சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், வேலூர் மாநகராட்சி உள்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
2022-01-18@ 00:31:21

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு வரும் 21ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவலால் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மேயர் பதவிக்கு பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பெண்களுக்கு போட்டியிடும் மாநகராட்சிகளின் பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. இந்தநிலையில், ஜனவரி 31ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில், பதட்டமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிப்பது, வாக்குசாவடிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகள், கொரோனா பரவலை முன்னிட்டு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்தும் நாளை நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளது. இதேபோல், வரும் 21ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மாநகராட்சி தேர்தலில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பெண்கள் மேயர் பதவிக்கு போட்டியிடும் மாநகராட்சிகளின் பட்டியலை தமிழக அரசு நேற்று அரசாணையாக வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிகள் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது)களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆதிதிராவிடர் பொது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆண், பெண் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
அதேபோல, பொதுப் பிரிவு பெண்களுக்கு கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மட்டும் போட்டியிடலாம். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன. அதில் தற்போது ஆதிதிராவிட பெண்கள் (2), ஆதிதிராவிடர்கள் பொது(1), பொதுப் பிரிவு பெண்கள்(9) என 12 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதம் உள்ள மேயர் பதவி திருச்சி, சேலம், திருப்பூர், நெல்லை, ஓசூர், தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய 9 மாநகராட்சிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிகளில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த மாநகராட்சிகளில் எந்தெந்த வார்டுகள் ஆதிதிராவிட பெண்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரியவரும்.
* சென்னையை ஒட்டிய 3 மாநகராட்சியுமே ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு
சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம் மாநகராட்சியும் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னையை ஒட்டியுள்ள மற்றொரு மாநகராட்சியான ஆவடி, ஆதிதிராவிட பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆதிதிராவிட ஆண் அல்லது பெண் போட்டியிடலாம். இதனால் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள 3 மாநகராட்சியுமே ஆதிதிராவிட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Chennai Tambaram Kanchipuram Vellore Corporation 11 mayoral posts woman allotment government சென்னை தாம்பரம் காஞ்சிபுரம் வேலூர் மாநகராட்சி 11 மேயர் பதவிகள் பெண் ஒதுக்கீடு அரசாணைமேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்