SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யார் பொறுப்பு

2021-10-06@ 00:06:23

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சர்ச்சை கருத்து விவசாயிகளை கோபப்படுத்தியது. எனவே, அந்த ஊருக்கு வருகை தரும் அவருக்கு எதிர்ப்பை காட்ட விவசாயிகள் முயற்சி செய்தனர். ஆனால் பாதுகாப்பு வாகனத்தை அவர்கள் மீது ஏற்றி ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டது எந்த வகையில் நியாயம். இந்த வாகனத்தில் ஒன்றிய அமைச்சரின் மகன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற மனிதநேயமற்ற செயலால் வெடித்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு எந்த வகையில் ஆறுதல் தரப்போகிறது. துக்கத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் தலைவர்கள் உள்பட யாரையும் உ.பி. அரசு மாநிலத்துக்குள்ளேயே அனுமதிக்க மறுப்பது ஜனநாயக விரோதமாகும். விவசாயிகள் மீது கார் ஏற்றப்படும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டு நியாயம் கேட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

உபியில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு அதிகமாக வன்முறைகள் நடந்துள்ளன. ஆனால், இவற்றை ஆளும் கட்சி அதிகார பலத்தை பயன்படுத்தி பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் குரல்வளையையும் நெரித்துள்ளன. அதே நடைமுறைதான் தற்போதும் அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய பிரச்னைகள் ஒரு மாநிலத்தில் நடந்து வரும் நிலையில், பிரதமரோ, ஒன்றிய உள்துறை அமைச்சரோ அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்த இடைக்கால தடையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, விவசாயிகள் போராட்டம் நீதிமன்ற அவமதிப்பு என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கிறது.

உ.பி.யில் லக்கிம்பூர் என்ற ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தியது சட்டவிரோதமென்றால், விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றிய இணையமைச்சர் கருத்து தெரிவித்ததும் தவறுதான். காரில் எனது மகன் பயணிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். எனது மகன் மீதான குற்றத்தை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் என்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை அரசு பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டை கூறிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது அமைதியை சீர்குலைக்க முயற்சி என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்கின்றனர். இப்படி உ.பி வன்முறை பூமியாக மாறுவதற்கு ஆளும் கட்சியின் அடாவடித்தனமும், பிடிவாதம் மட்டுமே காரணம் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்