SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடி, ஜெயக்குமார் மீது தாக்கு சசிகலா தலைமையைத்தான் விரும்புகிறோம்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக ஆடியோ வைரல்

2021-12-04@ 02:47:29

மதுரை: சசிகலா தலைமையைத்தான் விரும்புகிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் ஆடியோ பதிவு, அதிமுகவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ள இவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஓர் உரையாடல் வைரலாகி வருகிறது.  மதுரை வில்லாபுரம் சக்திவேல் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர், செல்லூர் ராஜூவிடம் செல் போனில் பேசுகிறார். இந்த உரையாடல் வருமாறு:

சக்திவேல்: வணக்கம் ராஜூ அண்ணாங்களா...
செல்லூர் ராஜூ: ஆமா தம்பி.
சக்திவேல்: நான் வில்லாபுரம் பராசக்தி நகர் சக்திவேல் அண்ணே. குவைத்தில் இருந்து பேசுகிறேன்.
செல்லூர் ராஜூ: சொல்லுங்க ஐயா... அங்கே இப்போ டைம் என்ன ஐயா?
சக்திவேல்: இங்கு 11 மணி, அங்கு ஒன்றரை மணி இருக்கும். அண்ணணுக்கு ஏற்கனவே மெசேஜ் எல்லாம் பண்ணி இருக்கிறேன். கட்சியில் நீங்க எங்களுக்கு சீனியர், வழிகாட்டி. நம்ம கட்சிக்கான அடையாளம் அம்மாவிற்கு அப்புறம் சின்னம்மாதான் என எல்லோருக்கும் நல்லா தெரியும். அதை நீங்க எல்லாம் வழிமொழிய வேண்டும்.
செல்லூர் ராஜூ: தம்பி சக்தி, நீங்க அங்கே இருப்பதால்தான் சொல்கிறேன். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அது வந்து முறையாக போகணும் தம்பி. இல்லை என்றால் மொத்தமாக இழந்துட்டு போயிடுவோம். அவங்க கை பத்திட்டு போயிடுவாங்க. அதற்காகத்தான் கம்முனு இருக்கோம். எல்லாம் நடந்துகிட்டுத்தான் இருக்கு.
சக்திவேல்: உங்கள் போல சீனியர் இதை விட்டு விடக் கூடாது.
செல்லூர் ராஜூ: விட மாட்டோம். அதெல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு. டக்குனு அந்த பக்கம் எடுத்து செய்ய முடியாது. எல்லா வேலையும் முடிச்சுட்டுத்தான் சொல்ல வேண்டும். அடிச்சு காலி பண்ணிட்டுதான் இத பண்ணனும். எந்த நேரத்தில் செய்யணுமோ செய்யணும்.
சக்திவேல்: காலம் கை மீறி போய் விடக்கூடாது. தேர்தலுக்கு முன்பே விரும்புனீங்க. அந்த ஆளு பழனிசாமி உங்களை மீறி விட்டார். தென் மாவட்டத்தில் சீனியர் நீங்கதாண்ணே. கட்சியை வழி நடத்த ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எல்லாம் யார்ணே? சின்னம்மா யார்ன்னு கேட்க...
செல்லூர் ராஜூ: தலைவரை செருப்பால் அடித்தவர் ெஜயக்குமார்... அப்ப வார்டு செயலாளர் (எந்த சம்பவத்தை சொல்கிறார் என்பது தெரியவில்லை). அது எல்லாம் தெரியும்.. பார்க்காமலா இருக்கிறோம்.
சக்திவேல்: இப்போ பேட்டி கொடுத்துள்ளார். சசிகலா எல்லாம் கட்சிக்குள் வர முடியாது என்று... ஏற்றுக்கொள்ள முடியுமா?
செல்லூர் ராஜூ: நாளைக்கு கூட்டம் போட்டு
இருக்கிறோம். நான் பேசுகிறேன், பேசுகிறேன்.
சக்திவேல்: சந்தோசம் அண்ணே.

இவ்வாறு அந்த ஆடியோ உரையாடல் முடிகிறது. இந்த ஆடியோ பதிவு, அதிமுகவில் தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

‘‘பேசியது நான் இல்லை... யாரோ மிமிக்ரி பண்றாங்க...’’
ஆடியோ குறித்து செல்லூர் ராஜூவிடம் மதுரையில் நிருபர்களிடம் நேற்று கேட்டபோது, ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிலர் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் நான் பேசுவது போல ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள குரல் என்னுடையது அல்ல. யாரோ விஷமத்தனமாக என்னுடைய குரலைப் போன்று மிமிக்ரி செய்து பேசியுள்ளனர். நான் இரவு 10 மணிக்கு மேல் செல்போனை பயன்படுத்துவதே இல்லை.

அந்த ஆடியோ நள்ளிரவு ஒன்றரை மணிக்கு பேசுவதாக வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. என் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் சிலரது நயவஞ்சக வேலையாக இது உள்ளது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து, கட்சியின் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். ஆடியோ தொடர்பாக கட்சியின் தலைமையிடம் அனுமதி பெற்று, சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்’’ என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்