இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்: புதிய விடியலுக்காய் பயணிப்போம் இனிய சமுதாயம் காண உறுதியேற்போம்
2021-10-17@ 13:48:45

உலகில் பெரும்புரட்சிகளை எல்லாம் முடக்கிப்போட்ட கொடும் ஆயுதம் ஒன்று உள்ளது. அதற்கு பெயர் பட்டினி’ என்றார் ஒரு ஆங்கிலக்கவிஞர். இந்த பட்டினியை மனிதன் அரவணைக்க காரணமாக இருப்பது வறுமை. வறுமை ஒரு மனிதனின் திறமையை முடக்குகிறது. அவனது சீரிய சிந்தனைகளை சிதைக்கிறது. இலக்குகளை இடித்து நொறுக்குகிறது. இப்படிப்பட்ட வறுமை தொடர்பான விழிப்புணர்வை உலகநாடுகளில் ஏற்படுத்தி, பசிப்பிணியில் இருந்து மக்களை காப்பாற்றுவதை இலக்காக கொண்டு, சர்வதேச வறுமை ஒழிப்புநாள் ஆண்டு தோறும் அக்டோபர் 17ம்தேதி அனுசரிக்கப்படுகிறது. 1992ம் ஆண்டில் வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.சபை.
இதன்படி இன்று (17ம்தேதி) உலகம் முழுவதும் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் பாதிபேரின் ஒருநாள் வருமானம் ₹200க்கும் குறைவாக உள்ளது. இதில் 14சதவீதம் பேரின் ஒருநாள் வருமானம் ₹100க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் நிச்சயமாக வறுமையை வெல்லமுடியாது. இதனால் தான் உலகில் நிகழும் மரணங்கள், பெரும்பாலானவற்றுக்கு வறுமையே அடித்தளமாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். உலகில் 87 கோடி மக்கள் போதிய உணவின்றி தவிப்பதாகவும், 100கோடி மக்கள் சுத்தமான நீரின்றியும், வறுமையால் தவிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் வறுமையின் அளவு 25 சதவீதமாகவும், நகரப்பகுதிகளில் 14 சதவீதமாகவும் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை பொறுத்தவரை 22 சதவீத மக்கள் இன்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பதாக தெரிவித்திருப்பது வேதனைக்குரியது. இளமையில் வறுமை மிகவும் கொடியது என்பது அவ்வை மொழி. உலகளவில் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடியாக உள்ளது என்று ஐ.நா.,வின் அறிக்கை தெரிவித்திருப்பது கொடுமையிலும் கொடுமை.
பிறக்கும் போதே இறக்கும் தளிர்கள், மாடாய் உழைத்தும் மாண்டு போகும் தொழிலாளர்கள், சாதிக்க துடித்தும் சாவின் பிடியில் சிக்கும் இளைஞர்கள் என்று அவலங்கள் அனைத்திற்கும் கரும்புள்ளியாக இருப்பது வறுமை என்றால் அதுமிகையல்ல. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முனைப்பு, ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் உருவானதால் அதுவே ஒப்பற்ற மனிதநேயமாகும். இது ஒருபுறமிருக்க ஒவ்வொரு தனிமனிதனின் முன்னேற்றமே, நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார மேதைகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு பெற வேண்டும். இதற்கான இலக்கோடு அரசுகள் பயணிக்க வேண்டும். அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான அரும்பயணம் இன்றைய அத்தியாவசியங்களில் மிகவும் அவசியமானது. இந்த பயணத்தில் மாச்சர்யங்களை துறந்து, அனைத்து தரப்பினரும் கரம் சேர்க்க வேண்டும். இதனால் மனித குலம் மேம்பாடு அடைவதோடு, வறுமை என்னும் இருள் விலகி வளமை என்னும் ஒளிபிறக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. எனவே, புதிய விடியலுக்காய் பயணித்து நமது தலைமுறைகளுக்கு இனிய சமுதாயம் அமைக்க உறுதி ஏற்க வேண்டியது அரசுகள் மட்டுமன்றி, நம் அனைவருக்குமான தலையாய கடமை.
மேலும் செய்திகள்
ஹர்ஷா டொயோட்டா வேலப்பன்சாவடி மற்றும் பல்லாவரம் ஷோரூமில் ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ அறிமுகம்.!
இயல்பான பிரசவத்திற்கு கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி: அரசு சித்த மருத்துவர் அசத்தல்
ஆங்கில புத்தாண்டு எப்படி வந்தது?
உடல் பருமனும் மகளிர் நலமும்
ஒரு தம்பதியர் கர்ப்பமடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் பொழுது அது தாமதமான கருவுறுதல்
தீபாவளியை தித்திப்பாக்க திண்டுக்கல் ஜிலேபி ரெடி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்