SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நதிகளை இணைப்போம்

2021-10-10@ 00:15:05

இந்தியாவின் பூகோள அமைப்பு காரணமாக, தென் கோடி மாநிலங்களில் எப்போதுமே தண்ணீர் பற்றாக்குறைதான். தென்னகம் வறட்சி, பஞ்சத்தால் வாட, வடக்கில் மட்டும் எப்போதுமே செழிப்புதான். இதற்கு காரணம் பிரம்மபுத்ரா, கங்கை உள்ளிட்ட ஜீவ நதிகள் வடக்கே ஏராளம். இந்த பிரச்னைக்கு தீர்வு இந்திய நதிகள் இணைப்பு, அதிலும் குறிப்பாக கங்கை-காவிரி இணைப்புதான் என்பதை, 19-ம் நூற்றாண்டிலேயே உறுதிபட தெரிவித்தவர், ஆங்கிலேயர் ஆட்சியில் தலைமை பொறியாளராக இருந்த சர்.ஆர்தர் காட்டன். கிணற்றில் போட்ட கல்லாக இருந்த இந்த திட்டத்தை 1972-ல் மத்திய நீர் பாசனத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல்.ராவ் செயல்படுத்த ஆர்வம் காட்டினார். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா என்ற சந்தேகம் காரணமாக, திட்டம் கிடப்பில் போடப்பட்டது.  

எனவே, இந்திய நதிகள் இணைப்பில் நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என 2002ல் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அப்போது, அதன் திட்டமதிப்பு வெறும் ரூ.5.60 லட்சம் கோடி தேவையாக இருந்தது. ஆனால், 2012ல் மறு மதிப்பீடு செய்தபோது திட்ட செலவு ரூ.11 லட்சம் கோடியாக அதிகரித்தது.  இதன் ஒரு கட்டம்தான் கோதாவரி- காவிரி இணைப்பு. இந்த திட்டம் தமிழகத்தை பொறுத்தவரை வரப்பிரசாதமாகும். காவிரி டெல்டா  பாசனத்துக்கு கர்நாடகா, காவிரியில் திறந்து விடும் தண்ணீரை மட்டுமே நம்பி இருக்காமல் விவசாயம் செய்ய முடியும். இதனால், தமிழகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு இடையிலான கருத்தொற்றுமை ஏற்படுத்துதல், திட்டப்பணிகளை துவங்குதல் என்று எந்த நடவடிக்கையையும் உருப்படியாக எடுக்கவில்லை.

தேர்தல் நேரத்தில் கோதாவரி-காவிரி பற்றி பேசும் பாஜ, அதன் பின்னர் வாய்மூடி மவுனியாக மாறிவிடுவது வாடிக்கை. தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்றது முதல் மு.க.ஸ்டாலின் மக்கள் நல திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா என்ன. பிரதமர் மோடியை சந்தித்தபோது  முதல்வர் வைத்த கோரிக்கைகளுள் ஒன்று, கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதாகும். இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா  அரசுகளுக்கு கடிதம் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசு செய்ய வேண்டிய ஒன்று. அவர்கள் அதை செய்யாததால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தை இத்தோடு விட்டுவிடாமல், தொடர் நடவடிக்கைகளை எடுத்து, விடா முயற்சியின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின், நதிகள் இணைப்பு திட்டத்தையும் சாத்தியமாக்குவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்