SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாஹல் முதல் ஷமி வரை தொடரும் தாக்குதல் மவுனத்தில் பிசிசிஐ, ஐசிசி

2021-10-28@ 00:29:50

சென்னை: கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து இன,மத வெறி தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றை உடனடியாக கண்டிக்க வேண்டிய பிசிசிஐ, ஐசிசி வாய்மூடி மவுனமாக இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
விளையாட்டு உலகில் கருப்பின வீரர்கள் அதிக அளவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருவது வாடிக்கையாக உள்ளது. அதை பலர் சகித்துக்கொள்ள, சிலர் வெளியில் சொல்லி வருத்தப்படுவதுடன் நிறுத்திக் கொள்வார்கள். இந்திய வீரர்களும் இப்படி இன வெறி தாக்குதலுக்கு ஆளாவது தொடர்கதை. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கூட சிராஜ், பும்ரா ஆகியோர் இனவெறி கிண்டல் கேலிக்கு ஆளாயினா்.

இந்த இனவெறியர்களின் பட்டியலில் ரசிகர்கள், மட்டுமல்ல வீரர்களும் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் புளாய்டு, இனவெறி போலீசாரால் கொல்லப்பட்ட பிறகு ‘இனவெறி எதிர்ப்பு’ தீவிரமானது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு முழங்காலிட்டு, கைகளை உயர்த்தி இன வெறி எதிர்ப்பு சைகை காட்டுவது, உறுமொழி ஏற்பது,  கைகளில் கருப்பு பட்டை அணிவது என பல்வேறு வகைகளில் இனவெறி எதிர்ப்பை ‘பதிவு’ செய்து வருகின்றன. விளையாட்டு சங்கங்களும் இதனை ஊக்குவிக்கின்றன.

கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை தொடர்ந்து இங்கிலாந்து  என, இப்போது டி20 உலக கோப்பையில் எல்லா நாடுகளும் கடைப் பிடிக்கின்றன. ஆனால் இனவெறி குறைந்தபாடில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோற்றதற்கு முகமது ஷமியை மட்டும் குறி வைத்து பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுவும் மதரீதியான அந்த விமர்சனங்களை முன்னாள்  வீரர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். விளையாட்டில் ‘வெற்றியும், தோல்வியும் இயல்பு’ என்ற புரிதல் இனவெறியர்களுக்கு இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் பாக் வீரரை இந்திய கேப்டன் கோஹ்லி கட்டித்தழுவி பாராட்டுகிறார்.

ஆலோசகர் தோனி, பாக் வீரர்களுக்கு ஆலோசனைகள் சொல்கிறார். அந்த நற்செயல்களை நமது நாட்டில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் பலரும் பாராட்டுகிறார்கள். இயல்பாக கடந்துப்போக வேண்டிய ஒரு தோல்வியை ‘ஏதோ போரில் தோற்றது’ போல் பெரிது படுத்துவதை, வீரர்கள் இனவெறிக்கு ஆளாவதை, முதல் ஆளாக கண்டிக்க வேண்டிய பிசிசிஐ கண்டுக் கொள்ளாமல் மவுனமாக இருக்கிறது. இப்படிதான் சில மாதங்களுக்கு முன்பு யஜ்வேந்திர சாஹலை சாதிரீதியாக யுவராஜ் சிங் விமர்சனம் செய்ததை பிசிசிஐ கண்டிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும்(ஐசிசி), இதுப்போன்ற பிரச்னைகளை வழக்கம் போல் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறது. எனவே பிசிசிஐ, ஐசிசியின் அலட்சியப்போக்கு இப்போது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

* ‘காக்’ பேக்
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தென் ஆப்ரிக்க வீரர்கள் முழுங்காலிட்டு இனவெறி எதிர்ப்பு சைகை செய்தனர். அந்த நேரத்தில்  விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் மட்டும் நின்றுக் கொண்டிருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டார்.  

* நிரந்தர தடை
ஆட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போது இனவெறியுடன் வீரர்கள் மீது பொருட்களை எறிவது அவர்களை கேலி செய்வது கால்பந்து விளையாட்டுகளில் அதிகம். இந்நிலையில், ‘இனவெறி கொண்ட ரசிகர்கள், விளையாட்டு அரங்கில் நுழைய நிரந்த தடை விதிக்கப்படும்’ என்று இத்தாலி கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கேப்ரில்லே கிராவினா கடந்த வாரம் எச்சரித்துள்ளார்.

* இங்கிலாந்து முன்னோடி
இங்கிலாந்து கிரிக்கெட்டில் எல்லா சமூகத்தினரும், குறிப்பாக ஆப்பரிக்க, ஆசிய சமூகத்தினருக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை பயிற்சியாளர்களாக நியமிப்பது, இளம் வீரர், வீராங்கனைகளை உருவாக்க பயிற்சி முகாம்களை நடத்துவது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை 2015ம் ஆண்டு முதல் எடுத்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

 • turist_world

  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்