SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் விழா ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு அலங்காநல்லூர் ரெடி

2022-01-09@ 15:08:26

அலங்காநல்லூர்: உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் களம் காண 600க்கும் மேற்பட்ட காளைகளும், காளையர்களும் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் ஒரு அடையாளமாகவே கொண்டாடப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக அலங்காநல்லூரில் நடந்து வரும் இந்த வீர விளையாட்டு, இலக்கியங்களில் கூறப்படுவது போல தோள் தினவெடுத்த தமிழக இளைஞர்களின் வீரத்தையும் பறைசாற்றுகிறது. அவனியாபுரத்தில் ஜன.14ல், பாலமேட்டில் ஜன.15ல், அலங்காநல்லூரில் ஜன. 16ம் தேதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அலங்காநல்லூரில் வாடிவாசல் வர்ணம் பூசப்பட்டு, இந்த ஆண்டின் ஜல்லிக்கட்டுக்காக தயாராக உள்ளது. அலங்காநல்லூர் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில் உள்ள 110 கிராமங்களில் 350க்கும் மேற்பட்ட காளைகள், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் களம் காண காத்திருக்கின்றன. தவிர தமிழகம் முழுவதும் இருந்து தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த துடிப்பான காளைகளும் அலங்காநல்லூருக்கு வரவுள்ளன. இலங்கையில் இருந்தும் 3 காளைகள் வருகின்றன.

அங்கு ஒரு மாகாணத்தின் அமைச்சராக உள்ள செந்தில் தொண்டைமான், காளைகளை குளிரூட்டப்பட்ட வாகனத்தில் ஏற்றி அழைத்து வரவுள்ளார். முழுவீச்சில் ஜல்லிக்கட்டு நடந்தால் 500 காளைகள் முதல் 600 காளைகள் வரை பங்கேற்கலாம். கடந்த ஆண்டு 764 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 16 காளைகள் பல்வேறு காரணங்களால் தகுதிநீக்கம் செய்யப்பட்டன.  காலை 8 மணி முதல் 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு மணி நேரம் கூடுதலாக நடத்த கலெக்டர் அனுமதி அளித்தார். இதனால் 689 காளைகள் கடந்த ஆண்டு வாடிவாசலில் இருந்து பாய்ந்தன.  5 நிமிடத்திற்கு ஒரு காளை என்று கணக்கிடுகிறார்கள். ஆனால் சில காளைகள் சுற்றி சுற்றி வந்து ஆட்டம் காட்டும். இதனால் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. ஆண்டுதோறும் களம் காண முடியாமல் 100க்கும் மேற்பட்ட காளைகள் திருப்பி அனுப்பிப்படுகின்றன.

பாரம்பரிய பெருமை உள்ளதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காளைகளின் உரிமையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் காளைகளை அடக்கி முதல் பரிசு பெறும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போல் பிடிபடாத முரட்டுக் காளையின் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் பரிசு பெற்ற வீரருக்கு சிறப்பு பரிசாக ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள காங்கேயம் பசு, கன்றுடன் வழங்கப்பட்டது. நாட்டு மாடு இனம் அழியாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த பரிசு வழங்கப்பட்டது. இவை தவிர தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், டூவீலர்கள், கட்டில்கள், கிரைண்டர்கள், மிக்சிகள் என வீரர்களுக்கு பரிசுகள் வாரி வாரி வழங்கப்படுகின்றன. அலங்காநல்லூரில் காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு சுற்று வட்டார கிராமங்களில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்பணியில் கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் பாலமேடு சுரேஷ்குமார், அலங்காநல்லூர் நவநீதகண்ணன் மற்றும் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாட்டு காளைகளுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. மற்ற காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது.

காளைகளை பரிசோதனை செய்வதுடன் திமில் அளவு, வயது, கொம்பு உயரம், முதுகில் தழும்புகள் ஏதேனும் இருக்கிறதா என்ற கணக்கெடுப்பும் நடக்கிறது. காளைகளின் உரிமையாளர்களும் தங்களது புகைப்படம், ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர். தகுதியுள்ள காளைகளுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி முடிந்ததும் மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து கொள்வார்கள். ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. பின்னர் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றது. உச்ச நீதிமன்றமும் கட்டுப்பாடுகளை விதித்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது. அதை கண்காணிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக கேலரிகள் அமைக்கும் பணி, இன்னும் இரண்டொரு நாட்களில் துவங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. அதே போல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இதேபோல் சேலம் மாவட்டத்தில் கூலமேடு, மஞ்சினி, தம்மம்பட்டி, உலிபுரம், கெங்கவல்லி, கொண்டையாம்பள்ளி, கீரிப்பட்டி, கோபாலபுரம், பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டம்பாளையம், நாகியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் விழாவுக்கு தயாராகி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்