SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருநள்ளாறில் கடைகள் அடைப்பு- மறியல் கூலிப்படையை ஏவி பாமக நிர்வாகியை படுகொலை செய்த ஆட்டோ டிரைவர்: விசாரணையில் திடுக் தகவல்

2021-10-24@ 00:50:50

காரைக்கால்: புதுச்சேரி  மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறை சேர்ந்தவர் தேவமணி (51),  காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர். இவருக்கு மாலா என்ற மனைவியும், ஒரு  மகனும், 2 மகளும் உள்ளனர். நேற்று  முன்தினம் இரவு 10.30 மணியளவில் திருநள்ளாறு தேரடியில் உள்ள தனது கட்சி  அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  அம்பரகத்தூர் மெயின்ரோடு, கால்நடை மருத்துவமனை அருகே 3  பைக்குகளில் வந்த 6க்கும் மேற்பட்டோர், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர  ஆயுதங்களால், தேவமணியை சரமாரி வெட்டிவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதில்  தலையில் படுகாயமடைந்த தேவமணி, நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.  தகவலறிந்து வந்த ஆதரவாளர்கள் அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக  கூறினர்.

தகவலறிந்த எஸ்பிக்கள் வீரவல்லவன், ரகுநாயகம், திருநள்ளாறு  போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தேவமணி படுகொலை தகவலை  கேள்விப்பட்டு பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும்  உறவினர்கள் கட்சி அலுவலகம், மருத்துவமனை, தேவமணி வீடு உள்ளிட்ட இடங்கள்  முன்பு குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் திருநள்ளாறில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்  தேவமணியை விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டும் பகீர் காட்சிகள் பதிவாகியுள்ளது.  அதை வைத்து போலீசார் கொலையாளிகள் சிலரை அடையாளம் கண்டனர். விசாரணையில்,  தேவமணி வீட்டிற்கு எதிரே உள்ள ஒரு இடம் தொடர்பாக அவருக்கும், ஆட்டோ டிரைவர் மணிமாறன் தரப்புக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்விவகாரத்தில் மணிமாறன்  கூலிப்படையை ஏவி தேவமணியை படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிமாறன் உள்பட 6 பேர் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 3 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.

இதனிடையே கொலையாளிகளை  விரைந்து கைது செய்யக்கோரி காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு பாமகவினர்,  தேவமணியின் உறவினர்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து வந்த எஸ்பிக்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் மறியலை  கைவிட்டனர். பின்னர் தேவமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று இறுதிச்சடங்கினை நடத்தினர். பதற்றம் நிலவுவதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

 • robo-student-scl-20

  நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ..!!

 • oil-spill-peru-20

  பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

 • af-earthquake-19

  ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்