SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயோத்திதாசரின் 175-வது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

2021-09-03@ 11:41:53

சென்னை : அயோத்திதாசர் அவர்களின் 175-வது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது,

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவள்ளுவர், அவ்வையார், கபிலர், வள்ளலார் வரிசையிலே தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெருமையைப் போற்றக்கூடிய அறிவிப்பு ஒன்றை, 110 விதியின்கீழ் இந்த மாமன்றத்தில் எடுத்து வைப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.  (மேசையைத் தட்டும் ஒலி)
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில், இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது.  ஒன்று, தமிழன்; இன்னொன்று, திராவிடம்.  (மேசையைத் தட்டும் ஒலி)  இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர்தான், அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.

1881 ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 'பூர்வத் தமிழர்' என்று பதியச் சொன்னவர் பண்டிதர் அவர்கள்.  1891 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் 'திராவிட மகாஜன சபை' என்பதாகும்.  1907 ஆம்  ஆண்டு 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழைத் தொடங்கி, அதையே 'தமிழன்' என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர்.  'பூர்வீக சாதிபேதமற்ற திராவிடர்காள்' என்று அழைத்தவர் அவர். அதனால்தான் தமிழன், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக அவர் ஏந்தினார் என்று குறிப்பிட்டேன். அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருகிறது.
எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி எனப் பன்முக ஆற்றலைக் கொண்டவர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள். அவரது தாத்தா திரு. கந்தப்பன் அவர்கள், தன்னிடம் இருந்த திருக்குறள் ஓலைச் சுவடிகளை திரு. எல்லீஸ் அவர்களிடம் கொடுத்து, திருக்குறளை அச்சுப் பதிப்பாக கொண்டுவந்ததை நினைக்கும்போது, குறளுக்கு அவருடைய குடும்பம் ஆற்றிய தொண்டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களே, “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.  (மேசையைத் தட்டும் ஒலி)  அதனால், அவர் சொன்னதைத்  தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  ''இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதியும் மதமுமே தடை'' என்று சொன்ன அயோத்திதாசர், ''மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோ, அவர்தான் மனிதர்' என்று முழங்கினார்.1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய 175-வது ஆண்டு விழாவின் நினைவாகவும், அவரது அறிவை வணங்கும் விதமாகவும், வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் (மேசையைத் தட்டும் ஒலி) என்ற அறிவிப்பை வெளியிடுவதில் இந்த அரசு பெருமைப்படுகிறது.

மகான் புத்தரை 'இரவு பகலற்ற ஒளி' என்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுடைய சிந்தனைகளும், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்று சொல்லி அமைகிறேன்,'எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • republic20222

  டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்