SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க இல்லம் தேடி கல்வி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2021-10-28@ 00:44:21

மரக்காணம்: மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. கடந்த மாதம் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. தொடச்சியாக அடுத்த மாதம் 1 முதல் 8ம் வகுப்புகளும் நடத்தப்படவுள்ளது. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்காததால், கற்றல் திறன் மற்றும் இடைவெளியும் ஏற்பட்டது. இந்த குறைபாட்டை போக்க தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கியது.

அந்த நிதியின் கீழ் முதல்கட்டமாக விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்படி மாலையில் ஒரு மணி நேரம் தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முதல்கட்டமாக  கல்வியில் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில், இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்க விழா மரக்காணம் அடுத்த முதலியார்குப்பம் இறையன்பு நகரில் நேற்று நடந்தது.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:  எல்லா திட்டங்களை போல் இதுவும் ஒரு திட்டம் என்று சொல்லிவிட முடியாது. இந்த திட்டம்தான் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் ஒளியேற்றப்போகிறது. இதன்மூலம் நூற்றாண்டு காலத்துக்கு அறிவு வெளிச்சம் பரவ இருக்கிறது. மிகப்பெரிய கல்வி புரட்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை, திண்ணைப்பள்ளி கூடங்கள் வழியாக கொண்டு சேர்த்தது திராவிட இயக்கம்தான். திராவிடம் என்றால் என்னவென்று கேட்கும் கோமாளிகளும், அதைப்பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் திராவிடத்தின் கொள்கை என்பதை மறக்க கூடாது. நீதிக்கட்சி துவங்கிய போது, சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு உணவு அளிக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்தார்கள். இதனை தொடர்ந்து காமராஜர், எம்ஜிஆர், கலைஞர் போன்றோர் அதனை விரிவுபடுத்தி இத்திட்டத்தை செழுமைப்படுத்தினர். கொரோனா தொற்று காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். பள்ளிக்கு சென்று கல்வி கற்றவர்களை வீட்டுக்குள்ளே முடக்கி போட்டது. இது அவர்களது படிப்பை, கற்கும் திறனை ஆர்வத்தை குறைத்தது.

இந்த பாதிப்பை எப்படி குறைப்பது என்பதை ஆராய்ந்து, பள்ளி நேரத்தையும் தாண்டி கூடுதலாக நேரத்தை பயன்படுத்த உருவாக்கப்பட்டதுதான் இந்த திட்டம். உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இடத்தை தேர்வு செய்து, மாலையில் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் தன்னார்வலர்கள் வந்து படிக்க வைப்பார்கள். ஆன்லைன் கல்வி முறை நேரடி கல்வியின் பயனை தரமுடியாது என்பது உண்மை. அதனால்தான் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்க கூடும். இத்திட்டம் மாலை நேரத்தையும் பயனுள்ள பள்ளியாக மாற்றப்போகிறது.

கல்வியைத்தான் நிரந்தரமான செல்வம் என்று சொல்கிறார் திருவள்ளுவர். யாராலும் அழிக்க முடியாத செல்வம் என்றும் கூறுகிறார்.கல்வி அறிவை பயன்படுத்த, பயன்படுத்த தான் செல்வம் அதிகமாகி கொண்டே இருக்கும். அத்தகைய செல்வத்தை அனைத்து குழந்தைகளும் பெற்றாக வேண்டும். அதனால் பள்ளி முதல் பல்கலை வரையில் கல்வியை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு திமுக அரசு செயல்படுகிறது. சமூகநீதி, சுயமரியாதை, மனிதநேயம், சமத்துவம் என்பதோடு மாணவர்கள் வளரவேண்டும். அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்பது திமுகவின் அடிப்படை கொள்கை. இதற்காக பெரும் புரட்சியே நடத்தியிருக்கிறது.

இன்னார்தான் படிக்க வேண்டும்,  இன்னார் படிக்க கூடாது என்ற காலம் இருந்தது. இதனை மாற்றிய இயக்கம்தான் திராவிட இயக்கம். இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, இனத்தின் ஆட்சியாகும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற மகத்தான கொள்கை உடையதுதான் திமுக இயக்கம். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், சமத்துவம் என்பதை நிலைநாட்டவும்தான் இந்த ஆட்சி. அனைத்து சமூக மக்களும் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேறி அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை திராவிட இயக்கத்தை வலுவோடு வழிநடத்தி, இந்த இனத்தின் மானத்தை கட்டியெழுப்பிய பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள்தான்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற திசையை நோக்கி, இந்த நாட்டை வலுப்படுத்தும் ஆட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்காகவும், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக எத்தனையோ திட்டங்களை இந்த ஆட்சி செயல்படுத்தி கொண்டிருக்கிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடாக விரைவில் மாறும். பள்ளிக்கும், இல்லத்துக்குமான இடைவெளி குறையும். இல்லங்களும் பள்ளிகளாகும், பள்ளிகளும் இல்லங்களாகும் என்பதை மாணவ செல்வங்கள் உணர வேண்டும். இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்து  மதிப்பெண் போட்டதில் முதல்வர் நம்பர் 1 என மு.க.ஸ்டாலின் என்று போட்டிருந்தனர்.

என்னை பொறுத்தவரை முதல்வர் நம்பர் ஒன் என்று சொல்வதை விட தமிழ்நாடு நம்பர் 1 என்ற நிலைக்கு வர எல்லோரும் துணை இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மோகன் வரவேற்றார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலம், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை  அமைச்சர் மஸ்தான், ரவிக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன்,  சிவக்குமார், கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பாடநூல் கழக  தலைவர் லியோனி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்