SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் பலி செய்யாற்றுப்படுகையில் பாலம் கட்டித்தர வலியுறுத்தி சடலத்துடன் சாலை மறியல்-பெரணமல்லூர் அருகே பரபரப்பு

2021-12-06@ 14:44:36

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர் பலியானதால் செய்யாற்றுப்படுகையில் பாலம் கட்டித்தர வலியுறுத்தி சடலத்துடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியில் கெங்காபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம் பகுதி வழியே செய்யாற்றுப்படுகை செல்கிறது.‌ இவ்வழியே விநாயகபுரம், நரியும்பாடி, மேலானூர், கோணையூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கொழப்பலூர் பகுதிக்கு அன்றாட அத்தியாவசிய தேவைகள் மற்றும் பள்ளி, மாணவ மாணவிகள் மேற்கல்வி பயில வந்து செல்கின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் சென்றால் கொழப்பலூர் பகுதிக்கு வருவதற்கு சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி வந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் இந்த ஆற்றுப்படுகையில் விநாயகபுரம-கொழப்பலூர் பகுதியை இணைக்கும் வகையில் ஆற்று பாலம் கட்டி தரக்கோரி சுமார் 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு அளித்து வருகின்றனர்.‌

இந்நிலையில், தற்போது பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் கொழப்பலூர் பகுதிக்கு வர முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி பழனி(67) என்பவர் கொழப்பலூர் பகுதிக்கு வந்து வேலையை முடித்து வீடு திரும்பினார். அப்போது ஆற்றை கடந்து செல்லும்போது திடீரென ஆற்று சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த பெரணமல்லூர் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர்கள் ஜோதி மற்றும் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் இரவு வரை தேடிபார்த்தும் பழனி கிடைக்க வில்லை.

இந்நிலையில் நேற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விநாயகபுரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரமுள்ள செய்யாறு அணைக்கட்டு அருகே சடலம் ஒதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது பழனி என உறுதி செய்தனர்.  தொடர்ந்து,  சடலத்தை எடுத்து வந்த உறவினர்கள் திடீரென அணைக்கட்டு பகுதி அருகே ஆரணி-வந்தவாசி பிரதான சாலையில் திடீரென சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக ஆற்றுப் பாலம் கட்டி தரவேண்டும் என கோஷமிட்டனர்.  

தகவலறிந்து வந்த பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.

பின்னர் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் உடனடியாக அஙகு வந்து பொதுமக்களிடம் பேசுகையில், நீங்கள் குறிப்பிட்டுள்ள பகுதியில் பாலம் கட்டுவதற்கான திட்டம் அரசிடம் உள்ளதா? என்பதை  மாவட்ட கலெக்டரிடம் பேசி தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

3 குழந்தைகளை பலி வாங்கிய சம்பவம்

விநாயகபுரம்-கொழப்பலூர் பகுதியை இணைக்கும் ஆற்றுப்படுகையில் ஆற்றில் வெள்ளம் செல்லும் போது அப்பகுதி மக்கள் தொலைதூரம் சுற்றி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் சென்றது. அப்போது ஆற்றைக் கடந்த பள்ளிக்குழந்தைகள் மூன்று பேர் அதில் சிக்கி  இறந்தது குறிப்பிடத்தக்கது.

மணல் கொள்ளையர்களால் உருவான பள்ளங்கள்

செய்யாறு ஆற்றுப்படுகையில் மழை வெள்ளம் இல்லாத போது மணல் கொள்ளையர்கள் மணலை சுரண்டி பல இடங்களில் பள்ளத்தாக்குகளை உருவாகியுள்ளனர். தற்போது அதில் மழை வெள்ளம் நிரம்பி செல்வதால் மிகவும் ஆபத்தான ஆற்றுப்படுகையாக கருதப்படுகிறது. ஆனால் இதை உணராத மக்கள் இதனை கடந்து சென்று வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • sri_langa

  மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

 • sydney-snow-27

  மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

 • modistaaa

  ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

 • peru_Clowns Day

  பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

 • yercaussss

  ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்