SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றகோரி சாலையில் தடுப்புகளை போட்டு மக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு; ஆவடி அருகே பரபரப்பு

2022-01-03@ 00:02:06

ஆவடி: வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றகோரி சாலையில் தடுப்புகளை போட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆவடி அடுத்த வெள்ளானூர் ஊராட்சி 1வது வார்டில் பாரதி நகர், பிரியதர்ஷினி நகர், நேரு நகர், ஸ்ரீராம் சமாஜ் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர்களில்  வடிகால் வசதி அறவே கிடையாது. மேலும், அப்பகுதியில் சாலைகளும் சரிவர போடப்படாமல் குண்டும், குழியுமாக கிடக்கின்றன. இதனால் சிறு மழை பெய்தால் கூட சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடும்.

இதனால் பாதசாரிகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு செல்கின்றனர். மேலும், வடிகால் வசதி இல்லாததால், ஒவ்வொரு பருவ மழையின் போது தண்ணீர் வீடுகளை சூழ்ந்து தேங்கி நிற்கும். இந்த மழை நீர் வடிவதற்கு பல நாட்கள் ஆகும். இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி  மக்களை தாக்குவதால் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து பாம்புகள், விஷ பூச்சிகள் படையெடுத்து வீடுகளுக்குள் செல்கின்றன. இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்து வந்தனர்.

இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், கடந்த மாதம் பெய்த பருவ மழையின் போதும் தண்ணீர் வீடுகளை சூழ்ந்து நின்றது. இதுகுறித்து வெள்ளானூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இருந்த போதிலும், ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆவடி சுற்றுவட்டார பகுதியில் 23 செ.மீ அளவிற்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இந்த நகர் முழுவதும் வீடுகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதனால் ஆத்திரமடைந்த இந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை ஆவடி - வாணியன்சத்திரம் நெடுஞ்சாலை, வெள்ளானூரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் தடுப்புகளையும் சாலையில் போட்டு வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றன. தகவலறிந்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் மழைநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து, போலீசார் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பிறகு, அரை மணி நேர பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆவடி அருகே வீடுகளை சுற்றி தேங்கிய மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்