SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரும்பணி

2021-10-04@ 00:59:23

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உலகம் முழுவதும் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகிப்போனது கொரோனா. பல கோடி மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கொரோனா எனும் மாய அரக்கனை முற்றிலும் அழிக்கும் வழி தெரியாமல் மனிதகுலம் திணறிக் கொண்டுள்ளது. தடுப்பு மருந்துகள் தேடி அறிவுலகம் தினமும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, இதுவரை கண்டறியப்பட்ட தடுப்பூசியும் எல்லா தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதே நிஜம். உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நம் நாட்டில் கொரோனா முதல் அலையும் இரண்டாம் அலையும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது.

மக்கள் நலனுக்காக இரண்டு வித தடுப்பூசிகள் செலுத்தும் பணியை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக மேற்கொண்டுள்ளன. இரண்டாம் அலையின் வீரியத்தால் அச்சமடைந்த மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். தடுப்பூசி போடும் பணியில் தமிழகம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 6 கோடியே 6 லட்சம் பேர் உள்ளனர். இதில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் அடிப்படையில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் இதுவரை 68 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசியை 20 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4.79 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இரு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 3.5 சதவீதம் பேரே தொற்று மற்றும் பிற இணை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதேபோல் முதல் தவணை மட்டும் தடுப்பூசி செலுத்தியவர்களில் 7.4 சதவீதம் பேரே இறந்துள்ளனர். இதுவரை 42 சதவீத முதியவர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 22 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்தும் தகுதியுடன் உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு சுமார் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் தொற்றின் பரவல் சங்கிலி உடையத் துவங்கியுள்ளது. முன்பு 3.11 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது 17 ஆயிரம் பேரே சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 2 மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 73 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே. மக்கள் நலனில் அக்கறையோடும் அவர்களை தாயுள்ளத்தோடும் காக்க நினைக்கும் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்ந்து 2வது தவணையையும், இதுவரை தடுப்பூசியே போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்வதுமே இந்த சமூகத்திற்கு செய்யும் அரும்பணி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்