மூலம் 2000 ஆண்டுகளாக அதாவது சங்ககாலம் முதல் இங்கு மக்கள் குடியிருப்பு இருந்துள்ளதை அறிய முடிகிறது.
மாவட்டத்திலுள்ள பெரிய கண்மாய்கள், அவை வெட்டப்பட்டபோதே நீர்வரத்துக்காக வைகையிலிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. அதேபோல செல்வனூர் கண்மாய் நீர்வரத்துக்காக கூத்தன் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் 15 பறவைகள் சரணாலயங்களில் 5 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளன. இதில் 593.08 ஹெக்டேர் பரப்பளவில் மாநிலத்திலேயே கண்மாய் பகுதியில் அமைந்த மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் செல்வனூர் தான். இக்கோயில் கேணியினுள் எலுமிச்சம் பழம் இட்டால் அது மாரியூர் சிவன் கோயில் கேணியில் மிதக்கும் என நம்பப்படுகிறது என கூறினார்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்