SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் திடீர் மண் சரிவு: சாலை துண்டிப்பால் போக்குவரத்து நிறுத்தம்

2021-10-12@ 20:37:29

ஏற்காடு: தொடர் மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் திடீரென பெரிய அளவில் மண் சரிந்து சாலை துண்டிக்கப் பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கலெக்டர் இன்று காலை நேரில் ஆய்வு செய்து சீர் செய்யும் பணியை முடுக்கி விட்டார். சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஏற்காட்டில் பெய்த மழையால், மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் திடீர் நீர்வீழ்ச்சிகள் தோன்றியது. எஸ்டேட்களில் இருந்து பெருக்கெடுத்து வந்த தண்ணீர், அந்த நீர்வீழ்ச்சிகளில் அருவியாக கொட்டியது.

நேற்றைய தினம் இரவில் மீண்டும் கனமழை பெய்தது. மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த மழை, இரவு வரை நீடித்தது. இதனால், ஏற்காடு மலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. இந்த மழையின் காரணமாக இரவு 8.30 மணியளவில், ஏற்காடு மலைப்பாதையில் 2வது கொண்டை ஊசி வளைவிற்கும், 3வது கொண்டை ஊசி வளைவிற்கும் இடைப்பட்ட பகுதியில் பெரிய அளவில் மண் சரிந்தது. சாலை இரண்டாக பிளந்து விழுந்தது. இதனால், உடனடியாக மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வெளியூர்களில் இருந்து ஏற்காட்டிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கீழே இறங்கினர். அவர்களை குப்பனூர் மலைப்பாதை வழியாக சேலத்திற்கு செல்லும்படி திருப்பி விட்டனர். அதேபோல், நேற்றிரவு முதல் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குப்பனூர் வழித்தடத்தில் இயங்கும் பஸ்கள் மட்டும் சென்றன.

அதேபோல், வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும், குப்பனூர் வழியே மேலே மலைக்கு சென்றனர். மண் சரிவு ஏற்பட்ட 3வது கொண்டை ஊசி வளைவு பகுதியை இரவில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணியை காலையில் தொடங்கினர். மண் மூட்டைகளை அடுக்கி, கருங்கற்களை வைத்து தடுப்பு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களை கொண்டு பணியை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே மாவட்ட கலெக்டர் கார்மேகம், இன்று காலை மண் சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

அதேபோல், வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் சிறிய அளவில் மண், பாறைகள் சரிந்து விழுந்திருப்பதையும் ஆய்வு செய்தார். மலைப் பாதை முழுமைக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதேபோல், பெரிய அளவில் மண் சரிந்த 3வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மிக வேகமாக சீரமைப்பு பணியை செய்து, போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டத்தில் 248 மி.மீ., மழை
சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதேபோல், மாவட்டத்தில் ஏற்காடு, வீரகனூர், கெங்கவல்லி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் சூறைகாற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 248 மில்லி மீட்டருக்கு மழை பதிவானது. ஏற்காடு-56.8, வீரகனூர்-38, பெத்தநாயக்கன்பாளையம்-36, கெங்கவல்லி-27, மேட்டூர்-22.6, ஆணைமடுவு-21, தம்மம்பட்டி-20, காடையாம்பட்டி-7.2, ஆத்தூர்-6.2, கரியகோயில்-4, சேலம்-4, இடைப்பாடி-3, ஓமலூர்-2.4 என பதிவாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • tamil-mozhi-25

  தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

 • kolamnbiaaa_11

  எல்லாமே தலைகீழா இருக்கு!... கொலம்பியாவில் தலைகீழான வீட்டிற்குள் சென்று சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்!!

 • pandaaa11

  சீனாவின் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 2021-ல் பிறந்த பாண்டா குட்டிகள்!

 • sc-maha-24

  மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

 • jammu-vaccine-24

  கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்