SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் போராட்டம்

2021-09-20@ 00:06:55

ம த்தியில் ஆளும் பாஜ அரசு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான, வேளாண் திருத்த சட்டங்களை அமல்படுத்துவதில் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. கடல்சார் மீன்வள மசோதாவை கொண்டு வந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஒன்றிய அரசு ஒழிக்க முயற்சிக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஜனநாயகம் தழைக்க போராடுவோரையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் கைது செய்வதை ஒன்றிய அரசு குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. பொதுமக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜெட் வேகத்தில் பறக்கும் காஸ் சிலிண்டர் விலை ஆகியவற்றை ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை.

விலை உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றோ, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றோ ஒன்றிய அரசிடம் உருப்படியாக எவ்வித திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இன்று தொடங்கி 10 தினங்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் இப்போராட்டங்களை முன்னெடுக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றிய அரசிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராட முடிவு செய்துள்ளன.

அதன் முதற்கட்டமாக இன்று திமுக கூட்டணி கட்சியினர் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துகின்றனர். மாநில அரசுகளின் உரிமைகளை மதிக்காமல், கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் குரல் கொடுக்கின்றன. இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 27ம் தேதி விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திலும் தமிழகம் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து நடக்கும் இப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து குரல் கொடுக்க உள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை அடுத்து வரும் 10 தினங்களும் பல்வேறு போராட்டங்கள் நடக்கும் நிலையில், தமிழகத்திலும் பல கட்ட போராட்டங்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக நடக்கின்றன. பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, விலைவாசி உயர்வு என திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தும் அனைத்து பிரச்னைகளும் மக்கள் பிரச்னைகள் என்பதால் பொதுமக்களின் ஆதரவும் போராட்டத்திற்கு அதிகம் காணப்படும். இருப்பினும் பொது இடங்களில் அதிகம் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், இன்று நடக்கும் கருப்புக்கொடி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை அவரவர் வீடுகளுக்கு முன்பாக நடத்திக்கொள்ள திமுக கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளன. தமிழகம் தொடங்கி நாடு முழுவதும் கிளம்பும் எதிர்ப்புகளை ஒன்றிய அரசு உணர்ந்து செயல்படுவது நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்