SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவந்து, எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

2021-11-30@ 11:08:29

சென்னை: தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. என்கின்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு 35 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நம் மக்களிடம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை விளைவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்து எச்.ஐ.வி / எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவந்து, அத்துடன் எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம். ‘End Inequalities, End AIDS, End Pandemics’ என்பதேயாகும்.

தமிழ்நாட்டில் இத்தொற்றினைக் கண்டறிய 2,953 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணைகூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன. தொற்றுள்ள பெற்றோரின் கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்றாமல் தடுக்க அனைத்துப் பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம், கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றைச் செயல்படுத்த, தொண்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் போன்ற தன்னலமற்றோரின் உண்மையான ஈடுபாடும் மாநில அரசுடன் இணைந்து ஒத்தாசை புரிகிறது. இதன் காரணமாக, 2010, 2011ஆம் ஆண்டு 0.38 விழுக்காடாக இருந்த தொற்று, இப்போது 0.18 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒதுக்கப்படக்கூடாது என்கிற உயரிய நோக்கில், அத்தொற்றால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய 25 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வைப்பு நிதியிலிருந்து வருகிற வட்டித் தொகையால் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டம் இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாகும். இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பணமின்றி மருத்துவமனைக்குப் பயணம் செய்ய பேருந்து அட்டை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பைத் தளர்த்தி மாத ஓய்வூதியம் தரப்படுகிறது.

நம் தாய்த் திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 9 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை விதைக்கும் விதமாக, தன்னார்வ குருதிக்கொடையை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் போட்டியும், இணையதள வினாடி-வினாப் போட்டிகளும் ‘புதிய இந்தியா @ 75’ என்கிற தலைப்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தொற்று குறித்த விழிப்புணர்வை முழுமையாக மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம். தொற்றுடன் வாழ்பவரை ஒதுக்கி வைக்காமல் உள்ளன்போடு நடத்தி அன்பையும், ஆதரவையும் அவர்களுக்கு அளித்து, நம்மில் ஒருவராக வாழ வைப்போம். ‘எச்.ஐ.வி. உள்ளோரை அன்பால் அரவணைப்போம்; ஆதரவுக் கரம் நீட்டுவோம்’. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

 • turist_world

  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்