SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் விறகு அடுப்பு

2021-10-07@ 00:57:23

மத்திய அரசு, சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. டீசல் விலை  100 ரூபாயை நெருங்கிவிட்டது. பெட்ரோல்,   டீசல் விலையை தொடர்ந்து, சமையல் காஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி வருகிறது.  
நடப்பாண்டில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிப்ரவரி 4ம் தேதி 25 ரூபாய், பிப்ரவரி 15ம்தேதி 50 ரூபாய், அதே  மாதம் மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. பின்னர், மார்ச் மாதம் 1ம் தேதி 25 ரூபாய், ஆகஸ்ட் 17ம் தேதி 25 ரூபாய், செப்டம்பர் 1ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,  தற்போது மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஓராண்டில் 300 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றைய சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.915.50 என்றாகியுள்ளது.

கடந்த 2019ம்  ஆண்டு மே மாதம் சமையல் காஸ் சிலிண்டரின் அடிப்படை விலை ரூ.484.02 ஆக  நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது, இரண்டே ஆண்டில் இருமடங்காக  உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, ஏழை, எளிய, நடுத்தர மக்களை நசுக்கும் வகையில் உள்ளது. சர்வதேச  சந்தையின் விலைக்கேற்ப, நம் நாட்டில் எரிபொருட்களின் விலையை, மாற்றி அமைக்கும் நடைமுறை குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில், சமையல் காஸ் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். இச்சூழ்நிலையில் விலையை அபரிமிதமாக உயர்த்துவது, இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அடுப்பு எரிக்க  விறகு பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் புகையால் சுற்றுச்சூழல்  மாசடைவதோடு, நுரையீரல், சுவாச கோளாறுகளும் ஏற்படும். எனவே, இதிலிருந்து  பெண்களை மீட்டு, ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்குவோம் எனக்கூறி மத்திய அரசு,  சமையல் காஸ் சிலிண்டரை மானிய விலையில் வழங்கியது. ஆனால், அந்த மானியத்தையும்  தற்போது மத்திய அரசு பிடுங்கிக்கொண்டது. ஆம், நாடு முழுவதும் 1.04 கோடி  பேர் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 6.6  லட்சத்துக்கும் மேற்பட்டோர் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.

சமையல்  காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை-நடுத்தர மக்கள் மீண்டும்  விறகு அடுப்புக்கு மாறும் நிலை உருவாகிவிட்டது. பீகார், உத்தரபிரதேசம்,  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள கிராம மக்கள் 98 சதவீதம்  பேர் சமையல் காஸ் அடுப்பை விட்டு விட்டு, விறகு அடுப்புக்கு மாறிவிட்டனர்.  இவர்கள், வறட்டி, சுள்ளிகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இது, சமீபத்திய  ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பக்கம் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா பிரசாரம் ஒளிர்கிறது. இன்னொரு பக்கம் ஏழை மக்களின் விறகு அடுப்பு புகை, விண்ணை முட்டுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்