SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி அருகே சிங்கு எல்லையில் பயங்கரம் விவசாயிகள் போராட்ட களத்தில் வாலிபர் கொலை

2021-10-16@ 01:48:58

சண்டிகர்: அரியானா மாநிலம், குண்டலி பகுதியில் விவசாயிகள் போராட்ட களம் அருகே, கை, கால் துண்டிக்கப்பட்டு, உடல் முழுவதும் கத்திக்குத்து காயத்துடன் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபரின் சடலம் தடுப்பு வேலியில் தலைகீழாக தொங்க விடப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 10 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-அரியானா மாநில எல்லையான சிங்கு பகுதியிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள குண்டலி பகுதியில் நேற்று அதிகாலை வாலிபர் ஒருவரின் சடலம், போலீசார் வைக்கும் பேரிகார்டு தடுப்பு வேலியில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. சடலத்தின் இடதுகை , வலது கால் துண்டிக்கப்பட்டிருந்தது. உடல் முழுவதும் கூரான ஆயுதம் கொண்டு குத்திய காயங்கள் இருந்தன. சடலத்தை கைப்பற்றிய குண்டலி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சோனிபட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் பஞ்சாப்பின் தரண் தரண் பகுதியை சேர்ந்த லக்பிர் சிங் (35) என்பது தெரியவந்தது.

இவர் கூலித் தொழிலாளி. இதற்கிடையே, லக்பிர் சிங் கொல்லப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் பரவின. நிஹாங் எனப்படும் சீக்கிய மதத்தை சேர்ந்த குழுவினர், அவர்களின் புனித நூலான குரு கிராந்த் சாஹிப்பை அவமதித்ததாக லக்பிர் சிங்கை கொலை செய்ததாக தகவல்கள் பரவின. சில வீடியோக்களில் நீல நிற உடை அணிந்த சீக்கியர்கள், லக்பிர் சிங்கின் மணிக்கட்டை அறுக்கின்றனர்.  ‘எங்கிருந்து வருகிறாய்’ என அவர்கள் கேட்கின்றனர். அதற்கு லக்பிர் சிங் பஞ்சாபி மொழியில் ஏதோ கூறுகிறார்.

மேலும் மற்றொரு வீடியோவில், நீல நிற உடை அணிந்தவர்கள் சுற்றி நின்று பார்க்க, லக்பிர் சிங் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றி, அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, வீடியோ பரப்பியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். விவசாயிகள் போராட்ட களம் அருகே கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர் சடலம் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவர் சரண்:  வாலிபரின் கை, கால்களை துண்டாக வெட்டி கொலை செய்ததாக நிஹாங் சீக்கிய பிரிவை சேர்ந்த ஒருவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.எங்களுக்கு தொடர்பில்லை
விவசாய சங்கங்கள் அறிவிப்பு
டெல்லி போராட்ட களத்தில் உள்ள 40 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்சா வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் சங்கத்தில் நிஹாங்ஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. எங்களுக்கும் நிஹாங்ஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கொலைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தயாராக இருக்கிறோம்,’ என கூறப்பட்டுள்ளது.

யார் இந்த நிஹாங்?
நிஹாங் அமைப்பினர் நீல நிற உடை அணிந்து கையில் வாள் அல்லது ஈட்டி ஆயுதத்தை எப்போதும் வைத்திருப்பர். இவர்கள் சீக்கிய ராணுவத்தினர் என அழைக்கப்படுகின்றனர். நிஹாங்குகள் கிராமங்களில் மோதல் அல்லது போராட்டக் காலங்களில் மக்களையும், அவர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பது தங்கள் கடமையாக கருதுகிறார்கள். டெல்லியில் வன்முறையாக வெடித்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் பெரிய அளவில் நிஹாங்  சீக்கியர்கள் பங்கேற்றனர். கொல்லப்பட்ட லக்பிர் சிங்கும் நிஹாங் அமைப்பினருடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அரசின் பொறுப்பு
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்த நாடு சட்ட விதிகளின் அடிப்படையில் ஆட்சி செய்யப்படுகிறது. எனவே, கொலை தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு’’ என்றார். பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், ‘‘லக்கிம்பூர் கேரி கொலையை நியாயப்படுத்திய விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் ராகேஷ் திகைத் குண்டலி எல்லை கொலை தொடர்பாக மவுனம் காப்பது ஏன்? விவசாயிகள் போராட்டம் என்ற பின்னணியில் மறைந்துள்ள அராஜகவாதிகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sc-maha-24

  மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

 • jammu-vaccine-24

  கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

 • republic20222

  டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்