SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ்துமஸ் நாளில் ஒன்றிய அரசு நடவடிக்கை: அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் திடீர் முடக்கம்? மம்தாவின் டிவிட்டர் பதிவால் பரபரப்பு

2021-12-28@ 01:25:03

புதுடெல்லி: கிறிஸ்துமஸ் நாளில் அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளை ஒன்றிய அரசு முடக்கியிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழுநோயாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தனது வாழ்நாள் முழுவதும் சமூக சேவை செய்தவர் அன்னை தெரசா. கடந்த 1950ல் தனது சமூக பணிகளுக்காக அவர், மிஷனரிஸ் ஆப் சாரிட்டி என்ற அறக்கட்டளையை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கினார். இந்த அறக்கட்டளை இப்போதும் ஏராளமானவர்களுக்கு சேவை செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்னை தெரசா அறக்கட்டளையின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கிக் கணக்குகளை ஒன்றிய அரசு முடக்கியிருக்கிறது. அதுவும் கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த வேலையை செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் அந்த அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதன் மூலம் பயனடையும் நோயாளிகள் என 22,000 பேர் உணவு, மருந்து கிடைக்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சட்டம் பெரிதுதான், ஆனால் அதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளில் சமரசம் செய்வதை ஏற்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு கட்சித் தலைவர்களும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் நிர்வாகிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. உள்துறை அமைச்சகம் மறுப்பு மம்தாவின் குற்றச்சாட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) பதிவை புதுப்பிப்பதற்கான சில தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அறக்கட்டளையின் விண்ணப்பம் கடந்த 25ம் தேதி நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும், புதுப்பித்தல் விண்ணப்பித்தல் நிலுவையில் உள்ள பிற அமைப்புகள் அனைத்துக்கும் வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே வங்கிக் கணக்குகள் எதையும் முடக்க அரசு உத்தரவிடவில்லை. அறக்கட்டளை தனது ஸ்டேட் பாங்க் வங்கி கணக்கை முடக்குமாறு தாமாக கோரிக்கை அனுப்பி உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

 • same-sex-27

  மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்