SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை பெரியாரின் பிறந்தநாளில் கலைஞர் சிலை முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கிறார்!!

2021-09-16@ 15:35:53

சென்னை :நாளை பெரியாரின் பிறந்தநாளில் கலைஞர் சிலை முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிநாள் உறுதியேற்க உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :

பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியார் அவர்களின் 143-வது பிறந்த நாளினை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (17.9.2021) காலை 10.00 மணியளவில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நாளை காலை தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் சமூக நீதிக்கான சரித்திரச் சான்று.    சமுதாயத்தைச் சுரண்டிய சாதியப் பாகுபாடு, தீண்டாமை ஒழிப்பு,  பெண்ணுரிமை மறுப்பு, சமூக நீதி, பகுத்தறிவு ஆகிய உயரிய கொள்கைகளைத் தன் மூச்சாகக் கொண்டு, சாகும் வரையிலும் போராடிய சாதனைச் சிற்பி தந்தைப் பெரியார் அவர்கள். ‘‘தொண்டு செய்து பழுத்தப் பழம், தூய தாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும், மனக்குகையில் சிறுத்தை எழும்’’ என பாவேந்தர் பாரதிதாசனால் போற்றப்பட்டவர்.  ‘‘என் வாழ்நாளில் நான் கண்டதும் கொண்டதும் அவரே’’ என்றதோடு அவரொரு தனிமனித வரலாறு அல்ல - ஒரு சகாப்தம் - சாகா வரம்பெற்ற சரித்திரம் என பெருமிதம் கொண்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.  

 ‘‘வங்கத்து தாகூர் போல் தாடியுண்டு,  பொங்குற்ற வேங்கைபோல் நிமிருகின்ற பார்வை உண்டு, தென்குன்றம் தோற்றம் உடலில் உண்டு, வெண்சாங்கொத்த கண்களிலே விழி இரண்டும் கருவண்டு, அதில் சாகும் வரை ஒளியுண்டு, எரிமலையாய் சுடுதழலாய் எதிரிகளை நடுங்க வைக்கும் இடியொழியாய் இனஉணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய் இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய், ஏனென்ற கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய் என தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்’‘ என அருந்தமிழில் கவிதைப் படைத்து பெருமைச் சேர்த்தவர் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

சமுதாயத்தின் விடிவெள்ளியாம் சமூகநீதிப் போராளி  தந்தைப் பெரியார் அவர்கள் ஈரோடு மாவட்டம் வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.  செல்வச் செழிப்புமிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாதியப் பாகுபாட்டினை காணச் சகிக்காமல், சமூக நீதித் தேடி சளைக்காமல் போராடி களத்தில் அவர் பட்ட காயங்களும், அவமானங்களும் ஆயிரமாயிரம்.  இளம் வயதில் பல்வேறு அமைப்புகளில் தலைமை ஏற்றவர் காந்தி மீது கொண்ட பற்றின் காரணமாக காங்கிரசில் இணைந்தாலும் தான் கொண்டிருந்த கொள்கை, இலட்சியங்கள் ஈடேறிட வாய்ப்பில்லாது போனதால், அக்கட்சியிலிருந்து வெளியேறி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்படவும்,  படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து, விழிப்புணர்வு பெறமுடியும் என்பதையே தன் இலட்சியமாகக்  கொண்டு, குடியரசு வார இதழ் தொடங்கி, சமுதாயத்தில் நிலவி வரும் வருணாசிரமத்தை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கியவர்.

மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் இவை இரண்டுமே தந்தைப் பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளாகவும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு இவை இரண்டும் அவரது இலக்குகளாகவும் இருந்தன என்றால் அது மிகையில்லை.  அவரின் சுயமரியாதை எனும் சுயசிந்தனையால் தமிழினம் இன்று தலைநிமிர்ந்துள்ளதோடு சிந்தனைத் தெளிவும் பெற்றுள்ளது.  விடாது அவர் இடித்துரைத்த பகுத்தறிவினாலும், விதைக்கப்பட்ட சமூக நீதி கருத்துக்களாலும் தமிழகம் தலை நிமிர்ந்து தன்னிறைவுப் பெற்று நிற்பதோடு மட்டுமின்றி இந்திய அளவிலும் ஏக்கத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையில்லை.
 
தந்தைப் பெரியாரின் கொள்கைகளை இலட்சியங்களை நிறைவேற்றுகின்ற வகையில் பேரறிஞப் பெருந்தகை அண்ணா அவர்கள் 1967-ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்தபோது
‘இந்த ஆட்சியே தந்தைப் பெரியாருக்கு காணிக்கை’ என்று கம்பீரமாக அறிவித்தார். தந்தைப் பெரியார் விரும்பிய சுயமரியாதை திருமணச் சட்டம், கலப்புப் திருமணம் செய்யும் தம்பதியருக்கு தங்கப் பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

அவரின் வழியில் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிலே  இருந்த காலத்தில் அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சரித்திரம் படைத்தார்.  குறிப்பாக, பெண்களுக்கு சம சொத்துரிமைச் சட்டம், பெண்களுக்கு 30 சதவித இடஒதுக்கீடு, பகுத்தறிவு பகலவனாம் ஈ.வே.ராமசாமி அவர்களுக்கு ‘பெரியார்’ என்கின்ற பட்டம் வழங்கிய டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் ஆகியோரின் பெயர் தாங்கிய திட்டங்களாம் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை, கைம்பெண் மறுமண உதவித் தொகை, ஈ.வே.ரா. மணியம்மையார் ஏழை கைம்பெண் மகள் திருமண நிதியுதவி, பெரியார் கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், அனைத்து சாதியினரும் ஒன்றிணைந்து வாழும் சமத்துவபுரம் திட்டம் போன்ற பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி உள்ளார்.

திராவிட இயக்கத்தின் நீட்சியாகவும், பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் பேரறிஞப் பெருந்தகை அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் நல்லாட்சியினை நடத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகநீதியை  நிலைநாட்டும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தை செயல்படுத்தியதோடு, இரண்டு பெண் ஓதுவார்களையும் நியமித்து தந்தை பெரியார் அவர்களின் கனவை நனவாக்கினார்.  தமிழ் இனத்தின் எழுச்சிக்காகவும் ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’, சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளால் ஆண்டுகள் 143 கடந்தும் இன்றும் நம்மோடும், இனி வரும் இளம்தலைமுறையினரோடும் காலம் கடந்து வாழும் தந்தைப் பெரியார் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் விதமாக சட்டமன்றப் பேரவையில், பகுத்தறிவு பகவலன் தந்தைப் பெரியார் அவர்களின் பிறந்த நாளாம்
செப்டம்பர் 17-ஆம் நாளினை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு அன்றையதினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டார்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் அவர் வாழ்ந்த நினைவு இல்லத்திலும், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள நினைவிடத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்