SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வ.உ.சிதம்பரனாரின் 85-வது நினைவு நாள்: நாளை அரசு சார்பில் தியாகத் திருநாள் கடைப்பிடிப்பு

2021-11-17@ 11:47:54

சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 85-வது நினைவு நாளையொட்டி, நாளை ராஜாஜி சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

'நம் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதோடு மட்டுமின்றி, தனது சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் இழந்து அந்நியரால் இரட்டை ஆயுள் தண்டனையையும் அனுபவித்து, சிறையிலே செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த ஆண்டான இந்த ஆண்டில் அன்னாரின் 85-வது நினைவு நாளானது, ‘தியாகத் திருநாள்’ ஆகக் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 03.09.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதனடிப்படையில், வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளான நாளை (நவம்பர் 18) காலை 9.30 மணியளவில், சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.

வ.உ.சிதம்பரனாரின் அருமை பெருமைகளையும் தியாகங்களையும் அடுத்து வருகின்ற இளம் தலைமுறையினரும் அறிந்து பயன் அடைகின்ற வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வ.உ.சியின் 150-வது பிறந்த நாள் விழாவானது சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படும் என்று அறிவித்து அந்நாளிலே (05.09.2021) அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்.

அதுமட்டுமின்றி, கடந்த 03.09.2021 அன்று சட்டப்பேரவையில், வ.உ.சிதம்பரனாருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் 14 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அதன்படி, சென்னையிலும் கோவையிலும் உள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைகள், ஓட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த நினைவு இல்லம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஒளி-ஒலிக் காட்சியுடன் புனரமைப்பு, நவீன டிஜிட்டல் முறையில் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் புதிய ஆய்வு இருக்கை, வ.உ.சி எழுதிய அனைத்து நூல்களும் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாகக் குறைந்த விலையில் விற்பனை செய்திட ஏற்பாடு, நெல்லையில் அவர் படித்த பள்ளியில் ரூபாய் ஒரு கோடியில் கலையரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் அமைத்தல், கப்பல் கட்டுமானம் தொடர்பான தொழில்நுட்பம் மறம் போக்குவரத்து ஆகிய துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றும் தமிழருக்கு கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி. விருதுடன் கூடிய 5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

மேலும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்படும் அரசுக் கட்டிடங்களுக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டுதல், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அவர் குறித்த இணையவழிக் கருத்தரங்கம், அவரின் நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் அனைத்தும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடுதல், சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் கண்டு பயன் பெறுகின்ற வகையில் பேருந்து புகைப்படக் கண்காட்சி ஆகிய 14 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

முதல்வரின் முத்தான இந்த 14 அறிவிப்புகளைச் செயல்படுத்துகின்ற வகையில், அரசின் சார்பில் தொடர் நடவடிக்கைகளாகப் பல இனங்களுக்கு உரிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும், பிற இனங்களுக்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

குறிப்பாக “விடுதலைப் போரில் தமிழகம்” என்கின்ற தலைப்பில் சென்னை கோயம்பேடு பேருந்து வளாகத்தில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தக் கண்காட்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினையும், பாராட்டினையும் பெற்றுத் தந்துள்ளது என்றால் அது மிகையில்லை. மேலும், அதே நாளில் தொடங்கி வைக்கப்பட்ட வ.உ.சி. வரலாறு தொடர்பான பேருந்து புகைப்படக் கண்காட்சி தற்பொழுது மாவட்ட வாரியாகப் பயணப்பட்டு வருகிறது.

நம் தாய்த் திருநாட்டின் விடுதலைக்குத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அன்னார் மறைந்த நாளான நவம்பர் 18ஆம் நாளன்று சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் அமைச்சர்கள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்திலும், திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்திலும் அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட இருக்கிறது'.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shooting-russia-school-26

  ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்