SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் பல ஆயிரம் கோடி முறைகேடு: உண்மையான விவசாயிகளுக்கு தள்ளுபடி வழங்குவது எங்கள் கடமை: அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு நிதியமைச்சர் பதிலடி

2021-08-17@ 00:49:33

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் (கிணத்துக்கடவு தொகுதி) பேசியதாவது:வேளாண்மை துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை போடப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், 18 துறைகளை இணைத்து 34,220 கோடி நிதிதான் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியே பார்க்கும் போது அதிகமாக இருப்பது போல தெரிந்தாலும் உரித்து பார்த்தால் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும், சிறப்பு திட்டங்கள் இருக்கும். வேளாண்மைக்காக தனி கொள்கை உருவாக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வேளாண் பட்ஜெட்டில் புதிய யுக்திகள் இல்லை.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: உரித்து பார்த்தால் சாப்பிடும் அளவுக்கு கொடுத்திருக்கிறோம். உங்கள் ஆட்சியில் கரும்பு மற்றும் நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி கேட்டோம். கொடுக்கவில்லை. இப்போது நாங்கள் உயர்த்தி கொடுத்திருக்கிறோம். நீங்கள் செய்யாததை நாங்கள் செய்திருக்கிறோம். ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் வித்தைகளை செய்து காட்டியுள்ளோம். அதனால் பாராட்டுங்கள். எதிர்க்கட்சிகள் குற்றம்சொல்வதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: அமைச்சர் வித்தையை காட்டி கொண்டிருப்பதாக சொன்னார். ஆனால் உங்களைப் போல் எங்களுக்கு வித்தை காட்ட தெரியாது. (அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது)  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: தேர்தல் அறிக்கையில் நீங்கள் அளித்த வாக்குறுதியை வைத்துதான் எங்கள் உறுப்பினர் பேசிக் கொண்டிக்கிறார். நெல்லுக்கு 4000 கொடுப்பதாக சொன்னீர்கள். அதை விட கொள்முதல் விலை குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதை தான் அவர் சொன்னார்.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். பதவியேற்றே 100 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. பெண் பார்க்கும் முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியுமா?. நிறைய கொடுக்க உள்ளோம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அவை முன்னவர் துரைமுருகன்: இந்த நிதி நிலை அறிக்கை 6 மாதத்துக்கானது தான். இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன. எனவே அவசரப்பட வேண்டாம். சொன்னதைச் செய்வது திமுக அரசு தான்.  

தாமோதரன்: பயிர்க் கடன் தள்ளுபடி செலவை அரசு தாங்கித் தான் ஆக வேண்டும். பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.  நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்களை எடுத்து பார்த்தால் பல வகையில் பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. அதேபோல், பயிர் காப்பீடு திட்டத்திற்கு முறையாக பணம்  கட்டப்படுகிறது. ஆனால், காப்பீடு தொகை பெற விண்ணப்பிக்கும் போது, சரியாக தொகை வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக, காப்பீடு நிறுவனங்களுடன் பேசியுள்ளோம். தாமோதரன்: தென்னை வெல்லத்தையும் அரசே கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். நீராபானத்தை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலம் கண்டுபிடித்து அதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்