SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'அதிமுக ஆட்சி, ஸ்டிக்கர் ஆட்சி' என்று மக்களே சொல்கிறார்கள்: செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு

2022-01-12@ 16:01:19

சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தொடர்பாக, இன்று (12.01.2022) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதிமுக அரசின் திட்டங்களுக்கு, திமுக அரசு தன்னுடைய ஸ்டிக்கர்களை ஒட்டுகிறது என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டிலே இப்படி ஒரு ஸ்டிக்கரை ஒட்டும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தது யார் ஆட்சி என்பது தான். ஒரு ஆட்சியே, ஸ்டிக்கர் ஆட்சி என்று மக்களாலே சொல்லப்பட்ட ஆட்சி, அதிமுக ஆட்சி என்பதை எடப்பாடி பழனிசாமி வசதியாக மறந்து விட்டாரா என்று நான் கேட்க விரும்புகிறேன்.

2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கி, தலைவர் கலைஞர் பெயரை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஆரம்பித்து, தெய்வப்புலவராக இருக்கக்கூடிய திருவள்ளுவர் படத்தையே ஸ்டிக்கர் போட்டு மறைத்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. அது மாத்திரமல்ல கஜா புயல் வந்து போது, சென்னையே பெருவெள்ளத்தில் மூழ்கியபோது, பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் ஒவ்வொரு இடத்திற்குச் சென்று அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது, அப்படி தனியார் செய்யக்கூடிய அந்த நிவாரணப் பொருட்களில்கூட தங்களுடைய அதிமுகவினரை வைத்து, அவற்றில் எல்லாம் அவர்களுடைய பெயரையும், ஸ்டிக்கரையும் ஒட்டிக்கொண்ட ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடக்கூடாது. இன்னும் சொல்லவேண்டுமென்றால், பொங்கலுக்காக கொடுக்கப்பட்ட கரும்பிலேகூட, ஒவ்வொரு கரும்புக் கணுக்களில்கூட ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரப்படுத்திக் கொண்ட ஆட்சிதான் அது.

இன்றைக்கு நம்முடைய முதலமைச்சருடைய ஆட்சியில், பொங்கல் பையாக இருந்தாலும், எந்தப் பரிசாக இருந்தாலும், அதில் முதலமைச்சருடைய ஒரு படம்கூட இல்லாத ஒரு நல்ல சூழ்நிலை உருவாக்கியிருக்கக்கூடிய ஆட்சி, கழக ஆட்சி, நம்முடைய முதலமைச்சருடைய ஆட்சி என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே, அவர்களைப் போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் எல்லாம், அவர்கள் எந்த அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் என்பதற்கு நான் விளக்கங்களை சொல்லியாக வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 2008ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் கொண்டு வந்த மிகப்பெரிய, மகத்தான திட்டம். 1928 கோடி ரூபாய் செலவில் 2008ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ஆம் தேதி கலைஞர் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர், இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய தளபதி, அன்றைக்கு ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனத்துடன் தொடர்ந்து பேசி, அவர் ஜப்பானுக்கு சென்று சீரிய முயற்சிகளை மேற்கொண்டு அவர்களிடமிருந்து நிதியைப் பெற்று, அந்தத் திட்டத்தைத் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இருந்து, அந்தத் திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் நிறைவேற்றி, 95 விழுக்காடு பணிகளை நிறைவேற்றிவிட்டு, ஆட்சிப்பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிய பிறகு, 2013-ஆம் ஆண்டில், 5 சதவீதப் பணியை மட்டும் அவர்கள் பார்த்து, குழாயில் தண்ணீரை மட்டும் அவர்கள் திறந்துவைத்து விட்டு, அதில், இதை ஏதோ அதிமுக செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டதை நாட்டு மக்கள் மறந்துவிட முடியாது.

கோயம்பேட்டில் இருக்கக்கூடிய பேருந்து நிலையம், கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது, சீரும் சிறப்புமாக உருவாக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை, அதிமுக ஆட்சி வந்தவுடன் அதைத் திறந்து வைத்து, தங்கள் பெயரை ஸ்டிக்கரில் போட்டுவிட்டு, கலைஞருடைய கல்வெட்டை எடுத்துவிட்டு, ஏதோ அதிமுக ஆட்சிதான் அதை உருவாக்கியதைப்போல நாடகம் ஆடினார்கள்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம், தலைவர் கலைஞர் உருவாக்கிய கட்டடம். அதில் ஓமந்தூரார் மருத்துவமனை என்று போட்டு, ஏதோ பெரிய மருத்துவமனையை தாங்கள்தான் அங்கே உருவாக்கியதைப்போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது அதிமுக ஆட்சி. இன்றைக்கு மருத்துவமனைகளைப் பற்றி, முன்னாள் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

2011ஆம் ஆண்டில் நமது முதலமைச்சர் அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்து, தமிழ்நாட்டில் 10 அரசு கலைக்கல்லூரிகள் நம்முடைய அரசின் சார்பாக, அதைப்போல, பல்கலைக்கழகங்களின் சார்பாக உறுப்புக் கல்லூரிகளாக அன்றைக்கு அறிவித்தார். அந்த 10 அரசுக் கல்லூரிகளிலும் 2011ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கம் செய்து எல்லா பணிகளையும் முடித்து வைத்தார். ஆனால், அவர்கள் 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த 10 கல்லூரிகளும், ஏதோ அதிமுகவினால் உருவாக்கப்பட்டதைப்போல தங்களை வெளிப்படுத்திக்கொண்டு, தொடர்ந்து அதை அதிமுக கொண்டுவந்ததாக நாடகத்தை ஆடி, அதன் மீது அதிமுக ஸ்டிக்கரை ஒட்டினார்களே, அப்போது, இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்கு அமைச்சராக அங்கே அமர்ந்துகொண்டுதானே அதை பார்த்துக் கொண்டிருந்தார். எனவே, ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய இந்த கலாச்சாரம் என்பது, உங்கள் ஆட்சியில் உங்களாலே உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு திறக்க இருக்கக்கூடிய விருதுநகர் மருத்துவக் கல்லூரியும், 2011ஆம் ஆண்டு கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிதான் என்பதை நான் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனவே, நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, நீங்கள் பெற்ற பிள்ளைகளை நீங்கள் பேணிப் பாதுகாத்திருக்க வேண்டும். நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தீர்களேயொழிய, சோறு வைத்தீர்களா என்றுதான் கேட்க விரும்புகிறேன்.

எனவே, உங்களுடைய திட்டங்களுக்கு, நாங்கள் எங்களுடைய புகழை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒருபோதும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு பெரிய ஆலமரம். ஆனால், அதிமுக என்பது ஒரு காந்தாரி மரமாக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமே உதய சூரியன். எனவே, திமுக, திமுக ஆட்சி, திமுக திட்டங்கள் என்பதெல்லாம் கோடி சூரியன். அதற்கு வெளிச்சம் பிற இடத்திலிருந்து தேவையில்லை. எனவே, திமுக, கோடி சூரிய ஒளிக்குச் சமம். ஆகவே, அவர்களுடைய ஒளி, வேறு சில உதிரி நட்சத்திரங்களுக்குத் தேவைப்படுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், திமுக அரசின் திட்டங்களுக்கும் வேறு எந்த விளம்பர வெளிச்சமும், வேறு வெளிச்சங்களும் எங்களுக்கு தேவையில்லை. எனவே, விதைக்கிற நேரத்தில் வெளியூருக்குச் சென்றுவிட்டு, அறுக்கின்ற நேரத்தில் நாங்கள்தான் இருக்கிறோம் என்று அரிவாளை தூக்கிக் கொண்டுவரக்கூடிய இந்தச் செயலை அதிமுக கைவிடவேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்சனையில் நல்ல சுமுகமான தீர்வு எட்டப்பட்டு, தொழிற்சாலை மீண்டும் 12.1.2022 அன்று தொடங்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். தொழிலாளர்களுக்கு எல்லா விதமான வசதிகளும், அவர்களுக்கான உண்டு உறைவிட இடங்களில் உருவாக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர், தீர்மானமான அறிவுரைகளை ஃபாக்ஸ்கான் தொழில் நிறுவனத்திற்கும், தொழில் துறைக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் வழங்கி, அங்கு தொழிற்சாலையில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் குறிப்பாக, அங்கே பணியாற்றும் பெண்களுக்கு எல்லாவிதமான வசதிகளும், குறிப்பாக பாதுகாப்பான வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தார். தொழிற்சாலை நிர்வாகமும், முதலமைச்சர் அவர்களுடைய நேரடி தலையீட்டையும் அவருடைய அறிவுரையையும் ஏற்று, அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்து, அதற்கான பணிகள் செய்யப்பட்டு, இன்றைக்கு அந்தத் தொழிற்சாலை தொடங்க இருக்கிறது. அதில் பணியாற்றக்கூடிய பெண்களும் இன்றைக்குப் பணிக்குத் திரும்புகிறார்கள் என்று கேள்விப்படும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது எதைக்காட்டுகிறது என்று சொன்னால், முதலமைச்சர் மீது தொழிலாளர்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை, குறிப்பாக, பெண்கள் அவர் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை. நம்முடைய முதலமைச்சர் பெண்களுடைய பாதுகாப்பையும் அவர்களுடைய நலனையும் உறுதி செய்யக்கூடிய முதலமைச்சர். முதலமைச்சர் இதில் நேரடியாகத் தலையிட்டு செய்திருப்பது, அவர்கள் மீது இருக்கக்கூடிய மிகப்பெரிய அக்கறையின் வெளிப்பாடு என்பதை அந்தப் பெண் தொழிலாளர்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். எனவே, முதலமைச்சர் அவர்களுடைய நேரடி தலையீட்டையும், அவர்களுடைய உறுதியையும் ஏற்று, இன்றைக்கு பணிக்கு அவர்கள் திரும்புகிறார்கள். எனவே, அதையொட்டி தொழிற்சாலையும் எந்தவிதமான பிரச்சனையுமின்றி தொடர்ந்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்