SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துப்பாக்கியை ஆபீசுக்கு கொண்டுவந்து அலப்பறை காட்டிய பதிவாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-09-16@ 00:01:40

‘‘இலைக் கட்சி தொண்டர்களுக்கு முதல்ல வரலாறு சொல்லித் தரணும் போலிருக்கே...’’ என்று சலித்து கொண்டார் பீட்டர் மாமா.
‘‘அண்ணா பிறந்த நாளான நேற்று மாங்கனி டவுனில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க, மாஜி மந்திரி தலைமையில் அதிமுகவினர் ஒன்று திரண்டனர். மாலை அணிவித்துவிட்டு, வாழ்த்து கோஷம் எழுப்பினர். அப்போது ஒரு தொண்டர் ஜிலேபி பாக்சை திறந்தார். அதை பார்த்த மாவட்ட நிர்வாகி ஒருவர்,  ‘ஏம்பா என்ன நாள்னு தெரியாமயே வந்துர்றதா.. இன்னைக்கு அண்ணா பிறந்த நாள் இல்லப்பா...நினைவு நாள்.. யாராவது இனிப்பு தருவார்களா...’ என்று அந்த தொண்டருக்கு பாடம் எடுத்தாராம். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ‘தலைவரே.. இன்னிக்கு பிறந்த நாள் தான்...’ என அவருக்கு சொன்னார்களாம். அதைக்கேட்டு அவர் அசட்டு சிரிப்பு சிரித்து சமாளித்தாராம். கட்சி முன்னோடிகளின் வரலாறு கூட தெரியாமல் அட்வைஸ் பண்ண வேற வந்துவிடுகிறார்கள் என அந்த மாவட்ட நிர்வாகியை எல்லோரும் காய்ச்சித் தள்ளிவிட்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உணவுத்துறை அதிகாரி காசு குவிப்பதில் குறியா இருக்காராமே..’’
‘‘கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, தனது பணியில் சற்று மந்தமாகவே உள்ளார். ஆனால், காசு குவிப்பதில் படு கில்லாடியாக இருக்கிறார். உதாரணமாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது இவரது பணி. ஆனால், கடத்தலை கண்டுகொள்வதில்லை. விதிகளை மீறி விற்பனையாகும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதும் இல்லை. மாநகரில் பல்வேறு பகுதிகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, பெரிய கடைகளுக்கு தொடர்ந்து சப்ளையாகிறது. இதுபற்றியும் கண்டுகொள்வது இல்லை. காரணம், எல்லாமே கரன்சிதான். மேலும், காவல்துறையினர் ஆங்காங்கே பறிமுதல் செய்யும் புகையிலை பொருட்கள், இவரது அலுவலகத்தில்தான் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு சில மாதங்களில் இவை, மலைபோல் குவிந்து விடுகிறது. இவற்றை, இந்த அதிகாரி கோவை கடை வீதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்று, காசாக்கி விடுகிறார். இப்படி புகையிலை பொருட்கள் கடத்தலை கண்டுகொள்ளாத இவர், நடைபாதை உணவகங்கள் மீது தனது பார்வையை திருப்பி உள்ளார். சிறு உணவகங்களை குறி வைக்கும் இவர், பெரிய உணவகங்களில் ஆய்வு செய்வதே இல்லை. காரணம், இதுவும் கரன்சிதான். உணவு பாதுகாப்பு வழிகாட்டி விதிகளின்படி, உணவு தயாரித்தல், சமைத்தல், சேமித்தல், ஊழியர்களின் பணி என எந்த அடிப்படையிலும் ஆய்வு நடப்பதில்லை. முறையாக ஆய்வுசெய்தால் பல ஓட்டல்கள் சிக்கும். ஆனால், இந்த அதிகாரி, வருவாய் இழக்க தயாராக இல்லை. எல்லாம் அந்த தமிழனுக்கே வெளிச்சம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி எம்எல்ஏ பெயரை வச்சி ஆட்டம் போடுகிறாராமே மாஜி மண்டல நிர்வாகி ...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி ஆட்சியில மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பார்களை, அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கு போட்டுக்கிட்டாங்க. இதன்மூலம் பெரும் தொகையை சம்பாதிச்சாங்க. மாங்கனி மாநகரிலும் இதே கதை தான். சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் மர்டர் ஒன்று நடந்துச்சு. உடனடியா போன உளவுத்துறை தீவிரமா விசாரிச்சிருக்காங்க. பார் நடத்த அனுமதியே இல்லாத நேரத்துல, பாரை நடத்தினது யாருன்னு விசாரிச்சப்போ கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டாங்களாம். இலைக்கட்சி மாஜி மண்டலம், தெற்கு தொகுதி எம்எல்ஏ நாங்கதான்னு சொல்லிக்கிட்டு டாஸ்மாக் ஊழியர்களை கைக்குள்ள போட்டுக்கிட்டு இந்த வேலையில ஈடுபட்டிருக்காராம். கிடைத்தவரை லாபமுன்னு அவர்களும் கை கோர்த்துக்கிட்டாங்களாம். இதனால சத்தம் இல்லாம பழைய இடத்திலேயே பார் போலவே நடந்திருக்கு. சைரன் ஒலி எழுப்பிக்கிட்டு ரோந்து போகும் காக்கி வாகனத்தை மடக்கி ஐநூறு, ஆயிரமுன்னு டாஸ்மாக் லேபர்ஸ் வெட்டுவாங்களாம். கேட்காமலே கொடுக்கிறாங்களே... இவங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்களேன்னு போலீசும் போயிடுவாங்களாம். ஆனா மர்டர் நடந்த பிறகுதான் தெரியுது, பார் நடத்த அனுதியே கிடையாதுன்னு. இப்போ மாமூல் வாங்கிட்டு நைசாக நழுவிய பார்ட்டிகளை கூப்பிட்டு அதிகாரிகள் பல்லை நறநறவென கடிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பத்திரப்பதிவுத்துறை விவகாரம் எல்லாம் பயங்கரமா இருக்கே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இன்னொரு பயங்கரத்தையும் சொல்றேன்... சமீபத்தில் 5 மாவட்ட பதிவாளர்களும், 5 உதவி ஐஜிக்களும் மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை. இந்த பணி மாறுதல் செய்யப்பட்ட 5 மாவட்ட பதிவாளர்களில் ஒருவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தனது தந்தை பெயரில் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளார். ஆனால் துப்பாக்கியை வாங்கி தன்னிடமே வைத்துள்ளார். அந்த துப்பாக்கியை பல முறை அலுவலகத்துக்கு எடுத்து வருவாராம். சில உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்பு துப்பாக்கியை டேபிளில் வைப்பாராம். பின்னர் அவர்கள் பார்த்து என்ன என்று கேட்டவுடன், சும்மாதான் என்று இடுப்பில் வைத்துக் கொள்வாராம். மிரட்டுவதற்காகத்தான் அவர் துப்பாக்கியை வைத்திருக்கிறாராம். அந்த துப்பாக்கியை வைத்து அடிக்கடி, வேட்டைக்கு சென்று மான்கள், காட்டு பன்றிகளை வேட்டையாடுவாராம். இவரைப் பற்றி ரகம், ரகமான புகார்கள் புற்றீசல் போல புறப்பட்டு வருகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்