SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலையில் திருப்பம்: அதிமுக விஐபிக்களை காப்பாற்ற வெங்கடாசலம் விபரீத முடிவு?: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலம்: செல்போனை தடயவியல் சோதனைக்கு அனுப்ப திட்டம்

2021-12-04@ 00:03:58

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பயந்தே மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாக போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அதிமுக விஐபிக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை காப்பாற்றும் வகையில் இந்த முடிவுக்கு அவர் வந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.வெங்கடாசலம். 2019ம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இரண்டு ஆண்டு பதவி வகித்த இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி ஓய்வு பெறும் நாளில் வெங்கடாசலத்திற்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத 13.50 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மரம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றினர்.

தமிழகத்தில் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையின் படிஅரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு மட்டுமே செய்யப்பட்டது. அதற்கு உதாரணமாக சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் பல கோடி பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட போதிலும் அவரை கைது ெசய்யவில்லை. அதேநேரம், ஆட்சிமாற்றத்திற்கு பிறகு லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, கடந்த மாதம் 2ம் தேதி வேலூர் பொதுப்பணித்துறை தொழில் நுட்ப கல்விப்பிரிவில் செயற் பொறியாளராக பணிபுரிந்து வந்த ஷோபனா அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் 2.06 கோடி ரொக்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தானும் கைது ெசய்யப்படலாம் என்று வெங்கடாசலம் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது.  அதேநேரம், கடந்த வாரம் சொந்த மாவட்டமாக சேலத்தில் உள்ள தனது பூர்விக கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதிமுக முக்கிய விஐபிக்கள் வெங்கடாசலத்தை நேரில் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. வெங்கடாசலம் சென்னைக்கு வந்த பிறகு தனது மனைவி வசந்தி மற்றும் பிள்ளைகளிடம் கூட சரியாக பேசாமல் இருந்துள்ளார். எந்த கஷ்டம் வந்தாலும் தனது பிள்ளைகளுக்கு போன் செய்து பேசுவது வழக்கம். ஆனால் சொந்த ஊருக்கு சென்று வந்த பிறகு, அவர் தனது பிள்ளைகளிடம் கூட சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

வீட்டின் முதல் மாடிக்கு சென்று அடிக்கடி வாட்ஸ் அப் கால் மூலம் அதிமுக விஐபிக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் வெகு நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்கம், பணம், சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஓரிரு நாளில் விசாரணைக்கு அழைக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.  வெங்கடாசலம் அதிமுக முக்கிய விஐபிக்கள் சிலருக்கு பினாமியாகவும் செயல்பட்டதற்கான சில ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியதாக கூறப்படுகிறது. அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேள்விகள் கேட்டால் அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்றும், அப்படி பதில் அளித்தால் அதிமுக விஐபிக்கள் பலர் சிக்குவார்கள் இதனால் தனது பிள்ளைகளுக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வெங்கடாசலம் கருதியுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் மதிய உணவுக்கூட சாப்பிடாமல் முதல் மாடியில் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அதன் பிறகே தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை முடிவுக்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  அதேநேரம், அனைத்து நெருக்கடியிலும் இருந்து தப்பிக்கவும், தனது பிள்ளைகளை காக்கவும் தற்கொலை தான் ஒரே முடிவு என்று தள்ளப்பட்டு இந்த முடிவுக்கு ெசன்று இருக்கலாம் என அவரது உறவினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தராக இருந்த அவரது சகோதரர் ஜோதிமுருகனிடமும், வெங்கடாசலம் மனைவி வசந்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடாசலம் தற்கொலைக்கு ஏதேனும் அரசியல் நெருக்கடி இருந்ததா? யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெங்கடாசலம் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்த போது அதில் எந்த குறுஞ்செய்திகளும் இல்லை. அவரது அறையில் சோதனை செய்த போதும் தற்கொலைக்கான எந்த கடிதமும் சிக்கவில்லை. இதனால் வெங்கடாசலம் தற்கொலைக்கு முன்பு தனது செல்போனில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டு தற்கொலை முடிவுக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, வெங்கடாசலம் பயன்படுத்திய செல்போனை தடயவியல் துறையின் சோதனைக்கு போலீசார் அனுப்ப முடிவு செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பயந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்