SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் தோற்ற மன்னர் வாரிசு மாயமானதால் மாற்று கட்சிக்கு தாவ முடிவு செய்திருக்கும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-08-29@ 01:47:48

‘‘கரன்சி மழையில் குளிக்கும் காக்கி உயரதிகாரி கழுவுற மீனில் நழுவுற மீனாக மாறிபோய் இருப்பதாக, அவரை பிடிக்க வலை மட்டும் பத்தாதுனு சொல்றாங்களே, ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவில், உயரதிகாரியாக இருக்கிறார். இவர், ஏற்கனவே பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி, கடந்த 2 வ௫டங்களுக்கு முன்பு ஈரோடு ஆயுதப்படைக்கு தூக்கி அடிக்கப்பட்டார். பின்னர், கடந்த ஆட்சி காலத்தில், பிடிக்கவேண்டிய நபர்களை பிடித்து, மீண்டும் கோவைக்கே வந்துவிட்டார். இவர், இலை கட்சியின் தீவிர விசுவாசியாம். இப்போதும் இவர் கரன்சி மழையில் குளித்து தெம்பாக வலம் வருகிறார். கோவையில், பெரியகடைவீதி, காந்திபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் மாதம் தவறாமல் மாமூல் கறந்து விடுகிறாராம். போக்குவரத்து ஒழுங்குபடுத்துகிறேன் என்ற பெயரில்  மாமூல் தந்த கடைக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

பெரும்பாலான கடைகள் முன்பு வாகன நெரிசல் ஏற்பட்டாலும் இவர் கண்டுகொள்வதில்லை. ‘பீக் ஹவர்’ என மேலதிகாரிகளிடம் கதை அளந்து, தப்பித்து விடுகிறார். தனக்கு கீழ் நிலையில் உள்ள ஆய்வாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடமும் மாமூல் பங்கு கேட்டு நச்சரிக்கிறாராம். இவரது காட்டில், மாதம்தோறும் கரன்சி மழை பொழிவதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளாராம். ஆனால், இவருக்கு கீழ்நிலையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கடுப்பில் உள்ளனர். ஐந்தெழுத்து பெயரை கொண்ட இவர், கழுவுற மீனில் நழுவுற மீன் போல், யார் பிடியிலும் சிக்காமல் தப்பித்து வருகிறார். இதுபோன்ற நபர்களுக்கு வலைகள் மட்டும் போதாது... அதற்கு மேல் என்ன இருந்தாலும் பயன்படுத்தி பிடிக்க வேண்டும் என்கிறார்கள் காக்கிகள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் சிறையில் ஸ்டார் ஓட்டல் ரேஞ்சுக்கு சகல வசதிகளும் கிடைக்கிறதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா நடமாட்டத்தை தடுக்க க்யூஆர் குழு ஒன்னு இருக்குது. இந்த குழுவுல நாகமானவர், மன்மதனு உள்ளிட்ட சிலரும் சேர்ந்து, கடந்த வருஷம் சிறையில் இருக்குற ஒரு கைதிக்கு சகல வசதி செஞ்சி கொடுக்குறதா சொல்லியிருக்கு. அதுக்காக கொண வட்டம் ஏரியாவுல இருக்குற ைகதியோட குடும்பத்தினரை சந்திச்சு, ₹50 ஆயிரம் பணம் கொடுங்கன்னு கேட்டு வாங்கியிருக்காங்க. ஆனா, சிறையில் எந்த வசதியும் செஞ்சிகொடுக்கலையாம். இதுதொடர்பாக கைதியோட குடும்பத்தினர், புகார் அளித்தும் இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லையாம்.
அதன் பிறகு வந்த கண்காணிப்பாளரு, பணியில் சிறப்பாக செயல்படும் காவலர்களை பாராட்டியும், கோல்மால் செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வர்றாராம். அதேபோல, கிடப்புல போடப்பட்டிருக்கும் இந்த புகாரையும் விசாரிச்சு, க்யூஆர் குழு காக்கிங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னு சிறை காக்கிங்க எதிர்பார்க்குறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்தில் இலை ஆட்சியில் ஆட்டம்போட்ட தலை காக்கிகள் தப்பிக்க உதவியவர்கள் உதறலில் இருக்கிறாங்க போல..’’ என சொல்லி சிரித்தார் பீட்டர் மாமா.  ‘‘அல்வா மாவட்டத்தில் சமீபகாலமாக அழகு  நிலையங்கள், மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் வேறு மாதிரியான தொழில் கொடி கட்டி  பறக்கிறதாம். இதற்கு கடந்த காலங்களில் இருந்த போலீஸ் அதிகாரிகள் சிலரும்  துணையாம். புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் இதை ஒடுக்குவதில்  அல்வா நகரத்து போலீஸ் கமிஷனர் கறாராக இருக்கிறாராம். கடந்த ஆட்சியில்  புதிது, புதிதாக தோன்றிய மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு அப்போதைய  போலீஸ் அதிகாரிகள் துணை இருந்ததாம். அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு  இதன் மூலம் சத்தமில்லாமல் பல லகரங்கள் மாமூல் வந்ததாம். இந்த விவகாரம்  இப்போதுதான் லீக் ஆகியுள்ளது. இதன் மூலம் அழகு நிலையங்கள் என்ற பெயரில்  பாலியல் தொழில் நடந்து வரும் இடங்களை சிட்டி போலீசார் கண்காணித்து  வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு இடங்களில் நள்ளிரவில் திடீரென  நுழைந்து ரெய்டு நடத்தி அழகிகளை கைது செய்துள்ளனர். குறுகிய காலத்தில்  தோன்றிய இந்த அழகு நிலையங்களுக்கு துணையாக இருந்த போலீஸ் அதிகாரிகளின்  பட்டியலும் தயாராகி வருகிறது. தலைகள் வாரிச் சுருட்டிக் கொண்ட நிலையில்  வாலாக இருந்த போலீசார் நமது தலை உருளப் போகிறதோ என கலக்கத்தில்  ஆழ்ந்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘சினிமாவில் கதை டிஸ்கஷன் நடக்கிறதோ, இல்லையோ. இலை கட்சியில் பல மாவட்டங்களில் தினமும் டிஸ்கஷன் தானாம்... தொண்டைமான் மாவட்டத்து டிஸ்கஷன் இப்போது வெளிசத்துக்கு வந்துள்ளதாமே’’ என விசாரித்தார் பீட்டர் மாமா.  ‘‘தொண்டைமான்  மாவட்டத்தில் நகர் பகுதியில் இலை கட்சி நிர்வாகிகள் மிகுந்த சோகத்தில்  இருக்கிறார்களாம். தேர்தலில் தொண்டைமான் சட்டமன்ற  தொகுதியில் வேட்பாளராக நின்று தோல்வியடைந்த மன்னர் வாரிசு எங்கே  இருக்கிறார் என்றே சொந்த கட்சியில் உள்ளவர்களுக்கே தெரியவில்லையாம். நகரில் நடக்கும் ஒரு நல்லது கெட்டதுக்கு கூட தலை காட்டுவதில்லை. அவருடன்  நெருக்கமாக இருந்த மாஜி நகர்மன்ற தலைவரும் எங்கே சென்றார் என தெரிய  வில்லையாம். இதனால் தேர்தலில் மன்னர் வாரிசை நம்பி அவருக்காக அயராது  உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள் இப்படி எங்களை நடுத்தெருவில் விட்டு விட்டாரே.  என்ன செய்வது என்று கூட தெரியாமல். அவர்களுக்குள் புலம்பி  வருகின்றார்களாம். ஆளும் கட்சியாக இருந்தபோது நகரப்பகுதிக்குள்ளே  கம்பீரமாக சுற்றி திரிந்தவர்கள் ஆட்சி மாறியதும் திடீரென மாயமாகி  விட்டார்களே. விரைவில் நகராட்சி பகுதிக்கு உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது.  இந்த தேர்தலில் எப்படி வேலை பார்ப்பது யாரை வேட்பாளராக நிறுத்துவது கூட  எந்த ஆலோசனையும் இதுவரை பண்ணாமல் உள்ளது இதனால் விரக்தியில் உள்ள மன்னர்  வாரிசு ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு மாறுவது என்று  முடிவெடுத்து இருக்கிறார்களாம். அது எந்த கட்சி என்பது டிஸ்கஷனில்  இருக்காம். சில பேர் ஆளுங்கட்சிகளுக்கு தாவ காய் நகர்த்தி  வருகின்றார்களாம். இதற்காக முக்கிய நிர்வாகிகளிடம் ரகசிய பேச்சும்  நடக்கிறதாம். ஆளுங்கட்சி மாற்று கட்சிக்கு தாவ இலைகட்சி முக்கிய  நிர்வாகிகள், மன்னர் வாரிசு ஆதரவாளர்கள் யார் யார் என இந்த டாப்பிக் தான்  மாவட்டம் முழுவதும் அரசல் புரசலாக ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்