SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கொந்தளித்த பெண் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-09-07@ 00:26:45

‘‘புன்னகை மன்னன் இடத்தை காலி செய்ய சொன்னாராமே சபாநாயகர்....’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் புன்னகை மன்னன் அடைமொழிக்கு சொந்தக்காரர், முன்னாள் முதல்வர், அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றிப்பெற்று எம்பியானார். அவருக்கு சட்டசபை வளாகத்திலேயே அலுவலகம் கேட்டு காங்., அரசிடம் வலியுறுத்தினார். உடனே சட்டசபை வளாகத்தில் ஏற்கனவே ஓட்டல் செயல்பட்டு வந்த இடத்தை அலுவலகமாக அமைத்துக்கொள்ள அனுமதியும் கிடைத்தது. தொடர்ந்து அரசியல் செய்ய  வளாகத்துக்குள்ளே அலுவலகம் கிடைத்ததால் புன்னகை மன்னனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். சட்டசபையின் வெளிப்பக்கத்தில் வாசல் வைத்தவாறு பணிகளையும் துவக்கினார்.
இதற்கிடையே காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. புதிய ஆட்சி பதவியேற்பதற்குள் அலுவலக பணிகளை வேகமாக முடுக்கிவிட்டு, அவசர, அவசரமாக புன்னகை மன்னன் குடியேறினார். புதிய அரசு அமைந்தும், எதிர்கட்சிகள் எல்லாம் புன்னகை மன்னன் அலுவலகத்தில் கூடி ஆலோசிப்பது. முன்னாள் முதல்வர், எம்எல்ஏக்கள் அரசியல் சந்திக்கும் இடமாக மாறிப்போனது. இது பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சட்டமன்ற வளாகம் முழுவதும் சபாநாயகர் கட்டுப்பாட்டில் உள்ள இடம். அதுவும் பாஜக சபாநாயகர் இருக்கும் இடத்திலேயே அரசியல் செய்வதா? என செல்வமானவருக்கு தூபம் போட்டனர். இதில் கடுப்பான அவர், இடத்தை காலி செய்யுமாறு சட்டசபை செயலகத்தின் வழியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளராம். ஒரு மாதமாகியும் பதில் இல்லையாம், எப்போது வேண்டுமானால் இப்பிரச்னை வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலூர் சிறையை ஒரு கடிதாசி கலங்கடிச்சதா பேச்சு ஓடுதே.. என்ன விவகாரம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மத்திய சிறையில பரபரப்புக்கும், பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்ல. சிறையில் பணியாற்றும் காவலர்கள் சிலர் செய்யும் முறைகேடுகள் குறித்து கடிதாசிகளை, சிறைத்துறை தலைவருக்கு அனுப்பி வர்றாங்க. அந்த வகையில் தற்போது, சிறையில் ஜெயிலருக்கு எதிரான கடிதாசி பற்றித்தான் பரபரப்பா பேசப்பட்டு வருது. சிறையில் ஜெயிலராக மோகமானவர் வேலை செய்து வர்றாரு. இவர் சிறை காவலர்களை தரக்குறைவாகவும் கேவலமாகவும் பேசி வருகிறாராம். அதோடு, சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைதான சாமியாரை பார்க்க உறவினர்கள், நண்பர்களிடம்  லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி, ஜெயிலரு பெரிய எல்இடி டிவி  வாங்கியுள்ளாராம்.
இதை மற்ற சிறை காவலர்கள் செய்திருந்தால், சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை பாய்ந்து இருக்கும். சிறை காவலர்களுக்கு ஒரு சட்டம், அதிகாரிக்கு ஒரு சட்டம் தான் வேலூர் சிறையில இருக்கு. மேலும் அவருக்கு சகல வசதியும் செய்து தரும் நிர்மலானவருக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுகிறதாம். அவர் பணிக்கு வராமலேயே ஓடி பார்த்ததாக முறைகேடு செய்து வருகிறாராம். இவரின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அந்த கடிதாசியில் காவலர்களின் மன குமுறலாக தெரிவித்துள்ளார்களாம். இந்த கடிதாசி சிறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாம்’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘ஒன்றிய அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற போராட்டத்தால் ‘ஷாக்’ ஆனாராமே மின்வாரிய பெண் அதிகாரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒன்றிய  அரசின் மின்வாரிய திருத்த மசோதா 2021ஐ தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் தமிழ்நாடு  முழுவதும் ஜூலை 19ம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குமரி மாவட்டத்திலும் நாகர்கோவிலில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுப்பு எடுத்தே  போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் அன்று அவர்கள் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இதற்காக பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பின்னரே அவர்களை கண்காணிப்பு பொறியாளரான பெண் அதிகாரி தனது கேபினில் அனுமதித்துள்ளார். இப்போது 12 நாட்கள் கழித்து அலுவலக பணி நேரத்தில் முன் அனுமதி பெறாமல் மேற்பார்வை பொறியாளர் அறையில் திடீர் என நுழைந்தது ஏன் என்று கூறி தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு செயற்பொறியாளரால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பேர் மட்டுமே அதிகாரியின் கேபினுக்கு சென்றிருந்த நிலையில் வெளியே வராந்தாவில் நின்றிருந்த  தொழிற்சங்கத்தினரையும் ‘‘மேற்பார்வை பொறியாளர் அலுவலக அறைக்குள் கும்பலாக திடீரென அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கேட்டு மற்றொரு நோட்டீஸ் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்றிய அரசை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக விளக்கி சுவரொட்டிகள் மின்வாரிய அலுவலக சுவர்களில் ஒட்டியதற்கும் விளக்கம் கேட்டு மற்றொரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களாம். ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தியதற்கு தமிழக அரசின் மின்வாரிய அதிகாரிக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று  ஊழியர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்