SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரை தலையை நிர்வாகிகள் எச்சரித்ததின் பின்னணி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2021-09-06@ 00:47:37

‘‘நாகர்கோவில் பச்சையான முன்னாள் அமைச்சர் காய்ந்துபோன இலைபோல அப்செட்டில் இருக்கிறாராம்... நீர் வரத்து இல்லையா, நிர்வாகிகள் வரத்து இல்லையா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவில் மாநகர பகுதியில் இலை கட்சி சார்பில் வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருது. இந்த கூட்டத்தை மாவட்ட தலைமை நிர்வாகிகள் கண்டு கொள்வதே இல்லையாம். எல்லோரும் எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம். காரணம், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளர்களில் ஒருவருமான பச்சையானவர் தலைமையில் தான் கூட்டம் நடத்தப்படுகிறதாம். இவரது கூட்டத்தில் பங்கேற்றால் உள்ளாட்சியில் போட்டியிட ‘சீட்’டா கிடைக்கப்போகுது... நாம ராயப்பேட்டையில் பெரிய தலைகளை பார்த்து சீட் வாங்கிடலாம்னு நினைக்கிறாங்களாம். அதுதான் நிர்வாகிகள் வராததற்கு காரணமாம். இதனால, பச்சையானவருக்கு நெருக்கமானவங்க மட்டும் தான் கூட்டத்துக்கு வர்றாங்களாம். மேலும், மாநகராட்சி மேயர் பதவியை கேட்டு இப்போதே இலை கட்சியில் பலரும் துண்டு போட்டு வைத்துள்ளனர். தலைவர் பதவி பெண்களுக்கான ஒதுக்கீடாக இருந்தால் இவரு, ஆண்களுக்கான ஒதுக்கீடாக இருந்தால் அவரு என்ற பரபரப்பு இன்னும் ஓயவில்லையாம். ‘பவர்’ இல்லையென்றால் பயிருக்கு இடையில் வளரும் களைகளான ‘புல்’ கூட மதிக்காது என்று பச்சையானவர் காதுபடவே, அவரது சகாக்கள் பேசிட்டு போறாங்களாம்... இதுதான் அவரது அப்செட்டுக்கு காரணமாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘படுதோல்விக்கு காரணமானவர்களை களையெடுங்க என்று தாமரை தலைவரை மிரட்டும் அளவுக்கு போன நிர்வாகிகளை பார்த்து, மலையானவர் ‘நமட்டு’ சிரிப்பு சிரித்த தகவல் உங்கள் காதுக்கு வந்ததா...’’ என்று கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘தொண்டைமான் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தாமரை கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்குள் உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. இதை தொடர்ந்து, சொந்த கட்சி நிர்வாகிகளே ஒருவர் மீது ஒருவர் தனித்தனியாக புகார்களை மேலிடத்துக்கு தட்டி இருக்காங்களாம். அப்போது, மாநில தலைவராக இருந்த பழனி ஆண்டவர் பெயர் கொண்டவர் உத்தரவின்பேரில் மாநில நிர்வாகிகள்  குழுவினர் தொண்டைமான் மாவட்டத்தில் முகாமிட்டு முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சென்றது. ஆனால், நிர்வாகிகளை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்ததாக விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மாநில தலைவரானதும்.. இதே புகாரை மீண்டும் வாசிக்க தொடங்கி விட்டனர். முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற வேண்டும். இல்லை என்றால் தொண்டைமான் மாவட்டத்தில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை கூண்டோடு மாற்று கட்சிக்கு செல்ல வேண்டியதற்கு என மேலிடத்திற்கு தனித்தனியாக புகார் சென்றதாம். புகார் மீது புது தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதுக்கு பதில் தன் முன்பு குவிந்து இருந்த புகார்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாராம். மேலிடத்தில் இருந்து புகார் குறித்து இதுவரை எந்த ரியாக்க்ஷன் இல்லாததால், மாநில தலைவர் மீது தொண்டைமான் மாவட்ட அடிமட்ட தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் இருக்காங்களாம். ஆளுங்கட்சிக்கு செல்லலாமா அல்லது வேற ஏதாவது மாற்று கட்சிக்கு செல்லலாமா என  நிர்வாகிகளுக்குள் டிஸ்கஷன் நடக்கிறதாம்.. ஒட்டுமொத்தமாக வேறு கட்சிக்கு தாவிடலாம்... தாமரை என்ற கட்சியே புதுக்கோட்டையில் இருந்த சுவடியே தெரியக் கூடாது என்று கொந்தளிப்பில் இருப்பதாக, அவங்க கட்சி தொண்டர்களே பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கரன்சி கொட்டும் கோவை என்ற பெயரை மாற்றி மொட்டை பெட்டிஷன் கோவை மாநகராட்சி என்று மாற்றிவிடலாம் என்று சில குசும்புக்காரர்கள் பேசிக் கொள்கிறார்களே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில், சமீபத்தில், ‘கடவுள்’ பெயர் கொண்ட ஒரு அதிகாரியின் பதவியை, இறக்கம் செய்து, உதவி நிர்வாக பொறியாளராக நியமனம் செய்து, மாநகராட்சி கமிஷனர் உத்தரவு போட்டாராம். எதற்காக அப்படி நடந்தது என்பது ‘தேவ ரகசியம்’ என்கிறார்கள் கீழ்நிலை ஊழியர்கள். இந்த விவகாரத்துக்கு முக்கிய காரணமே, மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் ‘ஞான’மான பெயர்கொண்டவர்தான் என்கிறார்கள். இவர், கோவை தெற்கு மண்டலத்தில், பத்து வருஷமாக ஆட்சி புரிந்தவர், முக்கிய நிர்வாக பொறியாளராக இருந்தவர். விஐபி ஒருவருக்கு விசுவாசமாக இருந்து வந்தார். ரூ.300 கோடிக்கும் மேல், திட்டப்பணிகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இவர், முறைப்படி பதவி உயர்வு பெறாமல், சட்ட விதிகளுக்கு புறம்பாக, உயரதிகாரிகளின் சிபாரிசின் பேரிலேயே பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், 25 வருடகாலமாக கோவையிலேயே பணியாற்றி வருகிறார். ‘ஞான’த்துக்கும், ‘கடவுள்’ பெயர் கொண்ட அதிகாரிக்கும் இடையே அடிக்கடி முட்டல், மோதல் எழுகிறது. இதனால், இருவரும் மாறி, மாறி மொட்டை கடிதம் போட்டு வருகின்றனர். ஆனாலும், இருவரும் கோவையிலேயே சுற்றி சுற்றி வருகின்றனர். காரணம், கரன்சிமழை.
இதேபோல், மேற்கு மண்டலத்தில் கடந்த ஆட்சியில் மூன்றரை வருட காலமாக பணியாற்றிய ஒரு அதிகாரி, மத்திய மண்டலத்துக்கு இடமாறுதலாகி தற்போது, தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கரன்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இப்படி பலர் ரவுண்ட் அடிப்பதால், மற்றவர்கள் பெயரும் கெடுகிறது என சில நியாயமான அதிகாரிகள் புலம்பி தள்ளுகின்றனர். பேசாமல் கோவை மாநகராட்சி என்பதை மொட்டை கடிதாசி கோவை மாநகராட்சின்னு மாற்றிடலாம்னு கீழ்நிலை ஊழியர்கள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்