SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவானிப்பூர் இடைத்தேர்தல்: மம்தா தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு.! மேற்கு வங்க முதல்வர் பதவி தப்புமா?

2021-09-30@ 14:13:03

கொல்கத்தா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள மேற்குவங்க மாநிலம் பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதி என்பதால் காலை முதலே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்குவங்கத்தில் நடந்த பொதுத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் மம்தா பானர்ஜி, தோல்வியடைந்தார். பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அவர், 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதால், தெற்கு கொல்கத்தாவின் பவானிப்பூர் தொகுதியில் திரிணாமுல் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோபன்தேப் சட்டோபாத்யாய், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக இத்தொகுதியில் களத்தில் நிற்கும் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து, பாஜ வேட்பாளராக 41 வயதான பெண் வக்கீல் பிரியங்கா திப்ரிவால் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தலிலும் போட்டியிட்ட பிரியங்கா திப்ரிவால், அதில் தோல்வியடைந்தார். கடந்த 2015ம் ஆண்டு நகராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக, கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஆளும் திரிணாமுல் கட்சிக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். அதனால் இந்த இடைத்தேர்தலில் அவரையே பாஜ வேட்பாளராக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வக்கீல் ஜீப் பிஸ்வாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 20 சதவீதம் முஸ்லீம் வாக்காளர்களும், 34 சதவீதம் மேற்குவங்க மாநிலத்தை சேராத வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் திரிணாமுல் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்பதால், மம்தா நம்பிக்கையுடன் உள்ளார்.காலையிலேயே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  மதியம் 11 மணி நிலவரப்படி 22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 270 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மம்தா வாக்களிக்க உள்ள மித்ரா உயர்நிலைப் பள்ளி உட்பட 13 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிப்பூர் தொகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் துணை ராணுவத்தை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ‘‘முதல்வராக நான் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் நான் மட்டுமே பாஜகவின் மக்கள் விரோத சட்டங்களான சிஏஏ, என்ஆர்சி மற்றும் பண மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறேன்’’ என்று மம்தா, பாஜவை கடுமையாக தாக்கி, தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்துள்ளார். பவானிப்பூரில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் வாக்குச்சாவடிகளில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்து ஷம்ஷேர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பவானிப்பூர் உள்பட இடைத்தேர்தல் நடைபெறும் இந்த 3 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை அக்.3ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்